டி.எம்.எஸ் பாடிய முதல் பாடல்!

நூல் வாசிப்பு:

1950-ம் ஆண்டு ஜுபிட்டர் பிக்சர்ஸ் தயாரிப்பான ‘கிருஷ்ண விஜயம்’ என்ற பக்திப்படம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.

இப்படத்தின் கதாநாயகன் நரசிம்ம பாரதி பாடும் – “ராதே நீ என்னைவிட்டுப் போகாதேடி” என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது. செஞ்சுருட்டி ராகத்தில் ஒலித்த இந்தப் பாடல். பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு எம்.கே. தியாகராஜ பாகவதர் சிந்தாமணி படத்தில் பாடிய “ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி” என்ற பாடலை நினைவூட்டியது.

அதுமட்டுமல்ல, பாகவதர் தான் திரும்பவும் இப்பாடலைப் பாடுகிறாரோ எனப் பலர் அதிசயித்தார்கள். பின்னர் தான் இது பாகவதரல்ல; சௌந்தரராஜன் என்ற பெயர் கொண்ட ஒரு புதிய பாடகர் என்பதை மக்கள் அறிந்து கொண்டார்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை – சென்ற ஐம்பது ஆண்டுக் காலமாக தமிழ்பேசும் மக்கள் வாழும் உலகின் மூலை முடுக்கெல்லாம் டி.எம்.எஸ். என்ற பெயரைக் கேள்விப்படாத இசை ரசிகர்கள் எவருமே இருக்கமுடியாது.

அவரது பக்திப் பாடல்களோ, சினிமா இசையோ கேட்காத தமிழர் இல்லங்கள் இல்லையென்றே சொல்லலாம்.

பாண்டிய மன்னர்கள் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே – சொக்கநாதரும், மீனாட்சி அம்மையும் குடிகொண்ட திருத்தலம் அமைந்த பதியிலே –

வேதம் ஓதும் சௌராஷ்டிரப் புரோகிதரான மீனாட்சி ஐயங்காருக்கும், வெங்கடம்மைக்கும் 1923-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி பிறந்த பிள்ளைக்கு தங்கள் குல தெய்வமான சௌந்தரராஜப் பெருமாள் பெயரையே தந்தார்கள். தொகுளுவ மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் என்ற பெயர் – பின்னர் டி.எம்.எஸ் என வழங்கலாயிற்று.

  • டாக்டர் எஸ்.தியாகராஜா எழுதிய ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் சில இனிய நினைவுகள்’ நூலிலிருந்து ஒரு பகுதி…
Comments (0)
Add Comment