சத்யஜித் ராய் சிறுவனாக இருந்த போது ராயின் தாய் அவரை தாகூரிடம் அழைத்துச் சென்றார். தாகூரின் கையெழுத்து கேட்டார் ராய். கையெழுத்து வாங்கும் நோட்டை மேசை மேல் வைத்து விட்டு ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார் ரவீந்திரர்.
ஒரு வாரம் கழித்து ராய் போனபோது நோட்டு புத்தகத்தில் இரு வரிகளை எழுதி வைத்திருந்தார் கவிஞர். அதை ராயிடம் கொடுத்து விட்டு தாகூர் சொன்னார்:
“இது உனக்கு இப்போது புரியாது. ஆனால் வளர வளர இதை எடுத்து படித்துக் கொண்டே வா. எப்போது புரிகிறதோ அப்போது நீ வளர்ந்து விட்டாய் என்று தெரிந்து கொள்.”
அந்த கவிதை வரிகள் இவைதான்:
“நிறைய பணம் செலவழித்து உலகம் முழுவதும் சுற்றி வந்தேன்.. ஆனால் எனது வாயிற்படிக்கு பக்கத்தில் இருந்த புல்லின் நுனியில் இருக்கும் பனித்துளியில் மொத்த பிரபஞ்சமும் தெரிவதை கவனிக்கத் தவறி விட்டேன்.”
இதைத் தொடர்ந்து படித்து வந்ததால்தான் தன் சினிமாவின் ஒவ்வொரு சிறு விவரணையிலும் கவனம் எடுக்கும் பழக்கம் தனக்கு வந்தது என்று குறிப்பிடுகிறார் சத்யஜித் ராய்.