திரையிடுவதற்கு முன்பே பல விருதுகளை வென்ற ‘லேபர்’!

திரைப்பட விழாக்கள் பலவற்றில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகளைக் குவித்துக் கொண்டிருக்கிற படம் ‘லேபர்’.

கட்டடத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்குள் ஊடுருவி, அவர்கள் சந்திக்கும் வலியை  உயிரோட்டமான காட்சிகளாக விளக்கியிருக்கிறது ‘லேபர்’.

குடிகாரர்களால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் சீரழிவதையும், கூடவே திருநங்கையரின் வாழ்க்கை முறையையும் இதுவரை யாரும் சொல்லாத விதத்தில், பேசாத பதத்தில் பெரிய அளவில் பேசியிருக்கிறது இந்தப் படம்.

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் பெரிதாய் கையாளாத கதைக்களம். படத்தை இயக்கியிருக்கிற சத்தியபதி, கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் பகுதி நேர செய்தித் தொடர்பாளராக இருந்தவர்.

தொழிலாளர்களுடன் கலந்து பழகிய நேரடி அனுபவம், படத்தை முடிந்தவரை யதார்த்தமாக கட்டமைக்க அடித்தளம் அமைத்திருக்கிறது.

மூன்று தொழிலாளர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் படத்தின் கதை.

அப்பாவிகளிடம் பணம் வாங்கி ஏமாற்றும் நபர், ஏழை எளிய மக்களிடம் இருக்கிற மனிதாபிமானம், திருநங்கைகளுக்கு சமூகம் தருகிற அவமானம் என பல விஷயங்களை அலசுகிற திரைக்கதை.

கதை நாயகன் முத்து அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அவரது இயல்பான நடிப்பு படத்துக்கு கான்கிரீட் பலம்!

கட்டடத்தின் உறுதிக்கு உதவும் முறுக்குக் கம்பிபோல், கதைநாயகி சரண்யா ரவிச்சந்திரன் தோற்றமும் நடிப்பும் கதையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது!

சிமெண்டோடு ஒட்டிக் கொண்டு கட்டடத்தை இறுக்கிப் பிடிக்கும் கருங்கல்லாய் இருக்கிறது திருநங்கை ஜீவா சுப்ரமணியம் ஏற்றிருக்கும் பாத்திரமும் அவரது நடிப்பும்.

கனமான கதைக்களத்தை தாங்கும் தூண்களில் ஒன்றாய் ஆறுமுகன் முருகனின் கதாபாத்திரம் அத்தனை ஸ்ட்ராங்! இவர்களோடு பெரோஸ்கான், கமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிஜத்தில் கட்டுமானப் பணிகள் நடக்குமிடத்திலேயே காட்சிகளைப் படமாக்கியிருப்பது கதையோட்டத்துக்கான வலுவான அஸ்திவாரம்!

படத்தின் பின்பாதியின் சில காட்சிகளுக்கு மட்டும் கனம் தந்திருக்கிறது நிஜில் தினகரனின் பின்னணி இசை. ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு கணேஷ்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஆவணப் படத்திற்கான அம்சங்களை வைத்துக் கொண்டு, வெகுஜனத்திற்கான கலைப்படைப்பாக உருவாக்க முயற்சித்திருப்பதற்காக இயக்குநர் சத்தியபதியைப் பாராட்டலாம்!

100 நிமிடம் மட்டுமே ஓடும் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவும் செய்து இயக்கியுள்ளார் சத்தியபதி. அத்தனை வேலைகளையும் கச்சிதமாக செய்திருப்பதற்காக அவருக்கு இன்னொரு பாராட்டு!

பலரது கடுமையான கூட்டு முயற்சியால் உருவாகியுள்ள ‘லேபர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் தயாரிப்பாளர் சங்கப் பிரதிநிதி கே.ராஜன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் சங்கப் பிரதிநிதிகள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, திருமலை உள்ளிட்டோர் முன்னிலையில் டிரைலர் திரையிடப்பட்டது.

டிரைலரில் இடம்பெற்ற காட்சி ஒன்றில், கதாநாயகி உடன் இருக்கும் ஒரு வட இந்திய தொழிலாளியைப் பார்த்து “எனக்கு நீ இந்தி கற்றுத் தருகிறாயா.?!” என கேட்பது போன்று வரும் வசனம் பெரும் பரபரப்புபை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களை இந்தி கற்றுக்கொள்ளத் தூண்டுவதாகவும், அப்படி இந்தி கற்றுக்கொள்வது ஒன்றும் தவறில்லை என்று வலியுறுத்துவது போன்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு படி தான் ‘லேபர்’ திரைப்படம் என்ற ரீதியில் விமர்சனங்கள் வெளியாகி சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், பிஜேபி பிரபலமும் நடிகையுமான காயத்ரி ரகுராமும், ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ பட இயக்குநர் மோகன்.ஜியும் இப்படத்தின் டிரைலரை ரீ-டுவிட் செய்து இருப்பதால், தமிழக அரசியலின் கவனம் தற்போது ‘லேபர்’ திரைப்படம் மீது திரும்பியுள்ளது.

வெளியாவதற்கு முன்பே விமர்சனங்களால் பரபரப்பை உருவாக்கி, மக்களிடம் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள ‘லேபர்’ திரைப்படம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

*

Comments (0)
Add Comment