சுனாமியை போன்று தாக்கும் கொரோனா!

சமீபகாலமாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பின் அளவு 10 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகி வந்த நிலையில், புதிய வகையான ஒமிக்ரான் பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது.

இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒமிக்ரான் பரவல் குறித்து விளக்கமளித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “கொரோனா மற்றும் புதிய வகை வைரசான ஒமிக்ரான் பரவல் உலகெங்கிலும் வேகமாக பரவி வருகிறது.

ஒமிக்ரான் வைரசுடன், டெல்டா வைரசால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சுனாமி அலை போன்று அதனுடைய திறனுக்கு அதிகமாக வேகமாக பரவி வருகிறது. டெல்டாவும், ஒமிக்ரானும் ஒன்றாக பரவுவதால் உலக நாடுகளின் சுகாதார கட்டமைப்புகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படும்.

சுகாதாரப் பணியாளர்களும் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாசிடிவ் நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்து வருவதால், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் ஒரு நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் தற்போது பரவும் நோய்த்தொற்றால் இறக்கும் அபாயம் ஏற்படும்.

2022ம் ஆண்டில் தொற்றுநோயின் தீவிரம் கட்டுப்படுத்த வேண்டுமானால் ஒவ்வொரு நாட்டிலும் அதன் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட வேண்டும்.

அடுத்தாண்டின் நடுப்பகுதியில் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்” என்றார்.

Comments (0)
Add Comment