காவல் துறையைச் சேர்ந்தவர்களைத் திரைப்படங்களில் வில்லன்களாகச் சித்தரிப்பது புதிதல்ல. அதேபோல, அத்துறையைச் சேர்ந்தவர்களைச் சாகசக்காரர்களாகக் கொண்டாடும் ’சிங்கம்’ வகையறாக்களும் அதிகம்.
இதனை மீறி, காவல் துறையில் நிலவும் சூழலை யதார்த்தத்துடன் வெளிப்படுத்திய படைப்புகள் மிகக்குறைவு.
வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ காவல் துறையில் பணியாற்றுகிறவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை சாதாரண மனிதர்களின் பார்வையில் முன்வைத்தது என்றால், அத்துறையிலேயே ஊறிச் சுழலும் ஒரு காவலரின் மனதைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது ‘ரைட்டர்’.
பா.ரஞ்சித் தயாரிப்பில், பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இத்திரைப்படத்தில் பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.
ஹரிகிருஷ்ணன், கவின் ஜெயபாபு, சுப்பிரமணியசிவா, கவிதா பாரதி, திலீபன், முத்துராமன், மகேஸ்வரி, லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
மற்றுமொரு போலீஸ் கதையல்ல!
காவல் துறையில் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் காவலர் தங்கராஜ் (சமுத்திரக்கனி), கீழ்நிலையில் பணியாற்றும் காவலர்களுக்கென்று சங்கம் வேண்டுமென்று போராடுபவர்.
காவல் துறையிலுள்ள நெளிவுசுளிவுகள் அத்துபடியென்றாலும், பொதுமக்கள் குறை சொல்லாத அளவுக்கு கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்பவர்.
காவலர் சங்கம் தொடர்பான வழக்கு அடுத்தகட்டத்துக்கு நகர, தங்கராஜ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், திருவெறும்பூரில் இருந்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு மாற்றலாகிறார்.
பணியில் சேர்ந்த முதல் நாளே தேவகுமார் (ஹரிகிருஷ்ணன்) எனும் இளைஞனை காக்கும் பொறுப்பு தங்கராஜிடம் தரப்படுகிறது.
சட்டப்பூர்வமாக கைது செய்யப்படாமல் போலீஸ் காவலில் இருக்கும் அந்த இளைஞன் யார்? எதற்காக அவர் மீது வழக்குகள் பதிய நிர்ப்பந்தம் தரப்படுகிறது என்பது தங்கராஜுக்கு தெரியவில்லை. ஏதோ ஒரு வழக்கில் அவர் தவறாக குற்றம்சாட்டப்பட்டதாகவே கருதுகிறார்.
இந்த நிலையில், டெபுடி கமிஷனர் திரிபாதி சர்மா (கவின் ஜெயபாபு) திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வருகிறார்.
ஒரு ரைட்டராக தங்கராஜின் செயல்பாடு எத்தகையது என்பதை ஏற்கனவே தெரிந்திருக்கும் அவர், பிடியில் இருக்கும் குற்றவாளி மீது வலுவான வழக்கு பதிவதற்காகப் பொய்யாக ஒரு குற்றச் சம்பவத்தை உருவாக்கச் சொல்கிறார். தங்கராஜும் அவ்வாறே செய்கிறார்.
எந்த குற்றமும் செய்யாத தேவகுமார், தங்கராஜ் உருவாக்கிய ஸ்கெட்ச்சில் சிக்குகிறார். நக்சல்களுக்கு உதவி செய்ததாகக் கூறி, தேவகுமாரை கைது செய்கிறது போலீஸ்.
தனது காவல் துறை அனுபவமே ஒரு நிரபராதியைச் சிறையில் தள்ளக் காரணமாகப் போகிறது என்றறியும் தங்கராஜ், தேவகுமார் போலீஸ் பிடியில் சிக்கியதன் பின்னணியைக் கண்டறிவதே மீதிக்கதை.
மேம்போக்காக ஒரு ‘த்ரில்லர்’ பாணி கதையாகத் தோன்றினாலும், இது மற்றுமொரு போலீஸ் கதையல்ல என்பதை முதல் பத்து நிமிடங்களிலேயே உணர்த்திவிடுகிறார் இயக்குனர் பிராங்ளின் ஜேக்கப்.
காவல் துறை எனும் அதிகார அமைப்பின் அடுக்குகளையும், அதில் நிறைந்திருக்கும் சாதீயத்தையும், தினசரி உயரதிகாரிகளிடம் இருந்து காவலர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களையும் வெளிப்படுத்தியதில் ரொம்பவே வித்தியாசப்படுகிறது ‘ரைட்டர்’.
கடுமையான விமர்சனம்!
‘நம்மாளுக வெள்ளைக்காரனை எதிர்த்து பேசிரக் கூடாதுன்னு உருவாக்குனதுதான் இந்த போலீஸு’, ‘போலீஸ்ல அதிகாரத்துல இல்லாத எல்லாருமே அடியாளுதான்’,
’ஐபிஎஸ் அதிகாரிங்களுக்கெல்லாம் சங்கம் இருக்கறப்போ எங்களுக்கு சங்கம் அமையாம தடுக்கறது சரியா’, ’சாணி அள்ளுறது கேவலமான வேலையில்ல, ஆனா இதைத்தான் செய்யணும்னா செய்ய மாட்டேண்டா’, ’வேலைக்கு சேர்ந்த புதுசுல எத்தனை நாள் அழுதிருக்கேன்’,
‘கடைசியா அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிடுச்சு, அப்படித்தான் அந்த கேஸை முடிச்சாங்க’ என்பது போன்று படம் முழுக்க நிறைந்திருக்கும் வசனங்கள் காவலர்களின் மனநிலையையும், அவர்கள் மீது மேலிருந்து பாயும் அழுத்தங்களையும் வெளிக்காட்டுகிறது.
உயரதிகாரி என்ன சொன்னாலும் செய்ய வேண்டும் என்ற வார்த்தைகளைச் சுற்றியே, காவல் நிலைய காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மனம் திருந்தும் குற்றவாளியாக வரும் ராஜா (ஆண்டனி) பாத்திரம், பொதுமக்களின் பார்வையில் காவல் துறை பற்றிய விமர்சனங்களைச் சொல்லப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
உயரதிகாரியையும் ஒரு காவலரையும் பார்த்துவிட்டு, ‘எனக்கு எல்லா போலீஸுமே ஒண்ணுதான்’ என்று சொல்லுமிடம் ஒரு உதாரணம்.
தேவகுமாரன் கைது செய்யப்பட்டபிறகு போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டிருப்பதும், அவரைத் தேடி சகோதரர் சேவியர் (சுப்பிரமணிய சிவா) வருவதும், தேவகுமாரன் வழக்கறிஞரிடம் உண்மையைச் சொல்வதற்காக ராஜாவும் தங்கராஜுவும் செய்யும் முயற்சிகளும் அதுவரையிலான திரைக்கதையின் போக்கை மடைமாற்றுகின்றன.
அதை ஈடுகட்டும் விதமாக, குதிரைப்படையில் சேர விரும்பும் சரண்யாவின் (இனியா) பிளாஷ்பேக் அமைந்திருக்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளிகளின் மரணம், காவலர்கள் தற்கொலை செய்துகொள்ளும் விகிதம் அதிகரிப்பு, போலியான வழக்குகளில் சாதாரண மனிதர்கள் கைது செய்யப்படுதல், காவலர்களுக்கென்று சங்கம் அமையும் முயற்சி நிறைவேறாமல் இருத்தல்,
விசாரணை கைதிகளை சட்டவிரோதமாகத் தனியிடங்களில் தங்க வைத்தல், காவல் நிலையங்களில் வழக்குகள் தீர்க்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்று திரைக்கதையில் ஒரு காட்சியாக வைப்பதற்கே யோசிக்கும் பல பிரச்சனைகளை ஒரே கதையில் கொட்டியிருக்கிறார் இயக்குனர்.
கிளைமேக்ஸ் காட்சி முடியும்போது, அதிகார பீடத்தோடு ஒன்றமுடியாத காவலர்களின் நிலை சிலுவையில் அறைவதற்கு ஒப்பானது என்பது முகத்திலறைந்தாற்போல சொல்லப்படுகிறது. அதுவே, காவல் துறை மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களில் உச்சமாக அமைகிறது.
சிறப்பான உள்ளடக்கம்!
ஒரு காட்சியில் மட்டுமே தோன்றும் போஸ் வெங்கட்டிடம் அடி வாங்கியபிறகு வெளியே வரும் காட்சியொன்றே போதும், சமுத்திரக்கனி சிறந்த நடிகர் என்பதைச் சொல்ல..
திலீபன், ஆண்டனி, மகேஸ்வரி, லிஸ்ஸி, ஜி.எம்.சுந்தர், திருவல்லிக்கேணி ஸ்டேஷன் ரைட்டராக நடித்திருப்பவர் உட்பட அனைவருமே நல்ல பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.
வடநாட்டு ஐபிஎஸ் அதிகாரி வேடமேற்ற கவின் ஜெயபாபு, காவல் துறை மீதான ஒட்டுமொத்த விமர்சனங்களையும் அவ்வுலகில் நிலவும் சாதீய அழுக்குகளையும் சுமக்கும் நபராக வருகிறார்.
காவலர்களின் குணாதிசயங்களைச் சொல்ல தனித்தனியாக காட்சி அமைக்காமல், சமுத்திரக்கனி இடம்பெறும் காட்சியிலேயே பின்னணியில் அவர்களது உடல்மொழியை இயல்பாகக் காட்டியிருப்பது அருமை. ஹரிகிருஷ்ணனை விசாரணைக்காக அழைக்கும் காவலராக வருபவர் அதற்கொரு உதாரணம்.
ராஜாவின் கலையமைப்பில் மிளிரும் இயல்பான காவல் துறை உலகை அப்படியே படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா.
சமுத்திரக்கனி வீடு, லாட்ஜ் என்று வேறு இடங்களுக்கு திரைக்கதை பயணிக்கும்போது, அந்த செழுமையைக் காண முடியவில்லை. மணிகண்டனின் படத்தொகுப்பு, படம் பார்க்கும் ரசிகர்களை யோசிக்கவிடாதவாறு அடுத்தடுத்து காட்சிகளைச் செறிவாக அடுக்குகிறது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் மட்டுமல்லாது, பின்னணியும் அருமையான அனுபவத்தை அளிக்கிறது. முக்கியமாக, இனியா இடம்பெறும் காட்சிகள் அருமை.
காவல் துறை குறித்த விமர்சனங்களை முன்வைக்கும்போது மட்டும் எழுத்து நடையைப் பிரதிபலிக்கின்றன வசனங்கள். மற்றபடி, கதாபாத்திரங்களும் அவர்கள் பேசும் வசனங்களும் பிரித்து பார்க்க முடியாதபடி அமைந்திருக்கின்றன.
வித்தியாசமான முயற்சி!
சமுத்திரக்கனி சொல்லும் தகவலால் பத்திரிகையில் டெபுடி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு எதிரான கட்டுரையே, ஹரிகிருஷ்ணன் மீதான நடவடிக்கை கடுமையாவதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில், அக்கட்டுரை வெளிவந்ததாலேயே அவர் உயிரோடு இருப்பதாகவும் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. இரண்டுமே மையப்பாத்திரத்தின் குற்றவுணர்ச்சி எந்தளவுக்கு சரியானது என்ற கேள்வியை எழுப்புகிறது.
உண்மையைச் சொன்னால், இப்படத்தின் மொத்தக் கதையும் இனியா வரும் பகுதியில் அடங்கியிருக்கிறது. காவலர்கள் எதிர்கொள்ளும் பணி அழுத்தமும், சக அரசு ஊழியர்களைப் போன்று தாங்களும் இருக்க வேண்டுமென்ற உரிமைப் போராட்டமும் அதன் நீட்சிதான்.
இடதுசாரி சிந்தனை கொண்டவராக சமுத்திரக்கனியைக் காட்டியிருந்தாலும், காவல் துறையில் பணியாற்றுவதற்கான அத்தனை நெளிவுசுளிவுகளையும் தெரிந்தவராகவே அப்பாத்திரம் படைக்கப்பட்டிருப்பது, வழக்கமாக திரையில் போலீஸ் நாயகர்களை காட்டும் விதத்தில் இருந்து பெருமளவு வேறுபடுகிறது.
அதிகாரம் செலுத்தும் ஆதிக்க மனோபாவமே சாதி, மதம், இனம் என்று இவ்வுலகில் நிலவும் பல வேறுபாடுகளுக்கு காரணமாக விளங்குகிறது.
காவல் துறையில் மேலிருந்து கீழாகப் பாயும் அதிகாரப் பெருக்கும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படியொரு அதிகார மனோபாவத்துடன் சாதீயமும் சேர்ந்தே காவல் துறையை ஆட்டிப் படைத்து வருகிறது என்பதே ‘ரைட்டர்’ படத்தின் மையக்கரு.
தற்கொலை செய்துகொண்ட காவலர்களின் தகவல் தொகுப்பில், சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் படமும் காட்டப்படுகிறது.
’ரைட்டரின்’ தொடக்கப்புள்ளியும் முற்றுப்புள்ளியும் அதுதான் என்று ரசிகர்களை உணரச் செய்வதே இப்படத்தின் வெற்றி!
– உதய் பாடகலிங்கம்
28.12.2021 2 : 30 P.M