தங்கம் ஒரு மாயை என்று சொல்லும் ‘மனிஹெய்ஸ்ட் சீசன் 5’!

ஒரு நாவல் போல கதை சொல்லும் கலை கைவந்தால், ஒரு அற்புதமான வெப்சீரிஸ் வசப்படும். அதற்கென இலக்கணம் வகுத்த படைப்புகளுள் ஒன்றாகியிருக்கிறது ‘மனிஹெய்ஸ்ட்’.

முதல் 4 சீசன்கள் பெருவரவேற்பை நெட்பிளிக்ஸில் பெற்ற நிலையில், இதன் 5ஆவது சீசன் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வெளியானது.

இதற்குக் கிடைத்த வரவேற்பு, உலகம் முழுக்கவிருக்கும் ரசிகர்களைக் குறிவைத்து படைப்புகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தைத் தந்துள்ளது.

முதல் கதை போலவே, இக்கதையிலும் சில கதாபாத்திரங்களின் எழுச்சியும் சிலவற்றின் மரணமும் வடிக்கப்பட்டுள்ளது. கதை சொல்லியாக வரும் டோக்கியோவின் மறைவும் அந்த வரிசையில் இணைந்திருப்பது எதிர்பாராத அதிர்ச்சி.

புரபசரின் என்ட்ரி!

பேங்க் ஆஃப் ஸ்பெயின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் 90 டன் தங்கத்தையும் புரபசர் செர்ஜியோ மார்கினாவின் ஆட்கள் உருக்கி சிறு மணிகளாக மாற்றுகின்றனர். கவர்னரின் பாதுகாப்பாளர் காண்டியா நைரோபியைக் கொன்றபிறகு, டோக்கியோவினால் பிடிக்கப்படுகிறார்.

புரபசரின் மனைவி லிஸ்பன் போலீஸ் பிடியிலிருந்து விலகி, நேராக பேங்க் ஆஃப் ஸ்பெயினுக்குள் நுழைகிறார். புரபசர் மறைந்திருக்கும் இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலிசியா சியாரா செல்கிறார்.

சீசன் 4இல் இடம்பெற்ற இந்நிகழ்வுகளை அடுத்து நடைபெறும் சம்பவங்களைச் சொல்கிறது ‘மனிஹெய்ஸ்ட் சீசன் 5’.

புரபசரின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அலிசியா, அங்கு வரும் மனிலாவின் தந்தை பெஞ்சமினையும் மார்செய்லியையும் கட்டிப் போடுகிறார். அப்போது, நிறை மாத கர்ப்பிணியான அலிசியாவின் பனிக்குடம் உடைகிறது.

அலிசியாவிடம் புரபசர் மாட்டிக்கொண்டது பேங்க் ஆஃப் ஸ்பெயினில் இருக்கும் அவரது ஆட்களுக்குத் தெரிய வருகிறது. காண்டியாவை விடுவிப்பதற்காகவே, ஸ்பெயின் நாட்டுத் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் கர்னல் தமாயோவைத் தொடர்பு கொள்கிறது அக்குழு.

அப்போது, அலிசியாவினால் புரபசர் பிடிக்கப்பட்ட விவரம் அரசுக்குத் தெரியவராமல் இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

அலிசியாவுக்கு பெண் குழந்தை பிறக்க, உருக்கப்பட்ட தங்கம் வங்கியில் இருந்து வெளியேற்றப்படத் தயாராக இருக்க, முறையற்ற தாக்குதல்களை மேற்கொள்ளும் ராணுவக் குழுவொன்று வங்கியின் மேற்பரப்பில் இறங்க, எந்நேரமும் முரட்டுத்தனமான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு பேங்க் ஆஃப் ஸ்பெயினில் அடைக்கப்பட்டிருக்கும் பிணையக் கைதிகளை வெளிக்கொணரும் சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், ராணுவத்தினரை எதிர்க்கும் நடவடிக்கையில் டோக்கியோ தன்னுயிரை இழப்பதோடு இந்த சீசனின் முதல் பாகம் நிறைவடைகிறது.

இரண்டாவது பாகத்தில் அலிசியா தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தப்பிக்க, அவரைத் தேடியோடும் புரபசர் நேராக பேங்க் ஆஃப் ஸ்பெயின் வாசலுக்கு வந்து நிற்கிறார். தானாக முன்வந்து சரணடைகிறார். உள்ளே நுழைந்தவர்கள் வெளியே உயிருடன் வர முடியாது எனும் வாதங்களை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

உருக்கி எடுக்கப்பட்ட தங்கம் மொத்தமாக ஓரிடத்தில் சேர்க்கப்பட, அது வேறொரு கும்பலால் திருடப்படுகிறது. அது எங்கிருக்கிறது, உள்ளே இருந்த புரபசரின் குழுவினர் உயிருடன் மீட்கப்பட்டார்களா என்பதுடன் இந்த சீசன் முடிவடைகிறது.

வித்தியாசமான கமர்ஷியல் படைப்பு!

வழக்கமான ஆக்‌ஷன் சீரிஸ்களில் துப்பாக்கி சத்தமும், புத்திசாலித்தனமான முடிவெடுக்கும் திறனும், விறுவிறுப்பூட்டும் திரைக்கதை அமைப்பும், வித்தியாசமான பாத்திர வடிவமைப்பும் நிரம்பியிருக்கும்.

‘மனிஹெய்ஸ்ட்’டில் அவற்றைத் தாண்டி, வழக்கத்திற்கு மாறான சில விஷயங்கள் பேசப்படுவது மிகச்சிறப்பு.

உதாரணமாக, ஒரு நாட்டின் தங்க இருப்பு அதன் பொருளாதார வளத்தைக் குறிக்கும் என்பதற்கு மாறாக, அது ஒரு மாயை என்று சொல்லும் காட்சி இத்தொடரில் வருகிறது.

அந்த தங்கம் உண்மையா இல்லையா என்பதை அறியாமலேயே அந்நாட்டின் பொருளாதாரம் வடிவமைக்கப்படுவதாகக் கூறப்படுவதைப் பார்க்கையில் சிலிர்க்கிறது.

பொருளாதார அரசியலுக்கும் சாமான்ய மனிதர்களின் வாழ்வுக்குமான பிணைப்பு ஒரு மாயச்சங்கிலி என்பதும் உணர்த்தப்படுகிறது.

முதல் சீசனில் இறந்து போகும் பெர்லினுக்கு மரியாதை செலுத்தும்விதமாக, அவர் மனதில் இருக்கும் கொள்ளை திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த உழைக்கிறார் புரபசர் செர்ஜியோ மார்கினா. முதல் கொள்ளை நிகழ்ந்த 24 மணி நேரங்களில் இச்செயலைச் செய்யத் தொடங்குவதாகக் கூறுமிடம், ஒரு லட்சியத்தின் வீரியம் எத்தகையது என்பதை விளக்குகிறது.

மிக முக்கியமாக, மகன் ரஃபேல் காதலிப்பது தனது இளம் மனைவி தத்தியானா தான் என்று பெர்லின் அறியுமிடத்தைக் காட்டியிருப்பது அழகு. பெர்லின் எப்படி கைது செய்யப்பட்டார் என்று முதல் சீசனில் ஒரு வரியில் சொன்ன வசனத்திற்கு இப்படியொரு பின்னணியை யோசித்திருப்பது திரைக்கதை குழுவினரின் உழைப்பை வெளிப்படுத்துகிறது.

தான் காதலிப்பது மணிலாவையா, ஸ்டாக்ஹோமையா என்று டென்வர் குழம்பும் இடம் அருமை. பாலின மாற்று அறுவைச்சிகிச்சை மேற்கொண்ட மணிலாவை பெஞ்சமின் ஏற்றுக்கொள்வதும் அப்படித்தான்.

இறுதியாக, நேர்மறை எண்ணம் என்பது எப்போதும் ஏதோ ஒரு வகையில் நம்முடன் துணையாக நிற்கும் என்பதைக் காட்டியிருப்பது நம்பிக்கையற்ற வாழ்க்கைச்சூழலில் நல்லெண்ணத்தை விதைக்கிறது.

அரசு எந்திரம் கிளர்ச்சியாளர்களை அடக்கும் விதம் எப்படிப்பட்டது என்பதை தமாயோ விளக்கும்போதெல்லாம், அப்பாத்திரத்தின் வில்லத்தனத்தையும் மீறி சிரிப்பு மேலிடுகிறது. நெட்பிளிக்ஸில் வெளியானதால் மட்டுமே இத்தகைய கருத்து சுதந்திரம் சாத்தியமாகி இருக்கிறது.

தொடர்ந்துவரும் தோல்விகளில் இருந்து விடுபடத் துடிக்கும் எவரும் இந்த படைப்பைப் பார்த்தால் கொஞ்சமாவது நம்பிக்கை பெறுவார்கள் என்பது திண்ணம்.

மீண்டுமொரு வரலாறு!

எந்த நேரமும் ஏதோவொன்று ‘வைரல்’ ஆகலாம் என்ற அதிவேக வாழ்க்கையில், மறக்க முடியாத வரலாறாக ஆவதெல்லாம் ஒரு கனவு. அப்படி வரலாற்றைப் படைக்க முயற்சித்தவர்களின் உணர்வெழுச்சியைச் சொல்வதே ‘மனிஹெய்ஸ்ட்’டின் வெற்றி.

முதல் நான்கு பாகங்களை விட இந்த சீசனில் வழக்கமான சீரியல்தனம் கொஞ்சம் அதிகம். மிகமுக்கியமாக, ஏதோ ஒன்று நிகழ்ந்தால் ஒவ்வொரு பாத்திரத்தையும் மாற்றி மாற்றி குளோஸ்அப்பில் காட்டியிருக்கின்றனர்.

சென்டிமெண்ட், காதல் மற்றும் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளின் நீளம் அதிகம்.

அதையும் மீறி புரபசர் மேற்கொள்வதாக அமைக்கப்பட்ட புத்திசாலித்தனமான உத்திகளே இதன் விறுவிறுப்பைத் தக்க வைத்திருக்கிறது.

புரபசராக நடித்த அல்வரா மார்ட்டேவுக்கு இது ஒரு கனவு பாத்திரம். இதன் சாயலில் உலகம் முழுக்க இனி பல படைப்புகள் வரும் என்றான நிலையில், இதை மறக்குமளவுக்கு வேறு பாத்திரங்களில் அவர் ஜொலிப்பது மிகக்கடினமான விஷயம்.

இதில் நடித்த உர்சுலா கார்பெரோ, இட்ஸியர் இடுனோ, மிக்கேல் ஹெரான், ஜேமி லாரண்ட், எஸ்தர் அஸ்போ, ரோட்ரிகோ டி லா செர்னா, நஜ்வா நிம்ரி, என்ரிக் ஆர்ஸ் மட்டுமல்லாமல் தமாயாவோ நடித்த பெர்னாண்டோ காயோவும், காண்டியாவாக வரும் ஜோஸ் மேனுவல் போகாவும் கூட நம் மனதில் ஒட்டிக்கொள்கின்றனர்.

மனிஹெய்ஸ்ட்டின் தொழில்நுட்ப அம்சங்களும் கூட, இனிவரும் படைப்புகள் பலவற்றில் கண்டிப்பாகத் தாக்கத்தை உருவாக்கும்.

‘மனிஹெய்ஸ்ட்’டுக்கு அடுத்த பாகம் உண்டா இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரிய வேண்டாம்.

இதன் காட்சியனுபவத்தை, தாக்கத்தை, உலகம் முழுக்க உருவாக்கிய எழுச்சியை இன்னொன்று தருமா என்பதற்குப் புதிய படைப்பாளர்களை விடை தேட வைத்திருப்பதே இத்தொடரின் மாபெரும் வெற்றி!

-பா.உதய்

Comments (0)
Add Comment