ஆனந்தம் விளையாடும் வீடு – குடும்பத்தோடு காண!

சீரியல்கள் கூட வில்லன்களையும் பழிவாங்குதலையும் நம்பி களமிறங்கும் காலகட்டத்தில், ஒரு குடும்பத்தில் நிகழும் தவறான புரிதல்களையும் உணர்வெழுச்சிகளையும் பொங்கும் பாசத்தையும் அகன்ற திரையில் பார்ப்பது நிச்சயம் அரிதான விஷயம்.

‘குடும்பத்தோடு சேர்ந்து படம் பார்த்து எத்தனை நாளாச்சு’ என்று தியேட்டருக்கு வருபவர்களை நெளிய வைத்து பாதியிலேயே கிளம்பச் செய்யாமல் இருக்கவே பெரிதாக மெனக்கெட வேண்டியிருக்கிறது.

இந்தச் சூழலில், முழுக்க முழுக்க குடும்பச் சித்திரம் வந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு திரைப்படமாக அமைந்திருக்கிறது ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.

குடும்பக் கதை!

ஒரு ஊரில் ஒரு பெரிய மனிதர். அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி மரணமடைய, இளைய மனைவி மட்டும் கணவரோடு வாழ்கிறார்.

மூத்த மனைவிக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். இளைய மனைவிக்கு 4 மகன்கள். ஒவ்வொருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர்.

ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் போல இச்சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை மேலோட்டமாகத் தென்பட்டாலும், வழக்கம்போல மூத்தார் மனைவி பிள்ளைகள் என்ற பாகுபாடு அக்குடும்பத்தை ஆட்டிப் படைக்கிறது.

இதற்கு நடுவே, அந்த குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை பெண்ணுக்கு திருமணம் நடைபெறுகிறது.

அவரது பிரசவம் தாய் வீட்டில் நிகழ வேண்டுமென்பதற்காக, புதிதாக ஒரு வீடு கட்டத் தீர்மானிக்கப்படுகிறது.

அந்த வீட்டில் ஒட்டுமொத்தமாக அந்த பெரிய மனிதரின் வாரிசுகள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்தால் எப்படியிருக்கும் என்ற கனவை மெய்ப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. சில, பல எதிர்ப்புகளை மீறி அது நிகழ்ந்ததா இல்லையா என்பதே படத்தின் முடிவு.

ஒரு குடும்பத்தில் இரண்டு டஜன் பாத்திரங்கள் நடமாடும்போது, அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து கேமிரா முன்பு நிறுத்துவது முடியாத காரியம். முடிந்தவரை, அனைத்து பாத்திரங்களும் நம் மனதில் பதியுமாறு காட்சிப்படுத்தியிருப்பது இப்படத்தின் சிறப்பு.

தேவையற்ற ஹீரோயிசம்!

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படத்தின் முதல் அடையாளம் சேரனும் சரவணனும்தான். படிய வாரிய தலையுடன் தோன்றும் காட்சிகளிலெல்லாம் அமைதியே வடிவாக காட்சி தருகிறார் சரவணன். கிளைமேக்ஸில் வரும் ஒரு ஷாட் மட்டுமே அவரது ஜோடியாக வருவது மவுனிகா என்பதை நமக்கு உணர்த்துகிறது.

சேரனுக்கு இதில் வழக்கமான வேடம். ஆனாலும், அவரது நடிப்பு சலிப்பை ஏற்படுத்தவில்லை. அவரது ஜோடியாக வரும் சூசன், மீண்டும் ‘மைனா’வை நினைவுபடுத்துகிறார்.

இவ்விரு ஜோடிகள் தவிர்த்து விக்னேஷ், சுஜாதா, சினேகா, சவுந்தரராஜன், முனீஸ்ராஜ், ‘நக்கலைட்ஸ்’ செல்லா, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் என்று பலர் வந்து போகின்றனர். வயதான தம்பதிகளாக வரும் ஜோ மல்லூரி – தனம் இருவரும் மதுரை பாஷை பேசும்போது உறுத்தலாகத் தெரியவில்லை.

சினேகன் குடும்பத்தைக் காட்டும் காட்சிகள் மட்டும் திரைக்கதையை விட்டு விலகி நிற்பதைத் தவிர்த்திருக்கலாம். வில்லனாக வரும் டேனியல் பாலாஜி, நமோ நாராயணா வழக்கம்போல தங்கள் நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

தொடக்கத்தில் கவுதம் கார்த்திக் – ஷிவாத்மிகா ராஜசேகர் ஜோடி இடம்பெற்ற காட்சிகளைப் பார்த்ததும் வந்த பயம், இதர குடும்ப உறுப்பினர்களின் மோதலுக்குப் பிறகு காணாமல் போகிறது. கதையோட்டத்திற்குச் சம்பந்தமில்லாத காட்சியமைப்போடு இருந்தாலும், ‘நீ என் உசுரு புள்ள’,  ‘கட்டி கரும்பே கட்டிக்கத்தானே’ பாடல்களில் கவுதம் – ஷிவாத்மிகாவின் துள்ளல் நம்மையும் ஒட்டிக்கொள்கிறது.

2000த்தில் வெளியான ‘ஆனந்தம்’, எப்போதும் புத்துணர்ச்சியைத் தரும் குடும்பச் சித்திரங்களில் ஒன்று. அதில் கூட, வழக்கமான பாசம் சார்ந்த உணர்வெழுச்சியிலிருந்து வேறுபடும் வகையில் ஒரேயொரு சண்டைக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

சகோதரர்கள் நால்வரும் ஒரே நேரத்தில் வேட்டி கட்டும் ஷாட் மட்டுமே ‘பில்டப்’போடு அமைந்திருக்கும்.

டைட்டிலில் ‘ஆனந்தம்’ இடம்பெற்றிருக்கும் இப்படமும் கூட, அதே டைப் ‘சகோதர’ பாசத்தைக் காட்டுகிறது. ஆனால், கவுதம் கார்த்திக் மட்டும் கதைக்குச் சம்பந்தமேயில்லாமல் பாய்ந்து பறந்து சண்டையிடுகிறார். திரையில் அவர் வெளிப்படுத்தும் ஹீரோயிசம் தேவையற்றதாக அமைந்துள்ளது.

விழாக்கால அனுபவம்!

பாலபரணியின் ஒளிப்பதிவு சில காட்சிகளை ‘ரிச்’ ஆகவும், சிலவற்றை மிகச்சாதாரணமாகவும் காட்டுகிறது. கொரோனா கால கட்டுப்பாடுகளோ அல்லது படப்பிடிப்புத்தளத்தில் இருந்த தினசரிச் சூழலோ அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனாலும், அனைத்து நடிகர் நடிகைகளையும் பெரும்பாலான பிரேம்களில் அடக்க வேண்டிய கட்டாயத்தைத் திறம்படச் சமாளித்திருக்கிறார்.

ஸ்ரீகாந்த் என்.பி.யின் படத்தொகுப்பு ரசிகர்கள் காண வேண்டியவற்றைச் சரியாக வரிசைப்படுத்தியிருக்கிறது.

சாஹுவின் கலையமைப்பு கமர்ஷியல் திரைப்படத்திற்கேற்ப கலர்ஃபுல்லாக ஒவ்வொரு பிரேமையும் காட்ட உதவுகிறது.

சித்துகுமாரின் பாடல்களும் பின்னணி இசையும், 90களில் வெளிவந்த ஒரு வெற்றிப் படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால், ஹீரோயிச காட்சிகளுக்கான பின்னணி இசையில் மட்டும் கவனம் செலுத்தாதது ஏனோ!?

’ரவுடி பேபி’யை நினைவுபடுத்தினாலும், ‘கட்டிக் கரும்பே’ பாடல் துள்ளாட்டம் போட வைக்கிறது.

’நீதான் என் உசுரு புள்ள’ அருமையான ரொமாண்டிக் மெலடி என்றால், ‘சொந்தமுள்ள வாழ்க்கை’யும் ‘சொந்தத்திற்குள் சூழ்ச்சி’யும் திரைக்கதையில் அமைந்த உணர்வுப் பிரவாகத்திற்குத் துணை நிற்கின்றன.

வழக்கமான கதை என்றாலும், காட்சிகள் புதிதல்ல என்றபோதும், முழுப்படமும் எங்கும் தொய்வின்றி இருக்கும் வண்ணம் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் நந்தா பெரியசாமி.

ஒரு வீட்டைக் கட்டும்போது எந்த வகையிலெல்லாம் வில்லங்கம் வரும் என்பதிலும் கவனம் காட்டியிருந்தால், திரைக்கதையில் இன்னும் கூட சில திருப்பங்களைப் புகுத்தியிருக்கலாம்.

ஆனாலும், குடும்ப உறுப்பினர்களின் தவறான புரிதல்கள், அவற்றுக்கான தீர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்திருக்கிறார் இயக்குனர்.

கடந்த இருபதாண்டுகளில் வெளியான திரைப்படங்களில் ‘ஆனந்தம்’ படத்திலிருந்து பெருமளவு வேறுபட்டு வெற்றியைச் சுவைத்தது ‘மாயாண்டி குடும்பத்தார்’.

அப்படியொரு கறிசோறு விருந்தை எதிர்பார்த்தவர்களுக்கு கல்யாண சாப்பாடை தந்திருக்கிறது ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.

கொஞ்சம் ஏமாற்றம்தான் என்றாலும், விழாக்கால கொண்டாட்ட மனோபாவத்திற்கு எந்த பங்கமும் இல்லை. அதுவே இப்படத்தின் வெற்றி!

-பா.உதய்

26.12.2021 12 : 30 P.M

Comments (0)
Add Comment