திருவையாறு என்றாலே பலருக்கு கர்நாடக இசையும், இங்கே நடக்கும் வருடாந்திர இசை விழாவும் நினைவுக்கு வரும்.
திருவையாறு என்ற பெயருக்கே ஒரு சிறப்பு உள்ளது.
திரு + ஐ + ஆறு – அதாவது,
காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக
1) குடமுருட்டி, 2) வெண்ணாறு, 3) வெட்டாறு, 4) வடவாறு 5) அரசலாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.
கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான தியாகராஜ சுவாமிகள் நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், தியாகராஜ ஆராதனை விழா இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
திருவையாறின் இன்னொரு சிறப்பான புகழ்பெற்ற அசோகா அல்வாவைப் பற்றி பார்க்கலாம்.
பச்சை வாழை இலையில் சுடச்சுட ஆவி பறக்கும் அசோகா அல்வாவை காணும்போதே நம் நாவில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாக ஓவர்டைம் செய்யும். உடலுக்கு மிகவும் உகந்த பாசிப்பருப்பே இதில் முக்கிய சேர்ப்பு.
அசோகா அல்வா விற்பதே பிரதான தொழிலோ என்னும்படி ஊரெங்கும் அல்வா கடைகள் இருந்தாலும், காத்திருந்து உண்டும் வாங்கியும் செல்லும் ரசிகர்களைக் கொண்ட கடை ஆண்டவர் அசோகா கடைதான்.
காலை 10 மணிக்கு கடை திறக்கும் முன்பே கூட்டம் காத்திருக்கிறது. சுடச்சுட அல்வாவையும் கொசுறாக கொஞ்சம் மிக்ஸரையும் காலை டிபனாக கொண்டு, மதிய சாப்பாடாகவும் பார்சல் பறக்கிறது.
தியாகராஜ ஆராதனைக்கு வரும் கலைஞர்கள் ஊர் திரும்பப் பெட்டி கட்டும்போது மறக்காமல் அசோகா பொட்டலமும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள்.
இன்று தமிழகமெங்கும் அசோகா அல்வா கிடைத்தாலும் காவிரி தண்ணீருடன் உருவாகும் திருவையாறு அசோகா அல்வாவின் சுவை தனித்துவம் வாய்ந்தது.
திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா கோதுமை அல்வாவுக்குப் புகழ்பெற்றது என்றால் இந்தக் கடை அசோகா அல்வாவுக்குப் புகழ்பெற்றது. முக்கியமாக பாசிப்பருப்பை வைத்து செய்யப்படும் இந்த அல்வாவுக்கு ஏன் அசோகா அல்வா என்று பெயர் வந்தது என்று யாமறியோம் பராபரமே!
ராமைய்யர் என்பவரால் பல ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக தயாரிக்கப்பட்டது இந்த அசோகா அல்வா. அவர் வாழ்நாள் முழுக்க அசோகா அல்வாவும் தூள் பக்கோடாவும் சுவையாட்சி செய்து கொண்டிருந்தது.
அவர் காலத்துக்குப் பிறகு, அசோகா சிறிது துவண்ட பொழுதில், ஆண்டவர் கடை கணேசமூர்த்தி அதற்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறார்.
ராமைய்யர் வைத்திருந்த அதே இடத்திலேயே இப்போது செயல்படுகிற ஆண்டவர் கடையில், அதே பாரம்பரியத்தோடு அசோகா அல்வா தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.
பாசிப்பருப்பு, கோதுமை மாவு, சர்க்கரை, நெய் ஆகியவற்றின் கலவைக்கு, இத்தனை சுவை வரக் காரணம் காவேரி தண்ணீரும் விறகு அடுப்பும்தானாம்!
வாயில் போட்டால் நேராக அப்படியே வழுக்கிக்கொண்டு போய் வயிற்றிலேயே விழும் அளவு மிருது… மிக லேசான ரவை போன்ற ஒரு பருப்புச் சுவை நாவில் இடறும்… கையிலே ஒட்டாது… வாயில் இட்ட உடனே பாசிப்பருப்பு வாசனை காட்டிக் கொடுக்கும்!
“சாதாரணமாகவே அல்வா செய்வது கூடுதல் கவனம் தேவைப்படும் வேலை. கை ஒட்டாமல் கிளறுவதும், பதம் தப்பாமல் பிடித்து இறக்குவதும் ஆரம்ப அவஸ்தைகள்.
எத்தனையோ அல்வா வகைகள் செய்த பயிற்சி இருந்தாலும், அசோகா செய்வது கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாகவே இருக்கிறது” என்று சொல்கிறார் கணேசமூர்த்தி.
செவிக்கு உணவில்லாதபோது சற்று வயிற்றிற்கு ஈயப்படும் என்பார்கள். திருவையாறு சென்று தியாகய்யரின் கீர்த்தனைகளை ரசிப்பதோடு, அசோகா அல்வாவையும் வாங்கி ருசித்துப் பாருங்கள்.
நன்றி: முகநூல் பதிவு