விவசாயிகள் நாட்டின் கண்கள்!

டிசம்பர் 23- தேசிய விவசாயிகள் தினம்

காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து பழங்களைப் பொறுக்கியெடுத்து, கிழங்குகளைத் தோண்டியெடுத்து, எதிர்ப்பட்ட விலங்குகளை உரித்தெடுத்து, நெருப்பில் வாட்டித் தின்ற காலத்திற்குப் பிறகு, ஏதோவொரு கணத்தில் ஒரு பயிரை வளர்த்தெடுத்துப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் மனிதனிடத்தில் தோன்றியிருக்க வேண்டும்.

அன்று முதல் பயிர் செய்யும் பரப்பை விரிவாக்குவதும், செழிப்பு மிகுந்தபிறகு பயிராக்கிய இடத்தில் கட்டடங்களை அடுக்குவதும் வழக்கங்களாக மாறியிருக்க வேண்டும்.

அந்த புள்ளியில் தொடங்கி, இன்று பல்வேறு தொழில்கள் இவ்வுலகில் கிளை விரித்துவிட்டன. அவற்றுள் முதலிடம் வகிப்பது விவசாயம் மட்டுமே. ஆனாலும், விவசாயிகளுக்கு உரிய பொருளாதார நலன்களோ, சமூகத்தில் அவர்களுக்கான தனித்துவமிக்க இடமோ கிடைப்பதில்லை என்பதே யதார்த்தம்.

விவசாயிகளின் நண்பன் யார்?

உலகம் முழுக்கப் பல்வேறு வகைகளில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. துண்டு நிலம் முதல் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு வரை பயிரிடுதல் மேற்கொள்ளப்படுகிறது. சில மாத காலம் முதல் பல ஆண்டுகள் வளரும் பயிர்கள் வரை வளர்த்தெடுக்கப்படுகின்றன.

ஒவ்வொன்றுக்கும் தொடக்கப்புள்ளி முதல் அறுவடை செய்த பலன்களை விற்பனைக்குக் கொண்டு செல்வதுவரை, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்குப் பிரசவிக்கும் வேதனைதான்.

ஒருகாலத்தில் மண்ணின் ஊடே புகுந்து புறப்படும் மண்புழுக்களை ‘விவசாயிகளின் நண்பன்’ என்று சொல்வார்கள். நிலத்தடி நீரும் கீழிறங்கி, விவசாய நிலங்களும் வீடு கட்டுவதற்கான மனைகளாக மாறிவரும் இந்நாட்களில் மண்புழுக்களைக் காண்பதே அரிதாகிவிட்டது.

இந்தச் சூழலில் பயிரைப் பாழாக்கும் பூச்சிகள் முதல் விவசாயிகள் நலனைப் பாதிக்கும் அரசின் கொள்கைகள் வரை எதிரிகளின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறதே தவிர, நண்பர்கள் என்றளவில் விரல் விட்டு எண்ணுமளவுக்கே நலன்கள் இருந்து வருகின்றன.

மூன்று வேளாண் மசோதாக்கள் மத்திய அரசினால் திரும்பப் பெறப்பட்டபிறகு, விவசாயிகளுக்கே அவர்களே துணை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதாவது, வலுவான விவசாய சங்கங்களே அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கான குரல்வளையாக மாறியிருக்கின்றன.

இந்தச் சூழலில், விவசாயிகளை நோக்கி நாட்டு மக்கள் பரிதாபங்களை விசிறுவதைவிட பரிவான அக்கறையை காட்டும் நிலையை உருவாக்குவது அவசியம்.

உழைப்பின் மகத்துவம்!

இன்றைய குழந்தைகளிடம் ‘விவசாயிங்கன்னா யாருன்னு தெரியுமா’ என்று கேட்டால், ‘அவங்க சேத்துல கால் வச்சாதான் நாம சோத்துல கை வைக்க முடியும்’ என்ற பதிலை ‘டெம்ப்ளேட்’டாக சொல்வார்கள்.

அந்த அளவுக்கு, நாம் பார்த்த சினிமாக்கள் விவசாயம் குறித்து இந்த ஒற்றை வாக்கியத்தையே கற்பித்து வந்திருக்கின்றன.

இதையும் தாண்டி, விவசாயிகளையும் விவசாயத்தையும் குறித்து எதிர்காலத் தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டியவை நிறைய இருக்கின்றன.

எப்படிப்பட்ட காலநிலை வாய்த்தபோதும் என்னவொரு மனநிலை தொடர்ந்தபோதும், எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டபோதும், விவசாயிகள் விவசாயம் மீது கொண்ட வேட்கையை ஒருபோதும் கைவிடவில்லை என்பதும் அவற்றுள் ஒன்று.

உழைக்க வேண்டுமென்ற உணர்வு குறைந்துவரும் இந்நாட்களில், உடல் உழைப்புக்கும் மன உழைப்புக்கும் பெரிய வித்தியாசமில்லை என்ற எண்ணத்தை வலுப்படுத்த வேண்டும்.

வீட்டை ஒட்டியுள்ள காலியிடத்தில் சிறியளவில் தாவர வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். ஒருமுறை பச்சை துளிர்ப்பதைக் கண்டுவிட்ட கணம், ஒருபோதும் விவசாயம் குறித்த அலட்சியத்தை விதைக்கவிடாது.

அதன்பின், விவசாயத்தை ஒரு தொழிலாகவோ அல்லது ஓய்வுநேரப் பொழுதுபோக்காகவோ மேற்கொள்வது அக்குழந்தைகளின் எதிர்கால விருப்பமாக மாறும்.

விவசாயத்திற்கான அரசு!

ஒரு நாட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு எனும் வரிசையில், வேளாண்மை வளர்ச்சிக்கென்று பெருமளவில் நிதி ஒதுக்கப்படுவது அவசியம்.

வேளாண் அறிஞர்கள் வலியுறுத்தும் இக்கருத்தில் இருந்து விலகிவந்துவிட்டபோதும், விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளையும் கொள்கைகளையும் அறிமுகப்படுத்துவதென்பது கனவு தேசத்தின் குரல்.

1979 முதல் 1980 வரையிலான சவுத்ரி சரண்சிங் அரசு, அத்தகைய சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியாவில் வறுமை ஒழிப்பையும் விவசாய மேம்பாட்டையும் செயல்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது.

‘ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம்’ சரண்சிங் காலத்தில் கொண்டுவரப்பட்ட விவசாய சீர்திருத்த நடவடிக்கைகளில் மிக முக்கியமானது. அதேபோல ‘வேளாண் விளைபொருள் மசோதா’வைக் கொண்டுவந்த பெருமையும் இவருக்குண்டு.

உழுபவனுக்கே நிலம் எனும் பார்வையைப் பரப்பி, நிலக் கையிருப்பில் உச்சத்தைக் குறைப்பதற்கான திட்டங்களை உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தபோது மேற்கொண்டவர் சரண்சிங். இது போன்ற பெருமைகளே, அவரது பிறந்தநாளான டிசம்பர் 23 ம் தேதியை ‘தேசிய விவசாயிகள் தின’மாகக் கொண்டாட வைத்திருக்கின்றன.

விவசாயம் காப்போம்!

சீரான பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், ஏதேனும் ஒருநாளில் பெய்யும் பெருமழை வெள்ளமாகக் கடலில் கலந்துவிடும் காலகட்டத்தில், குறைந்தளவில் நீரைப் பயன்படுத்தி விளைவிக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வைப் பரப்பிட வேண்டும்.

மிக முக்கியமாக, விவசாயப் பொருட்களின் உற்பத்திக்கேற்ற விலை நிர்ணயம் செய்வது அவசியம்.

இதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பைப் பெருக்குவது, ’இந்தியா விவசாய தேசம்’ எனும் வாதத்தைப் பொய்யாக்கிவிடும்.

மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் தாண்டி தனிமனிதர் ஒவ்வொருவரும் விவசாயத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

விவசாய தினம் மட்டுமல்லாமல், உணவுண்ணும் பொழுதுகள் மட்டுமல்லாமல், விவசாயத் தொழில் அல்லது விவசாயிகள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் அத்தரப்பின் வாதங்களைக் கேட்டு எதிர்வினையாற்ற வேண்டும்.

விவசாயப் பிரச்சனைகளுக்காகப் பாடுபட்டவர்கள் முதல் அதற்காகத் தன்னுயிர் தந்தவர்கள் வரை அனைவரது வாழ்வும் வரலாறாக அறியத் தர வேண்டும்.

இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையின் மகத்துவத்தை விவசாயத்தில் உடனடியாகக் காண முடியும்.

அந்த வகையில், உடலுழைப்போடு மன உழைப்பையும் செலுத்தும் தொழில்களில் முதன்மையானது விவசாயம் என்ற உண்மையும் எதிர்காலத் தலைமுறையினருக்குச் சொல்லித்தரப்பட வேண்டும்.

சேற்றில் இறங்கியபிறகு இரு கரங்களும் சேர்ந்தால் மட்டுமே சரியான பலம் கிடைக்கும் என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

அதன் வழியாக ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ எனும் உலகம் உய்யும் வழிமுறையை அவர்களே கண்டறிவார்கள்!

-பா.உதய்

23.12.2021 12 : 40 P.M

Comments (0)
Add Comment