இயேசு எனும் புரட்சியாளர்!

உலகம் முழுக்கப் புரட்சியை விதைத்தவர்களே கொண்டாடப்பட்டிருக்கின்றனர். வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அதுவே நிரூபணமாகியிருக்கிறது.

இன்றைய தலைமுறை சே குவேராவை தெரிந்தும் தெரியாமலும் கொண்டாடக் காரணமும் புரட்சியின் மீதான வேட்கைதான். அடுத்தடுத்த தலைமுறையிலும் அது தன் வேரைப் பாய்ச்சும்.

சில நேரங்களில் அந்த வேட்கை மங்கினாலும், அடுத்ததாக இன்னொரு புரட்சியும் அதனை விதைத்தவரும் கொண்டாடப்படுவது நிகழும்.

கட்டப்படுவதும் கட்டவிழ்ப்பதும் தொடர்ந்து இந்த உலகில் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

அந்த வகையில், இருபது நூற்றாண்டுகளைத் தாண்டி போற்றப்படும் ஒரு புரட்சியாளர் தான் ‘இயேசு கிறிஸ்து’.

பொருந்தும் ஒற்றுமைகள்!

எந்தவொரு சமூகமும் கண்மூடித்தனமாகச் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றும்போது, அதனை மீறுவதற்கும் தகர்ப்பதற்கும் சில முயற்சிகள் நிகழும்.

மனிதர்களுக்கு இடையேயான பேதங்கள் களையப்படும். அனைவரும் ஒன்று என்று போதிக்கப்படும்.

ஒடுக்கப்பட்டோரும் விளிம்புநிலை வாழ்க்கையைக் கொண்டவர்களும் சக மனிதர்களால் சமத்துவத்துடன் பார்ப்பதற்கான சூழல் உருவாக்கப்படும்.

கலாச்சாரக் கூறுகளில் இருக்கும் மூடநம்பிக்கைகள் அகற்றப்படும்.

கண்ணுக்குத் தெரியாமல் மனிதர்களைப் பீடித்திருக்கும் கட்டுகள் மெல்ல நீங்கும்.

இயேசுவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கவனித்தால், இவையனைத்தும் பொதிந்திருப்பதைப் பார்க்கலாம்.

ஒரு பேரரசின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்தார். விலை மகளிருக்கும் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டபோது, அவர்களைத் தனது மக்களாக ஏற்றுக்கொண்டார்; அவர்களை பாவமிக்கவர்களாகக் கருதும் மனோபாவத்தை உடைக்க முயற்சித்தார்.

யூத மதத்தின் வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாட்டு முறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட கட்டுக்கடங்காத கட்டுப்பாடுகளை மீறினார். நாட்டு மக்களுக்கு எதிரான விதிகளை, செயல்பாடுகளை எதிர்த்தார்.

ஓரிடத்தில் மட்டுமல்லாது, சுற்றியிருந்த பகுதிகள் அனைத்துக்கும் பயணம் செய்தார். அங்கிருந்த அரசுப் பிரதிநிதிகளோடு முரண்பட்டு, அம்மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டார்.

வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட சர்வாதிகாரத்தின் முன்னால் அகிம்சையை வெளிப்படுத்தினார்.

வழக்கத்திற்கு மாறான சிந்தனைகள் மேலோங்கும்போது, அது பெருவாரியான மக்களால் கொண்டாடப்படும் அல்லது அரசு எனும் எந்திரத்தின் பிடியில் சிக்காமல் தப்பிப்பதற்காகப் பெரும்பாலான மக்களால் அலட்சியப்படுத்தப்படும். இரண்டுமே இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்தன.

முடிவில், ஒரு கொடூர மரணத்தின் மூலமாகப் பெருவாரியான மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் விதமாக அவர் சிலுவையில் அறையப்பட்டார்.

இது, வீரியமிக்க சிந்தனையாளரைக் கொல்லும் நடவடிக்கையன்று; அவரைப் பின்பற்றுபவர்களின் நம்பிக்கையைச் சிதைத்தொழிப்பதே இதன் நோக்கம்.

எத்தனை புரட்சியாளர்கள்..!

கௌதம புத்தர், மகாத்மா காந்தி, சே குவேரா என்று நம் நினைவலைகளில் தவழும் சிந்தனையாளர்கள் அனேகம். இவர்கள் தவிர, மிகச்சில நபர்கள் மட்டுமே அறிந்த புரட்சியாளர்களும் இவ்வுலகில் உண்டு.

அவர்கள் அத்தனை பேரையும் இணைக்கும் ஆதார இழை ஒன்றுதான். சக மனிதர்களின் கண்ணீரையும் வருத்தங்களையும் துடைக்கத் துடித்தவர்கள்.

மற்றவர்களது துயரங்களை நீக்கப் பாடுபட்ட வள்ளலாரும் சாய்பாபாவும் மகாவீரரும் கூட இத்தகைய வாழ்க்கைமுறையைக் கொண்டவர்கள்தாம்.

இயேசுவின் வாழ்க்கையையும் அவரது கருத்துகளையும் சொல்லும் பைபிளின் ஒவ்வொரு பகுதியிலும் அதுவே நிறைந்திருக்கிறது.

மிக முக்கியமாக, காலவோட்டத்திற்கு ஏற்ப மாற்றங்களை நிகழ்த்த அவர் ஆசைப்பட்டிருப்பது நன்றாகத் தெரியும்.

அது மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களில் பலர் மிக இளையவர்கள். கால வேறுபாடுகளை மீறி அடுத்த தலைமுறையை ஈர்ப்பதென்பது சுதந்திரம் நோக்கிய பயணத்தினால் மட்டுமே சாத்தியம்.

மதங்களை தாண்டி..!

இளமைக்காலத்தில் ஒருவர் பெறும் அனுபவங்கள்தாம் சுயநலமிக்க தனி மனிதனாகவோ அல்லது சக மனிதர்களுக்குத் தோள் கொடுக்கும் பொதுநலவாதியாகவோ மாற்றும்.

அவை பற்றிய விவரக் குறிப்புகள் பின்னாட்களில் மறக்கப்பட்டு, புரட்சிக்காலம் மட்டுமே நினைவுகூரப்படும். இயேசுவின் வாழ்க்கையிலும் அதனைக் காண முடியும்.

மிக முக்கியமாக, தன்னை விட தனது சிந்தனைகளே மக்களிடம் நிலைக்க வேண்டுமென்று விரும்பினார் இயேசு.

இன்றும் அது நிகழ்ந்து கொண்டிருப்பது, அவர் ஒரு புரட்சியாளர்தான் என்பதை நமக்குணர்த்தும்.

இன்னும் பல சிந்தனையாளர்களும் அவர்களது அடையாளங்களும் அப்படி கைக்கொள்ளப்படுவது, இயேசு நிகழ்த்திய புரட்சி எத்தகையது என்பதைப் புரிய வைக்கிறது.

தலைவர்களின் சிலைகளை, அவர்கள் குறித்த புத்தகங்களை, கேள்விப்படும் தகவல்களைக் கொண்டு, எத்தகைய புரட்சியை அவர்கள் கைக்கொண்டார்கள் என்று சிந்திப்பதுண்டு.

அந்த வரிசையில், மதங்களைத் தாண்டி கொண்டாடப்பட வேண்டிய சிந்தனையாளராகவும் புரட்சியாளராகவும் பின்பற்றத்தக்க முன்னோடியாகவும் இருப்பவர் இயேசு.

இன்றைய நடப்பு இருபத்தோரு நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட சாதனையின் மகத்துவத்தைத் தானாகத் தெரிய வைக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துமஸ் அன்று அந்த மறுமலர்ச்சியை எண்ணி வியக்கிறேன்..!

-பா.உதய்

24.12.2021  5 : 30 P.M

Comments (0)
Add Comment