வலிமையான அதிகார பலம்; ஆயுதங்களுடன் எதையும் செய்யக் கூடிய சர்வதேச வீம்பு; இவற்றை எதிர்த்து விளைவைப் பற்றிய கவலை இல்லாமல் மனதில் தீப்பிடித்த மாதிரியான வீரத்துடன் கலகக் குரல் எழுப்ப முடியுமா?
வாளேந்திய படி மிடுக்குடன் கருங்கல் நிழலாக நிற்கிறது கட்டபொம்மன் சிலை. கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி போகிற சாலையில் கயத்தாறில் சற்று வெளிறிய உயரமான பீடம். அதன்மேல் கேடயத்தை ஊடுருவிய படி இரு வாள்கள்.
அதற்குமேல் வெளியை வெறித்த பார்வையோடு கட்டபொம்மனின் சிலை இருக்கும் இடம் தான் – தூக்குக் கயிறு அழுத்தி மூச்சு அவிழ்ந்து அவன் சடலமாகப்பட்ட இடம்.
1799, செப்டம்பர். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைச் சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. “வலுவான பீரங்கிகளுக்கு முன் மண் கோட்டை தாங்குமா?” யோசித்து சிலருடன் தப்பிக்கிறான் கட்டபொம்மன்.
கோட்டை தரை மட்டமாகிறது; மீண்டும் அந்தப் பகுதி செழிக்காமல் இருக்க உப்பையும், ஆமணக்கையும் தூவுகிகிறார்கள். கட்டபொம்மனைத் தேடுகிறார்கள். தண்டோரா போடுகிறார்கள்.
ஒரு மாதத்திற்கு புதுக்கோட்டைக்கு அருகே கானாம்பூர் காட்டில் மறைந்திருந்த கட்டபொம்மன் காட்டிக் கொடுக்கப்பட்டு பிடிபடுகிறான்.
பிடிபட்டதும் தன்னுடைய உயிரை விட முயற்சி செய்கிறான். தடுத்து விடுகிறார்கள். மதுரை வழியாகக் கயத்தாறுக்குக் கொண்டுவந்து அங்கிருந்த கட்டிடத்தில் சிறை வைக்கிறார்கள்.
அந்தக் கட்டடம் இப்போதும் பாழடைந்த அடையாளமாக இருக்கிறது. அக்டோபர் 16 ஆம் தேதி, கயத்தாறு வெட்டவெளியில் விசாரணை. பல பாளையக்காரர்கள் கூடியிருக்கிறார்கள். சுற்றி அடர்த்தியான கூட்டம்.
“இதில் வாதாட என்ன இருக்கிறது? இதுதான் என் தலைவிதி, என்னை என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள்” – விரக்தியான பதில் கட்டபொம்மனிடமிருந்து.
மேஜர் பானர்மென் மதியத்திற்குப் பிறகு தூக்குப் போடுகிற தீர்ப்பை அறிவிக்கிறார். கட்டைப் புளியமரம். மேலே சுருக்குக் கயிறு.
சிறு ஏணிப்படி. சுற்றி இருந்த பாளையக்காரர்களை வெறித்தபடியே தூக்கிலிடப்படும் இடம் நோக்கி நகர்கிறான் கட்டபொம்மன்.
ஒருவித துக்கம் ததும்புகிறது முகத்தில். தன்னுடைய ஊமைச் சகோதரனுக்காக வருத்தப்படுகிறான். “கோட்டையைப் பாதுகாப்பதிலேயே நான் இறந்திருக்கக் கூடாதா?” ஆதங்கப் படுகிறான்.
கயிற்றை மாட்டுகிறார்கள். இறுக்கியதும் ஏணிப்படியை உதைக்கிறான். அசைவு நின்று இரண்டு மணி நேரம் அப்படியே மரத்தில் தொங்குகிறது உடல்.
சிறையிலிருந்த அவனது தம்பி ஊமைத்துரையை அழைத்து வந்து அங்கங்கேயே கட்டபொம்மனின் உடலைத் தகனம் செய்கிறார்கள். அப்போது கட்டபொம்மனின் வயது 39. (ஆதாரம்: கட்டபொம்மனும், கலெக்டர் ஜான்சனும் – செ.திவான்).
தூக்கில் போடப்பட்டு இருந்த இடத்தைப் பொதுமக்கள் கடக்கும்போது, நினைவாக ஒரு கல்லை வைப்பது வழக்கமாகி அந்த இடத்தில் பெரும் கற்குவியல் மலை மாதிரிக் கிடந்தது.
கட்டபொம்மனின் வீரம் செறிந்த வரலாறு கதையாகச் சொல்லப்பட்டது. கூத்தாக நடிக்கப்பட்டது. திருச்சி அருகே ‘கம்பளத்தான் கூத்து’ என்கிற பெயரில் கட்டபொம்மன் நாடகம் நடந்தது.
முடிந்ததும் தண்டலுக்கு வருவார்கள் கலைஞர்கள். வந்த ஒருவரைப் பிடித்து கூத்தில் நடக்க வாய்ப்பு கேட்டான் 8 வயதுச் சிறுவன். ஒரு வழியாக வாய்ப்புக் கிடைத்தது.
கட்டபொம்மனை எதிர்க்கும் வெள்ளைச் சிப்பாய் வேஷம். அப்படி கட்டபொம்மன் கூத்தின் மூலம் கலை உலகிற்கு வந்த கலைஞன் சிவாஜி கணேசன்.
அந்தப் பழைய நினைவிலிருந்து மீளாமல் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற சினிமாவாக எடுக்கப்பட்ட போதும் ஈடுபாட்டுடன் நடித்தார். 1960 இல் வந்த படம், 26 வாரங்கள் ஓடியது.
மத்திய அரசின் சான்றிதழ் கிடைத்தது. 1960-ல் எகிப்தில் கெய்ரோவில் நடந்த திரைப்பட விழாவில் ‘மிகச் சிறந்த நடிகராக’ அறிவிக்கப்பட்டார்.
“கடுங்குளிரில் நான் போட்டிருந்த உடை வேர்வையால் நனைந்தது. உணர்வு வயப்பட்டதால் நடக்க முடியாமல் நடந்து மேடைக்குச் சென்றேன்” என்று பரவசத்துடன் அப்போது சொன்னார் சிவாஜி.
கூத்து வழியாகத் தன் வாழ்வின் திசை மாற்றிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை அவர் விலைக்கு வாங்கினார். வரைபடம் தயாரித்து சிலையுடன் 1970 ஜூலை 12-ம் தேதி நினைவிடத் திறப்பு விழா.
சஞ்சீவ ரெட்டி தலைமையில் திறந்து வைத்தவர் காமராஜர்.
ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்ரி என்று பலர் கலந்துகொண்ட அந்த நினைவிடத் திறப்பு விழா திருவிழாக் கூட்டத்தோடு நடந்தது.
வீரத்திற்கு இன்னொரு கலைஞனின் எளிய அஞ்சலி.
200 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து, மூச்சறுக்கப்பட்ட குரல்.
மவுனமாய் உறைந்திருக்க, காலம் கடந்தும் கம்பீரம் குலையாமல் நிற்கிறது கட்டபொம்மனின் சிலை.
சிலையிலும் உதிர்ந்து போகவில்லை வீரம்.
– ‘மணா’வின் ‘தமிழகத் தடங்கள்’ நூலிலிருந்து…