ஊடகவியலாளர்கள் மத்தியில் மறக்க முடியாத பெயர் சண்முகநாதன்!

தமிழகத்தில் மட்டுமல்ல வட இந்தியாவிலிருந்து வரும் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கும் பரிச்சயப்பட்டபெயர் சண்முகநாதன்.

திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களை கோபாலபுரம் வீட்டிலோ அல்லது தலைமைச் செயலகத்திலோ சந்திக்கும்போது அவர்கள் அவசியம் சந்திக்க வேண்டிய நபராக இருந்தவர் சண்முகநாதன்.

காவல் துறையிலிருந்து வந்ததாலோ என்னவோ எப்போதும் முகத்தில் உணர்வுகளை வெளிக்காட்டாத ஒரு முகபாவத்துடன் இருப்பார்.

எப்போதாவது மிக அபூர்வமாக அவரிடமிருந்து ஒரு மென்மையான சிரிப்பு வெளிப்படும்.

ஒரு முறை வார இதழுக்கான நேர்காணலுக்காக கலைஞரைச் சந்திக்க சென்றிருந்தேன். காலை 8 மணிக்கு கோபாலபுரம் வரச் சொல்லியிருந்தார். அப்போது கலைஞர் முதல்வராக இருந்தார். நான் அவரது வீட்டிற்குள் நுழையும்போது மணி எட்டு இரண்டு ஆகிவிட்டது.

மாடிப்படியில் ஏறும்போது சண்முகநாதன் சொன்னார், “உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் போங்க. அவருடைய டைம் கான்சியஸ் உங்களுக்கு நன்றாக தெரியுமே” என்றார்.

போனவுடன் இரண்டு நிமிடம் காத்திருந்ததைப் பற்றி குத்தலாகக் குறிப்பிட்டுவிட்டு கிண்டலாக ஆரம்பித்தார் கலைஞர்.

கலைஞர் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார் என்பதை கலைஞரைச் சந்திக்க செல்லும் முன்பு சண்முகநாதனிடம் கேட்டுக்கொண்ட பிறகே பெரும்பாலான பத்திரிகையாளர்கள் அவருடைய வீட்டிற்கும், தலைமைச் செயலகத்திற்கும் செல்வார்கள்.

அப்படி நீண்ட காலமாக சுமார் 48 ஆண்டுகளாக கலைஞரின் நிழலைப் போல இருந்திருக்கிறார் என்பது பெரிய விஷயம்.

கலைஞர் மறைவிற்கு முன்பு இரண்டொரு சமயங்களில் சண்முகநாதனுக்கும் கலைஞருக்கும் இடையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அவரது வீட்டிற்கு செல்லாமல் இருந்திருக்கிறார் சண்முகநாதன்.

அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் திரும்பவும் கலைஞரே அவரை போனில் அழைத்துப் பேசி வா என்று அழைப்பார்.

இறுதியாக கலைஞரை சந்திப்பதற்காக ஒருமுறை ராஜாத்தி அம்மாள் வீட்டிற்கு போயிருந்தேன். இரண்டரை மணி நேரம் அந்த நேர்காணல் நடந்தது.

அப்போது அவர் முதல்வராக இருந்தார். தேசிய அளவிலான கூட்டணியில் திமுக இருந்தது. அந்தக் கூட்டணி பற்றி சில விஷயங்களை மனம் திறந்து குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

பேசிய உடனேயே நான் இதைப் பேசி இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டவர்,

“இந்தப் பேட்டியை முடித்து விட்டு நாளை காலை தலைமைச் செயலகத்திற்கு நீங்கள் கொண்டுவர முடியுமா?” என்று கேட்டார்.

பக்கத்தில் நாங்கள் பேசிய அனைத்தையும் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் சண்முகநாதன்.

கலைஞர் என்னிடம் கேட்டார், “நீங்கள் எழுதிக் கொண்டு வருகிறீர்களா? இல்லை என்றால் சண்முகநாதனை உடனே டைப் செய்து அடித்துக் கொண்டு வரச் சொல்லட்டுமா?” என்று கேட்டார்.

“இல்லை, அவருக்கு வீண் சிரமம் வேண்டாம். நானே எழுதிக்கொண்டு வருகிறேன்” என்று  சொன்னேன்.

அதன்படி, மறுநாள் காலை பத்தரை மணிக்கு கையெழுத்துப் பிரதியாக அவருடைய பேட்டியை எடுத்துக் கொண்டு தலைமைச் செயலகத்திற்குப் போய் சண்முகநாதனை தொடர்பு கொண்டேன்.

அவர் சட்டசபைக்குள் இருந்த கலைஞரிடம் தகவல் சொல்ல, அடுத்த ஐந்து நிமிடங்களில் கலைஞர் அவருடைய அறையில் இருந்தார்.

என்னுடைய பேட்டியைப் பார்த்து எடிட் செய்ய வேண்டிய பகுதிகளை எடிட் செய்து, கச்சிதமாக கொடுத்துவிட்டார். பத்து நிமிடங்களுக்குள் வேலை முடிந்து விட்டது. அதன் பிறகு சட்டசபைக்கு சென்றுவிட்டார்.

அப்பொழுது சண்முகநாதன் சொன்னார், “பரவாயில்லை, நேரத்துக்கு வந்துட்டீங்க. நீங்க சரியான நேரத்துக்கு வருவீர்களா, இல்லையா என்ற பதற்றம் அவரிடம் இருந்தது. ஆனால், சொன்ன நேரத்துக்கு வந்துட்டீங்க. நன்றி!” என்று ஒரு சிறு புன்சிரிப்போடு சொன்னார். அந்த புன்சிரிப்பு தான் சண்முகநாதனின் அடையாளம்.

எப்பொழுதுமே தான் செய்கின்ற வேலைகளில் ஒரு திட்டமிட்ட ஒழுங்கை எதிர்பார்ப்பவர் கலைஞர். அவர் தொடர்புடைய எதுவானாலும் ஒரு முழுமையை எதிர்பார்ப்பவர்.

எதிர்பார்த்த ஒழுங்கு எதிரே இருக்கும் சம்பந்தப்பட்டவர் திருப்திபடுத்த முடியவில்லை என்றால் கடுமையான எதிர்வினை அவரிடம் இருந்து கிளம்பும்.

முரசொலியில் வெளியாகும் இவருடைய கட்டுரைகளில் சில பத்திகள் எடுக்கப்பட்டதற்காக, சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளரை உடனே காரில் இருந்து இறக்கிவிட்ட சம்பவங்கள் உண்டு.

ஆனால், அவருடைய திட்டமிட்ட ஒரு ஒழுங்கை எதிர்பார்க்கிற மனநிலை மிக நீண்ட காலமாக அவரிடம் நிலையாக இருந்து வந்த சண்முகநாதன் அவர்களுக்கு மிகவும் தெரியும்.

அவரும் அதே போன்று ஒரு திட்டமிட்ட ஒழுங்கைக் கடைப்பிடித்தார். அதனால்தான் இரண்டு பேருக்குமான புரிதல் கடைசி வரை நீடித்தது.

‘தான் நினைக்கிறபடியான ஒழுங்கை சரியாகக் கடைபிடிப்பவராக சண்முகநாதன் உள்ளார்’ என்று பலமுறை கூறியுள்ளார் கலைஞர்.

கலைஞரின் பெரும்பாலான பேட்டிகளில் அவருடன் இருந்திருக்கிறார் சண்முகநாதன். பல்வேறு பத்திரிகைகளில் கலைஞரின் பேட்டிகளில் அவருடன் இருந்திருக்கிறார்.

ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் தனிப்பட்ட முறையில் பேசுவதற்காக அவரை வெளியே போகச் சொன்ன அனுபவம் இருந்திருக்கிறது.

ஒரு நிழல் போல கலைஞரின் வாழ்வு முழுக்க உடன் இருந்தவர் மறைந்திருக்கிறார். அவருக்கு ஒரு எளிய அஞ்சலி.

-மணா

23.12.2021  4 : 30 P.M

Comments (0)
Add Comment