புரிதலோடு ஏற்றுக்கொள்ளுங்கள், வாழ்க்கை சுகமாகும்!

உறவுகள் தொடர்கதை – 20

எந்த இசைக் கருவியைக் கற்றுக்கொண்டாலும், முதலில் அபஸ்வரமாகத்தான் வரும். ஏனென்றால், எந்தக் கம்பி எந்த ஸ்வரத்தை எப்போது உருவாக்கும், எதை எதை எந்த அழுத்தத்தில் சேர்த்தால் இசையாக வெளிப்படும் என்று தெரியாது. பழகினால்தான் தெரியும்.

அதே போலத்தான் கணவன் / மனைவி ஆகிய இருவருமே வெவ்வேறு பின்னணியில் இருந்து, பழக்க வழக்கங்களிலிருந்து, சூழ்நிலைகளில் இருந்து, வளர்ப்புகளில் இருந்து வந்தவர்கள்.

தொடர்பற்ற கம்பிகள் ஒன்றிணைந்து இசையை உருவாக்குவது போல இந்த இரண்டு பேரும் நல்ல இசை போன்ற வாழ்க்கையை உருவாக்க வேண்டும்.

அதற்கு முதலில் ஒருவர் மற்றவரின் பின்னணி, வளர்ப்பு, அதன் அடிப்படையிலான எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அதைத் தங்களது பார்வையிலிருந்து, புரிந்து கொள்வதை விட, மற்றவரின் பார்வையிலிருந்தும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். இதை இருவருமே செய்ய வேண்டும்.

புரிந்து கொள்வது பெரிய விஷயமே அல்ல. அதை ஏற்றுக் கொள்வதில்தான் பிரச்சினை. ஏனென்றால், புரிந்து கொண்டதை, தனது அபிப்பிராயத்தோடு இணைத்துப் பார்த்து, ‘இது சரியில்லயே’? என நினைத்தால், புரிந்து கொள்வதில் பயனில்லாமல் போகும்.

அண்மையில் ஒருவர் மன நல ஆலோசகரிடம் வந்தார். தனது மனைவி நன்றியில்லாமல் நடந்து கொள்வதாகவும், அதனால் மன உளைச்சலில் தவிப்பதாகவும் தெரிவித்தார். விஷயம் என்னவென்றால், அவர் ஒரு ஏழைக்குதான் வாழ்வு கொடுப்பேன் என்ற லட்சியம் கொண்டு, அதற்காகவே தேடிப் பிடித்துத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில மாதங்களிலேயே, அந்தப் பெண், அதிகமாக செலவழித்தல், இவரது பெற்றோரை மதிக்காதிருத்தல், நண்பர்களைக் குறை கூறுதல், இவரது உறவினர்களோடு இணக்கமாக இல்லாதிருத்தல் போன்றவற்றால் இவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது.

அவரது மனைவியிடமும் மன நல ஆலோசகர் பேசினார்.

அந்தப் பெண்ணைப் பொருத்த வரை, தனக்கு கஷ்டத்திலிருந்து விடிவுக் காலம் என்பதில் திருப்தியாக இருந்தார்.

ஆனால், தனது முன்னாள் நிலை பற்றிய ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது.

தனது கணவருக்கு இருக்கும் எண்ணம் போல மற்றவர்களுக்கு இல்லையோ என்ற எண்ணம், அவர்களது நடத்தைகள், பேச்சுகள், பாவனைகள் ஆகியவற்றிலிருந்து தோன்றியிருக்கிறது.

அதனால் அவர்களை தனக்கான அச்சுறுத்தலாகப் பார்த்தார். அதன் விளைவாக, தனது அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

மற்றவர்களுக்கு, இது இரட்டிப்பு அதிர்ச்சியாக இருந்தது. முதலாவது அவளது மாற்றம். இரண்டாவது ‘எப்படி இருந்த இவள் இப்படி…’ என்ற கோபம், அவர்களை உண்மையிலேயே மாற்றமடையச் செய்தது. மூன்று அமர்வுகளுக்கு மேல் பேசி இதை சரி செய்தார் மன நல ஆலோசகர்.

சுருக்கமாக சொன்னால், அந்தப் பெண் பழைய வாழ்க்கையிலிருந்து புதிய வாழ்க்கைக்கு வந்ததும், அதற்கான சுகங்களை அனுபவித்தார். அதைப் பார்த்த கணவனுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

அதே சமயம், ‘இனி இப்படித்தான்’ என நினைத்து, புதிய சூழலுக்கேற்றவாறு மாற்றிக் கொண்டது, மற்றவர்களுக்கு அதீதமாகப் பட்டது. இதே நடவடிக்கைகள், அவர்களது அந்தஸ்த்தில் வந்த பெண்ணாக இருந்தால், இயல்பாக எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

இது ஒரு உதாரணம்தான். ஆங்கிலத்தில் Value System  என்று சொல்லக்கூடிய பழகிய தொன்மைகள் அவ்வளவு விரைவில் மறையாது.

அந்தத் தொன்மைகளால் நன்மை, மகிழ்ச்சிகளை, அனுபவித்து இருந்தால், ‘ஏன் மாற வேண்டும்?’ என்ற கேள்வியும், அப்படி இல்லாவிட்டால், ‘ஏன் மாறக் கூடாது’? என்ற கேள்வியும்தான் வாழும் முறையைத் தீர்மானிக்கும்.

ஆனால் அடிப்படை பழகிய தொன்மைகள்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லாருக்குமே பொருந்தும்.

அதே சமயம், ஒரே இனமாக இருந்தாலும், வளர்ப்பு வேறு விதமாக இருப்பதால், தனிக் குணங்கள், செயல்பாடுகள் ஆழப் பதிந்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வேறு இனம், மதமாக இருந்தால், அந்த அளவுக்கு ஒத்துப் போவதும், கடினமாக இருக்கும்.

அதே சமயம், இதை சரி செய்ய முடியாதா என்று கேட்டால் நிச்சயமாக முடியும் என்பதுதான் பதில். அது எப்படி எனப் பார்க்கலாம். முதலில், இருவரும் மனம் விட்டுப் பேச வேண்டும். அதுவும் முறையாக. அதாவது, பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் நோக்கத்துடன். அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன்.

யார் பெரியவர்? யாருடைய பழக்க வழக்கங்கள், பெரியது, சிறந்தது? என்றெல்லம் நினைத்துக் கொண்டு பேசினால், எந்தப் பலனும் இல்லை. மாறாக, அந்தப் பழக்கங்களில், எவையெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்? எதெல்லாம் மற்றவர் ஏற்றுக் கொள்வதற்கு சிரமப் படுவார்கள்? என்பதைப் பற்றி புரிந்து கொள்ள பேச வேண்டும்.

இருவருக்கும் பொதுவான அம்சங்கள் பற்றி கவனித்தறிய வேண்டும். எதையும் திணிப்பதால் பலனில்லை. எதையெல்லாம் மற்றவர்கள் ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு திருப்தியாக இருக்கும்?

அந்தத் திருப்தி, ‘நான்’ என்ற அம்சத்தைத் திருப்திப் படுத்தவா அல்லது நடைமுறை வாழ்க்கைக்கு பிரச்சினைகள் கொண்டு வராத அம்சங்களா என்பதை இருவருமே எண்ணிப் பார்த்து, ஏற்றலும், மறுத்தலும் இருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கான space என்று சொல்லக் கூடிய வரையறை அம்சங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களுக்கான space குறித்து அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

நீங்கள் விட்டுக் கொடுத்த விஷயங்கள் எல்லாமே புரிந்துணர்வால் விட்டது என்பதை மனதின் ஆழத்தில் இருத்துங்கள்.

வாழ்க்கைத் துணை மேலுள்ள அன்பினால், வாழ்நாள் முழுதும் நம்மோடு இருப்பவர்களைப் புரிந்து கொண்டதற்கு, அதை ஏற்றலுக்கு அடையாளமாக நினையுங்கள். இவ்வாறு ஏற்றுக் கொண்ட விஷயங்களிலிருந்து ஒருபோதும் பின் வாங்காதீர்கள்.

கோபம், மனஸ்தாபம், மனக்கசப்பு ஆகியன பல்வேறு விதங்களில் உருவாகும். ஆனால் மற்றவர்களை வெறுப்பேற்றுவதற்காக, அதிருப்தியைப் புரிய வைப்பதற்காக, ஏற்றுக் கொண்டவைகளில் இருந்து பின்வாங்காதீர்கள்.

நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் இதெல்லாம் மிக முக்கியமானவை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

வாழ்க்கையைப் பற்றி, தம்பதியரின் ஒத்திசைவான வாழ வேண்டியதைப் பற்றி, ஜெர்மெனியில் பிறந்த, பிரஞ்சு யூத நடிகை சிமோன் சிக்னோரெட் கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இவர் அவரது காலத்தில் மிகப் பெரும் பேரும் புகழும் பெற்றவர். உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பல முக்கிய விருதுகளைப் பெற்றவர். பல்வேறு கொள்கைகளுக்காக, குரல் கொடுத்தவர் மட்டுமின்றி, அவற்றுக்காக போராடவும் செய்தவர்.

”சங்கிலிகளால் திருமண பந்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அது பல்லாயிரக்காண நூல்களால் பல வருடங்களாக சேர்ந்திணைத்து உருவாக்கிய பந்தம்.

இதை சேர்த்திணைத்தது, பரஸ்பர ஒத்துழைப்பு, தொடர்பு நிலை, பரஸ்பர ஆழமான அன்பு, தெளிவான மனசாட்சி, தொடர்ந்து அறுபடாமல் இருக்கும் பேச்சுத் தொடர்பு ஆகியனதான்” என அழகாகக் கூறியிருக்கிறார்.

மற்றுமொரு முக்கியமான விஷயம், கணவன் / மனைவி ஆகிய இருவருமே, மற்றவரின் அருமையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குடும்பத்துக்காக, மற்றவர் செய்யும் பல விஷயங்களை, ‘சரி செய்கிறாள்(ன்), என்ன இப்ப?’ என்று இருக்கவே கூடாது.

நம் எல்லாருக்கும் பாராட்டும், நாம் செய்வதை மற்றவர் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் நிச்சயமாக இருக்கிறது. நாம் எதிர்பார்ப்பதை மற்றவர்கள் கொடுக்கும்போது, நம் மனம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது?

அந்த மகிழ்ச்சியை மற்றவருக்கு, அதுவும் வாழ்க்கைத் துணைக்குக் கொடுக்கிறோமா? என்பதைக் கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். அதை இன்றிலிருந்து செய்ய ஆரம்பியுங்கள். இது குடும்ப பந்தம் உறுதியாக, மிக முக்கியமான செயல்பாடாக இருக்கும் என்பதை மறக்காதீர்கள்.

-தனஞ்செயன், மனநல ஆலோசகர்

Comments (0)
Add Comment