ரஜினிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர் அன்றைய துக்ளக் ஆசிரியரான சோ.
அவர் ரஜினியிடம் மனம் விட்டுப் பேசியவர்களில் ஒருவர்.
ரஜினியின் அரசியல் உணர்வு மற்றும் வருகை பற்றி அவர் முன்பே கணித்தது என்ன – என்பதைப் பார்க்கலாமா?
சோ – அவருடைய இறுதிக்காலத்தில் சொல்லி – ’மணா’வால் தொகுத்து எழுதப்பட்டுத் தொடர்ந்து 76 வாரங்கள் பிரபல வார இதழில் வெளியாகி, புத்தகமாகவும் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற “ஒசாம அசா” நூலிலிருந்து ஒரு பகுதி உங்களுக்காக:
“ரஜினியைப் பொறுத்தவரை எப்போதுமே அவருக்கு அரசியல் நிகழ்வுகளிலும், போக்குகளிலும் ஈடுபாடு உண்டு.
அவரும், நானும் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கும்போது, செட்டிலேயே அரசியலைப் பற்றிப் பேசுவார்.
தமிழகத்தில் உள்ள தலைவர்கள் மட்டுமல்ல, அகில இந்தியத் தலைவர்களையும் அவருக்கு நன்றாகத் தெரியும். பல மாநிலங்களில் உள்ள அரசியல் நிலைமைகளை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பார்.
உ.பி.யில், பீஹாரில், காஷ்மீரில் உள்ள நிலைமைகளை எல்லாம் துல்லியமாகச் சொல்வார். ஆனால் மற்றவர்களிடம் அதைத் தெரிந்த மாதிரி அவர் காட்டிக் கொள்வதில்லை. நாமாக அவரிடம் தோண்டித் துருவிக் கேட்டால் அதைப் பற்றிப் பேசுவார்.
அந்த அளவுக்குப் பத்திரிகைகளையும், புத்தகங்களையும் வாசிக்கிறார். ஆனால் அந்த அறிவை அவர் பிரகடனப் படுத்திக் கொள்வதில்லை.
முன்பு தமிழ்நாட்டில் தி.மு.க.வும், த.மா.காவும் இணைவதற்கு ரஜினி சில முயற்சிகளைச் செய்தார் என்றால் அதற்கு அவருடைய அரசியல் உணர்வும், ஈடுபாடும் தான் காரணம். மூப்பனார் மீது அவருக்கு இருந்த மதிப்பு காரணமாக அன்றைக்கு அதைச் செய்தார்.
ரஜினியிடம் எப்போதுமே ஒரு குணம் உண்டு. யாருக்கும் பயந்து ஒரு காரியத்தை அவர் செய்வதில்லை. யாருக்கும் பயந்து ஒரு காரியத்தைச் செய்யாமலும் இருப்பதில்லை. தன்னுடைய மனதுக்கு அந்த நேரத்தில் எது சரியென்று படுகிறதோ, அந்த உள்ளுணர்வுக்கு மதிப்புக் கொடுத்து நடக்கிறவர் அவர். அதன் அடிப்படையில் தான் அவர் சில முடிவுகளை எடுக்கிறார்.
ஒருமுறை நரேந்திர மோடி ரஜினியை சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தபோதுகூட, அந்தச் சந்திப்புக்கு நான் தான் காரணம் என்று சில பத்திரிகைகளில் சொல்லப்பட்டது.
இதெல்லாம் சுத்த பேத்தல். மோடி அவருடைய வீட்டுக்கு வரப்போவதைப் பற்றி ரஜினி தான் என்னிடம் சொன்னார். சொன்னதும் நான் “சந்தோஷம் சார்” என்று சொல்லி என்னுடைய அபிப்பிராயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவ்வளவு தான்.
மோடிக்கு ரஜினியை நன்றாகத் தெரியும். ரஜினிக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதே மோடி அவரைச் சந்தித்திருக்கிறார். இருவருக்கும் இடையே பரஸ்பரம் மரியாதையும், அன்பும் உண்டு. அதனால் மோடி ரஜினியைச் சந்திக்க விரும்பியிருக்கிறார். அதனால் சந்திப்பு நடந்திருக்கிறது. ரஜினி திட்டமிட்டு அந்தச் சந்திப்பு நடக்கவில்லை.
ரஜினி வெளிப்படையாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவில்லை? அல்லது எந்த ஒரு அரசியல் கட்சியிலும் ஏன் சேரவில்லை? அல்லது கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை? – என்று பல கேள்விகள் அவரைப் பற்றித் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. இதற்கெல்லாம் சரியான காரணங்களை அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார் என்று நான் நினைத்துக் கொள்ள முடியாது.
எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்.
அவரைப் பொறுத்தவரை – அவருடைய மனதுக்குள் என்ன அபிப்பிராயம் இருக்கக்கூடும் என்றால், தான் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்தால், அதனுடைய பிரதிநிதிகள் நாடு முழுக்க ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்.
அவர்களில் யாராவது ஒருவர் தப்புச் செய்து விடலாம். தன்னுடைய பெயரைச் சொல்லி, யாராவது தப்பு செய்து அதனால் பொதுமக்களுக்குச் சங்கடங்கள் ஏற்படலாம். யாராவது ‘மிஸ் யூஸ்’ பண்ண வாய்ப்புகள் உருவாகலாம்.
இப்படித் தன்னுடைய பெயரைப் பயன்படுத்திச் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டால், தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. இப்படிப்பட்ட கெடுதல் வரக்கூடிய ஒன்றில் இறங்க வேண்டுமா? தன்னால் பொது மக்கள் யாருக்கும் எந்தக் கெடுதலும் ஏற்படக்கூடாது. இது தான் அவருடைய எண்ணம் என்பது என் எண்ணம்.
இப்போது ரஜினிக்கு வந்திருக்கிற இதே கருத்து, முன்பு எம்.ஜி.ஆர் அரசியல் கட்சியைத் துவக்கியபோது அவருக்கும் இருந்திருக்கிறது.
இது பற்றி அவர் என்னிடம் பேசியிருக்கிறார். தன்னுடைய பெயரைச் சொல்லி, தன்னுடன் இருப்பவர்கள் யாராவது சில பண்ணி விடுகிறார்கள். அதனால் தனக்குச் சிரமமாகிப் போய் விடுகிறது என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
அதே எண்ணம் ரஜினிக்கும் இருக்கிறது.
தன்னுடைய பெயர் யாரும் கெடுதல் செய்வதற்கோ, கொள்ளை அடிப்பதற்கோ, நல்ல காரியத்தைத் தடுப்பதற்கோ பயன்பட்டுவிடக்கூடாது என்கிற கவலை ரஜினியின் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகத் தான் அவர் வெளிப்படையான அரசியலுக்கு வரவில்லை என்பது என்னுடைய அபிப்பிராயம்.”
’ஒசாம அசா’ என்கிற இந்த நூலின் முதல் பதிப்பு வெளிவந்திருப்பது 2016 ஆம் ஆண்டில்.