தியாக காலத்தின் நீட்சி!

டாக்டர் க. பழனித்துரை

காந்தி கிராமம் ஒரு கனவுக் கிராமம். அது காந்தியின் கனவை நிறைவேற்றி புதிய சமுதாயம் படைக்க உருவாக்கப்பட்ட மக்கள் இயக்கம்.

காந்தி கிராமத்தில் தங்கி அதன் நிறுவனர்களில் ஒருவரான ஜி.ராமச்சந்திரனுடன் விவாதித்தபோது அமெரிக்க கருப்பின மக்களின் நிறதுவேஷம் துடைக்க செயல்பட்ட மார்ட்டின் லூதர் கிங் அமைதி வழிப் போராட்டத்தின் சக்தியையும், ஆற்றலையும் அறிந்ததாக தன் சுயசரிதையில் இரண்டு பக்கம் விளக்கமாக எழுதியுள்ளதைக் குறிப்பிட்டார்.

சமூக மேம்பாட்டிற்கு மாற்றுப்பாதை தேடும் மாந்தர்களுக்கு வழிகாட்டும் ஓர் உன்னதமான செயல்பாட்டுக் களம் இந்த காந்தி கிராமம்.

அந்த இடம் பல காந்திய புனிதர்களின் காலடி பட்டு புனிதப்படுத்தப்பட்டுள்ளது. அங்குதான் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வசிக்கும் ஊழியரகமும் இருக்கிறது. காந்தியர்களுக்கு ஊழியரகம் என்றால் அது அவர்களை உருவாக்கிய உலைக்களம் என்பதனை அறிவார்கள்.

சமூக ஊழியம் செய்யும் ஊழியர்களைச் செதுக்கும் உலைக்களம். அது ஒருசிறிய ஓட்டுக் கட்டிடம்தான். ஆனால் அதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. ஒட்டுமொத்த காந்திகிராமமும் ஒரு கனவைச் சுமந்து நிற்கும் பயிற்சிக்களம்.

யார் யாரெல்லாம் சமூக மாற்றத்திற்கு பணி செய்ய முனைப்புப் பெற்று கனவுடன் வருகிறார்களோ அவர்களை செதுக்கிவிடும் உலைக்களமாக இன்றுவரை செயல்பட்டு வரும் இடம்தான் காந்திகிராமம்.

ஒட்டுமொத்த காந்திய நிறுவனங்களுக்கு அங்கு ஒரு தலைமையிடம் உண்டு அதுதான் காந்திகிராம அறக்கட்டளை.

இந்தியாவிலேயே மிகப்பெரிய செயல்பாட்டுக் களமாக செயல்படும் காந்திய நிறுவனமும் அந்த அறக்கட்டளைதான்.

காந்தியின் கனவாக ஒடுக்கப்பட்டோரையும், ஒதுக்கப்பட்டோரையும், புறந்தள்ளப்பட்டோரையும், உள்வாங்கி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பணியைச் செய்துவந்த அந்த நிறுவனத்தின் நிறுவனர்களான டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரன் அவர்களும், டாக்டர் ஜி.ராமச்சந்திரன் அவர்களும் செய்து வந்த பணியினை தாங்கிப் பிடித்து இன்று வரை தடம் பிறழாது நடத்திவரும் அந்த நிறுவனத்தில்,

புதுமைக் காந்தியர்களின் ஆசானாகக் கருதப்படும் காந்தியப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதுக்கு ஒரு பாராட்டு விழாவும்,

காந்தியச் செயல்பாட்டாளரும் காந்திகிராம பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் என்.மார்க்கண்டன் அவர்களின் ”எனது பயனுள்ள நாட்கள்” என்ற புத்தக வெளியிட்டு விழாவும் டிசம்பர் 21 ஆம் தேதி மாலை 3 மணிக்கு டாக்டர் சௌந்தரம் அம்மா அவர்களின் மணிமண்டபத்தில் நிகழ்ந்தது.

சிறிய காந்திய அன்பர்கள் கூட்டம் என்றாலும் காந்திகிராம அறக்கட்டளையில் நடத்தப்படும் நிகழ்வு எப்பொழுதுமே எளிமையாய் இருக்கும். ஆனால், பொருள்பட முறைமையுடன் நடைபெறும். அதில் கலந்துகொள்வதில் எப்பொழுதும் எனக்கு ஓர் ஆர்வம் இருக்கும். காரணம் அந்த நிகழ்வு எனக்கு ஒரு புது ஆற்றலை உருவாக்கிவிடும் என்பதால்.

அப்படிப்பட்ட நிகழ்வுகளை காந்திகிராம அறக்கட்டளை நடத்தினால் அதில் பங்கு பெறுவது ஒரு பெரு மகிழ்வாகக் கருதும் நான், அங்கு அந்த விழாவிற்கு சென்று பங்கேற்றேன். அங்கு சென்றவுடன் பக்கத்தில் அமரச் செய்தார்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் 96 வயதைக் கடந்த போராளி, இன்றும் போராட்டத்திற்கு தயாராக இருப்பதை என்னால் உணர முடிந்தது.

எனக்கு எதுக்கு பாராட்டு, எனக்கு ஒரு 5000 வீடு கட்ட வேண்டும், அதற்கு ஒருவழி கூறுங்கள், அதற்கு ஒரு சிலரை அணுக வேண்டும், அதற்கும் உங்கள் உதவி தேவை என்றார் என்னிடம்.

பாரதப் பிரதமரிடம் என்ன கூறினீர்கள் என்றேன். நான் ஜனாதிபதியிடம் ஒன்றை தெரிவித்து விட்டு வந்தேன் என்றார்.

என்ன கூறினீர்கள் என்றேன்.

ஏழைகள் வாழ்வு ஏற்றம் பெறவில்லை என்பதைக் கூறிவிட்டு வந்தேன் என்றார்.

அறக்கட்டளையின் செயலரும் காந்திகிராம பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமாகிய டாக்டர் ஜி.பங்கஜம் அவர்கள் வரவேற்புரையுடன் விழா துவங்கியது.

புதுடெல்லி காந்தி ஸ்மாரக் நிதியின் அகில இந்தியத் தலைவர் திரு.இராமச்சந்திர ராகிஜி தலைமை ஏற்றுப் பேசினார். அப்போது ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.

நான் முன்பு ஒரு முறை சர்வோதயத் தலைவர் ஜெகந்நாதன் அவர்களைப் பார்க்க வந்தேன், அப்போது என்னை சந்தித்தவுடன் வாருங்கள் பாட்னா செல்லலாம். கே.எம்.நடராஜனை அழையுங்கள் என்றார். முழுப்புரட்சியில் பங்கேற்க வேண்டுமல்லவா என்றார்.

அவர் சிந்தனை முழுவதும் மக்கள் இயக்கம் கட்டும் சிந்தனையாகவே இருக்கிறது  என்பதை உணர்ந்து கொண்டேன். ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய மக்கள் இயக்கச் சிந்தனைச் சூழலில்தான் இன்றும் அவர் இருக்கிறார் என்பதையும் உணர்ந்தேன்.

இந்த ஜெகந்நாதன் மற்றும் கிருஷ்ணம்மாள் தம்பதியரின் வாழ்வு சமூக அர்ப்பணிப்பு நிறைந்த ஒன்று, இந்த அர்பணிப்பு மற்றும் சமூகச் சிந்தனையுடன் வாழும் வாழ்வு நம் இளைஞர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தன் தலைமை உரையை நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குனர் முனைவர் அண்ணாமலை பேசும்போது, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் இந்த பட்டங்களைக் கடந்தவர். அவர் அரசாங்க அங்கீகாரத்திற்கு ஏங்கியவரல்ல.

அதே நேரத்தில் இவருக்கு சமூகம் அளித்திருக்கின்ற அங்கீகாரம் என்பது அரசாங்கம் அளிக்கின்ற அங்கீகாரத்தை விட பன்மடங்கு அதிகமானது மற்றும் அளப்பரியது.

96 வயதிலும் தளராத மனத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதுதான் நம் அனைவருக்கும் ஒரு பாடமாகத் திகழ்கிறது என்றார்.

கிருஷ்ணம்மாள் பேசும்போது ஒன்றைக் குறிப்பிட்டார்.

“நான் இங்கு வந்தது, நான் வளர்ந்த இடத்தில் நடக்கும் விழா, அங்கு சென்றால் நமக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்து யாராவது வருவார்கள், அவர்களின் உதவியோடு ஒரு 5000 வீடுகள் ஏழை மக்களுக்குக் கட்டிக் கொடுக்க வேண்டும் என எண்ணி வந்தேன்” என்றார்.

அவர் எப்படி காந்திகிராம ஸ்தாபகர் டாக்டர் சௌந்தரம் அம்மா தன்னை வளர்த்தார் என்பதை அனைவருடனும் உணர்வுடன் பகிர்ந்து கொண்டு அனைவரும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து முதுபெரும் காந்தியவாதி முன்னாள் துணைவேந்தர் முனைவர். ந.மார்க்கண்டன் எழுதிய “எனது பயனுள்ள நாட்கள்” என்ற புத்தகத்தை காந்திகிராம அறக்கட்டளை வெளியிட்டது.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வெளியிட, ராமச்சந்திர ராகிஜி பெற்றுக் கொண்டார். அப்போது உரையாற்றிய முனைவர் ந.மார்க்கண்டன், “நான் என் சுயசரிதையை எழுதவில்லை. எனக்கு அப்படியொரு ஆசையும் கிடையாது, காந்திய நிறுவனங்களில் எப்படி பணி செய்தேன் என்பதைப் பதிவு செய்ய வேண்டும் என எண்ணினேன்.

காரணம் காந்திய நிறுவனச் செயல்பாடுகளில் ஒரு தொய்வு பல இடங்களின் காண முடிகிறது. உலகம் இன்று மேற்கத்திய முறைக்கு மாற்றுத் தேடி அலைகின்றது.

இந்தியாவிலும் எண்ணற்ற இளைஞர்கள் தற்சார்பு வாழ்க்கைக்கு திரும்பிட பணி செய்ய முனைகின்றனர். அவர்களுக்கு வழிகாட்டிட வழிமுறைகள் தேவை.

எனவே காந்திய புதிய சமூக வாழ்க்கையை உருவாக்க செயல்படும் ஊழியர்களுக்கு பயன்படும் ஒரு பதிவாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சிறிய நூலை நான் இந்த வயதில் முயன்று எழுதியுள்ளேன்.

காந்தி வாழ்ந்த காலத்தைவிட, நாம் வாழும் காலத்தில் மகாத்மா காந்தி அதிகமாக தேவைப்படுகிறார். எனவே காந்தியத்தை வேகமாக முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

எங்கு பார்த்தாலும் சமூகம் சீரழிவை நோக்கிச் செல்லுகின்றபோது, சமூக மாற்றத்திற்கான பணி செய்ய சமூக ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். காந்திய நிறுவனங்கள்தான் இந்தப் பணியை முன்னெடுக்க முடியும்.

தான் தலைமையேற்று நடத்தும் இன்பசேவா சங்கம் பெல்ஜிய நாட்டுப் பெண்மணியால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று.

தமிழகத்தில் பூமிதான இயக்கத்தால் கிடைத்த பூமிதான நிலங்களை தமிழக அரசிடமிருந்து பெற்று அத்துடன் கடவூர் ஜமீனிடமும் நிலங்களைப் பெற்று சேவாப்பூரில் தாழ்த்தப்பட்ட மக்களை அந்த இடத்தில் குடியமர்த்தி பூமிதான நிலத்தை பகிர்ந்தளித்து மகத்தான காந்தியப் பணியை மேற்கொண்டார். அந்தப் பணி இன்றும் தொடர்கிறது.

கடையனுக்கும் கடைத்தேற்றம் வெற்றுப் பேச்சாலே, போராட்டத்தாலே நடைபெறாது. அது முறையான நிர்மாணப் பணியில்தான் நடைபெறும், அதை காந்திய நிறுவனத்தால்தான் முன்னெடுக்க வேண்டும். அதற்கு பெருமளவில் இளைஞர்களை நாம் ஈர்க்க வேண்டும்.

எனவே காந்திய நிறுவனங்கள் விரைந்து பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கு என் சிறிய நூல் பயன்படும் என்று கருதுகிறேன் என்று கூறி தன் உரையினை நிறைவு செய்தார்.

அந்த நூலை அறிமுகம் செய்து உரையாற்ற நிர்வாக அறங்காவலர் திரு.கி.சிவக்குமார் என்னைக் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் ஒரு நூல் அறிமுக உரையை நிகழ்த்தினேன்.

நாம் ஒரு வணிக காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அனைத்தும் வணிகமயமாக்கப்பட்டு விட்டது.

புலன்கள் கட்டவிழ்த்துவிட்டு நுகர்வில் தோய்ந்து ஒரு மயக்க வாழ்வில் அனைவரும் செயல்பட்டு பெருமளவில் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டு நிற்கும் மக்கள் பெருங்கூட்டத்தை நாம் வாழும் காலத்தில் பார்ப்பதுதான் நாம் சந்திக்கும் பெரும் சோகம்.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதனும், முனைவர் ந.மார்க்கண்டன் அவர்களும் முதல் தலைமுறை மனிதர்கள். அவர்கள் இருவரும் காந்திய உலையில் தயாரிக்கப்பட்டவர்கள்.

அவர்கள் தியாக காலத்தில் உருவாக்கப்பட்டவர்கள். ஆகையால் அவர்களின் பார்வை, செயல்பாடு அனைத்தும் தியாகப் பின்புலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

தியாக கால கனவுகள் இன்றும் அவர்களின் செயல்பாடுகளில் வெளிப்படுகின்றன. ஒருவருக்கு வயது 96, மற்றவருக்கு 86. இந்த வயதில் களத்தில் நிற்பது என்பதுதான் நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இவர்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதம் மனித வாழ்வு மனித குல வாழ்வை மேன்மைபடுத்துவதற்கானது என்ற அடிப்படையில்.

அன்று மானுட வாழ்வு சமூகத்திற்கானதாக பார்க்கப்பட்டு மனிதர்கள் வளர்க்கப்பட்டனர், வாழ்ந்து வந்தனர். இன்று அவை தனிமனித மேம்பாட்டுக்கானதாக மாற்றப்பட்டு விட்டது.

இந்தச் சூழலில் முனைவர் மார்க்கண்டன் எழுதிய “எனது பயனுள்ள நாட்கள்” என்ற புத்தகம் கிராமங்களில் தன்னார்வலராக செயல்பட விரும்பும் அனைவருக்கும் பல செய்திகளைத் தாங்கி வெளிவந்துள்ளது.

பொது வாழ்விற்கு செல்லும் அனைவரும் தங்கள் வாழ்வை இறை சக்தியிடம் அர்ப்பணித்து செயல்பட்டால், அது நமக்கு வழிகாட்டிக் கொண்டேயிருக்கும். நாம், அதைப்பின்பற்றி செயல்பட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதுதான் அந்தப் புத்தகம் தரும் செய்தி.

டாக்டர் ந.மார்க்கண்டன் அவர்கள் தன் பணியை பள்ளியில் ஆசிரியராகத் துவக்கி, காந்திய இயக்கங்களுக்குள் பணி செய்து அத்துடன் போராட்டங்களும் நடத்தி, சிறைக்கும் சென்று பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிவரை உயர்ந்தவர்.

இன்றுவரை எதாவது ஒரு பணியில்தான் இருந்து செயல்பட்டு வருகிறார். எந்தப் பணியையும் அவர் தேர்ந்தெடுத்தது அல்ல, அவர் விதி வசத்தால் அங்கு வந்து சேர்கின்றார்.

தனக்குக் கிடைத்த பதவிகள் அனைத்தையும் வைத்து தான் செயல்படும் நிறுவனத்தை சமூகத்திற்கு செயல்பட வைத்த அனுபவத்தைத் தான் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்தப் புத்தகத்தை படிக்கும்போது நமக்கு தெரிய வருவது எப்படி ஒரு மனிதர் தன் செயல்களாலே மனிதத்துவத்தில் உயர்நிலையை அடைய முடியும் என்பதைத்தான். அது மட்டுமல்ல வாழ்க்கை எப்படி நிறைவுபெறும் என்றால் மக்களுக்கு பணி செய்வதில்தான்.

வாழ்வு சமூகத்திற்கானது, நமக்கு கிடைப்பதையெல்லாம் மக்களுக்காக சேவை செய்திடும்போது வாழ்க்கை பொருளுள்ளதாக மாறிவிடுகிறது என்பதைத்தான் தங்கள் செயல்பாடுகள் மூலம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களும் முனைவர் ந.மார்க்கண்டன் அவர்களும் நமக்கு தெரிவிக்கின்றனர்.

இந்த சிறிய விழாவினை சீரிய முறையில் ஏற்பாடு செய்த காந்திகிராம அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு.கே.சிவக்குமார் அவர்கள் மற்றும் செயலர் முனைவர் பங்கஜம் அவர்கள் காந்திய அன்பர்களை அழைத்து ஒரு சடங்காகச் செய்யாமல் ஒரு பொருளுள்ள செயல்பாடாக அமைத்துத் தந்தது ஒரு பாராட்டுக்குரிய செயல். அந்த சிறிய சிறப்பான நிகழ்வு காந்திகிராம பாடலுடன் நிறைவுபெற்றது.

Comments (0)
Add Comment