சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாங்குளத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் பல குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதில், 365 வீடுகள் உள்ளன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பில் உள்ள ‘டி’ பிளாக்கில் நேற்றிரவு முதலே விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை விரிசல் அதிகரிக்கவே அச்சமடைந்த குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
குடியிருப்பில் இருந்த 24 குடும்பத்தினரும் வெளியேறிய நிலையில் காலையில் மொத்த கட்டிடமும் சடசடவென இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதேபோல் ‘சி’ பிளாக்கின் ஒரு பகுதியும் விழுந்தது. வீடுகள் அனைத்தும் இடிந்து மண்மேடாக காட்சியளிக்கிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டும் புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், உடமைகளை இழந்து நிற்கும் அனைவருக்கும் தேவையான உணவு, உடை மற்றும் தங்கும் இடம் உடனே வழங்க வேண்டும் எனவும், நிவாரணத் தொகையை உயர்த்தித் தர வேண்டும் என்றும் திருமதி வி.கே.சசிகலா அவர்கள் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சென்னை திருவொற்றியூர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் உள்ள 24 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.
கடவுளின் அருளால் தங்கியிருந்தவர்கள் முன்பே கட்டிடத்தை விட்டு வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆனால், இங்கு குடியிருப்பவர்கள் அனைவரும் தங்கள் உடமைகள் அனைத்தையும் இழந்து நிர்கதியாய் இருக்கின்றனர்.
தற்போது, அரசு கொடுத்துள்ள இந்த இழப்பீட்டுத் தொகை அவர்களுக்கு எந்த விதத்தில் போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை.
அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை மற்றும் தங்கும் இடம் போன்றவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதே போன்று, வேலூர் மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதாகவும், இதில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த குடியிருப்பில் உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதோடு, அந்தப் பகுதியை சேர்ந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.
மேலும், குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்த மிகவும் பழைமையான குடியிருப்புப் பகுதிகளை கண்டறிந்து தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.