‘தேடல்’ நாடகக் குழுவுடன் ஓர் அனுபவம் – மணா
*
அது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
பேருந்து வசதியோ, வாகனங்களோ செல்லாத காடுகளுக்குள் போய், அவர்களுக்கு மத்தியில் ஒப்பனையில்லாமல் இயல்பானபடி வீதி நாடகங்களை நடத்த முனைவதே மாறுதலானது தான்.
அப்படி – எண்பதுகளில் முதுமலைக் காட்டுப்பகுதிக்குள் மதுரையை மையமாகக் கொண்டு அப்போது இயங்கிக் கொண்டிருந்த ‘தேடல்’ நாடகக் குழுவினர் வீதி நாடகங்களை நடத்தச் சென்றபோது நானும் அவர்களுடன் சென்றிருந்தேன்.
நண்பர் மு.ராமசாமி அப்போது நடத்திக் கொண்டிருந்த நிஜ நாடக இயக்கம் போன்றவற்றுடன் தொடர்பு இருந்ததால், அவர்கள் மதுரையைச் சுற்றிலும் நடத்திய பல தெரு நாடகங்களுக்கு உடன் பயணப்பட்டிருக்கிறேன்.
நாடகம் முடிந்ததும், நடித்த சாலை அல்லது தெருவின் நடுவே ஒரு துண்டு விரிக்கப்படும். கூடி நின்று பார்வையாளர்களாக மாறியவர்கள் தங்களால் இயன்ற காசுகளையோ, ரூபாய் நோட்டுகளையோ தங்கள் பங்களிப்பாக அதில் போடுவார்கள்.
மிக எளிமையான நாடகங்களுக்கு மக்கள் தரும் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை நேரடியாக உணர முடிந்தது.
‘தேடல்’ இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தவர் நண்பரான ராஜ மதிவாணன். அவருடன் நண்பர்கள் காமராஜ், ஃபிரான்சிஸ், சுப்பு என்று சுமார் எட்டு நண்பர்கள் இருந்தார்கள். எல்லோருமே தொழில் முறை நடிகர்கள் அல்ல. சமூக ஆர்வத்தினால் நடிக்க வந்த இளைஞர்கள்.
நான் சென்றது பார்வையாளனாக, ஓர் உதவியாளனாக மட்டுமே.
ஒரு வார காலம். முதுமலை அடர்ந்த வனப்பகுதியில் இப்போது இருப்பது மாதிரி அப்போது வசதியான ‘தங்கும் விடுதிகள்’ இல்லை. அதிகம் டூரிஸ்ட்களும் அந்தப் பகுதிக்கு வராத காலம்.
“பழங்குடி மக்களுக்கு மத்தியில் வீதி நாடகங்களை நிகழ்த்துவது” – இது ஒன்று தான் தேடல் குழுவின் அப்போதைய இலக்கு.
முதுமலை வனப்பகுதியில் உள்ள மசினகுடியில் இருந்த வர்கீஸ் போன்ற சில நண்பர்கள் அதற்கான சில ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.
மசினன் என்ற பதினேழு வயதான பழங்குடி இளைஞர் ஒருவர் தான் எங்களைக் காட்டின் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார்.
“பத்திரமா வாங்க.. ஏதாவது விலங்குகள் வந்தா நான் சொல்லிருவேன்.. எதுக்கும் கவனமா வரணும்” – சுதாரிப்பாக எச்சரித்திருந்தார் மசினன்.
விலங்குகள் அதிகம் தென்படக்கூடிய வனப்பகுதியாக முதுமலை இருந்ததால், யானை துவங்கிப் பல விலங்குகளின் நடமாட்டத்தை வாசனை மூலமே அறிவது அவர்களுக்கு இயல்பாக இருந்தது.
யானைகளின் சாணத்தை வைத்து, எவ்வளவு நேரத்திற்கு முன் அது வந்திருக்கிறது என்பதை அவர்களால் துல்லியமாய்ச் சொல்ல முடிந்தது. பாம்புகள், காட்டுப்பன்றிகள், செந்நாய்கள் என்று எல்லாமே அவர்களுக்கு வனச்சூழலில் அவற்றின் இயல்புகள் பழக்கப்பட்டிருந்தன.
முதலில் மசினகுடி ஒட்டியுள்ள பகுதியில் ‘தேடல்’ குழுவின் முதல் நாடகம். சுற்றிலும் வட்ட வடிவில் சரிவான மண் தரையில் அங்கு வாழ் மக்கள் அமர்ந்திருந்தார்கள். குழந்தைகள் விசித்திர ஆர்வத்துடன் கவனமாக இருந்தன.
முதலில் ஒரு பாடல். அவரும் சேர்ந்து கோரஸாக “தேடித் தேடிப் பழகிப் போச்சுங்க” என்ற பாடலைப் பாடினார்கள். அது தான் துவக்கப்பாட்டு. ஒரு பறை வாத்தியம் மட்டுமே கூடவே இசைக்கப்பட்டது.
அடுத்து எளிமையாக மக்களின் பிரச்சினை சார்ந்த மூன்று அல்லது நான்கு நாடகங்கள். எல்லாமே கால் மணி நேரத்திற்குள் முடிந்துவிடக்கூடிய நாடகங்கள் தான்.
சிறு இடைவேளைக்குப் பிறகு அடுத்த நாடகம் ஆரம்பிக்கும்.
பெரும்பாலான நாடகங்களைப் புரிந்து கொள்வதில் அந்த மக்களுக்குச் சிரமம் இருப்பது மாதிரித் தெரியவில்லை. சிரிப்பார்கள். கை தட்டுவார்கள். ஏதாவது கையில் இருப்பதைச் சாப்பிடக் கொடுப்பார்கள். பால் இல்லாத தேநீர் அளிப்பார்கள்.
அரசுக்கும், மக்களுக்கும் இருந்து வரும் உறவுகளைப் பற்றியே அந்த நாடகங்கள் பேசின. அதை ஒப்பனை இல்லாத எளிமையோடு நடித்தார்கள் தேடல் குழுவினர்.
நாடகங்களை நிகழ்த்தி முடிந்ததும், அந்த மக்களுடன் உரையாடல்கள் நடக்கும். அவர்களுக்கான மொழியில் சிக்கனமாக எதிர்வினை ஆற்றுவார்கள். வனத்துறை இலாகாவினரின் கெடுபிடிகளைப் பற்றிச் சொல்வார்கள்.
சில பகுதிகளில் நாடகங்களை நிகழ்த்தும் போது, வன இலாகாவில் பணியாற்றியவர்களும் கூடவே அமர்ந்து நாடகங்களைப் பார்த்தார்கள். ஆனால் எதிர்வினை ஆற்றவில்லை.
எங்கோ இருந்து தங்கள் பகுதிக்குள் சிரமத்துடன் வந்து எதையோ நடத்துகிறார்கள் என்கிற மதிப்பு அங்குள்ள மக்களிடம் இருந்தது. வன விலங்குகளை விட, வன அதிகாரிகளும், அலுவலர்களும் அவர்களுக்குப் பயமுறுத்தும் அம்சமாக இருந்தார்கள்.
சில பகுதிகளில் நாடகங்களை நிகழ்த்திவிட்டு, அங்கேயே கிடைக்கிற உணவைச் சாப்பிட்டிருக்கிறோம். சில சமயங்களில் கூடவே கொண்டு போன ரொட்டித் துண்டுகள் மட்டும்.
தொலைக்காட்சி கவன ஈர்ப்புகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் மக்களுக்குத் தேவையான, அவர்களை மையப்படுத்திய ஒரு கருத்தை,
எளிய மொழியில், புரியக்கூடிய காட்சி வடிவத்தில் சொன்னால், அதைச் சட்டென்று கற்பூரம் மாதிரி பற்றிக் கொள்கிற மாதிரியான பார்வையுடன் தான் மலைக்கிராமத்து மக்கள் இருப்பதை உணர முடிந்தது.
தங்கள் கிராமங்களுக்குள் ஒரு குழுவினர் வருவதற்கு முன்னரே அவர்களுடைய மனதிற்குள் அவர்களைப் பற்றிய முன் முடிபுகள் இல்லை. வெகு இயல்பான பார்வையாளர்களாக அவர்கள் அதனாலேயே இருக்க முடிந்தது. மனசொன்றிப் பழக அவர்களால் முடிந்தது.
தங்களால் முடிந்த அளவுக்கு வருகிறவர்களை உபசரிப்பதும் அவர்களுக்கு வெகு இயல்பாகப் படிந்திருந்தது.
நாடகங்களை நடத்திவிட்டு ஊரை விட்டுக் கிளம்புகிறபோது, சிறு நெகிழ்ச்சி அவர்களுடைய முகங்களில் தெரியும். காட்டுக்குள் கவனமாக நம்மைப் போகச் சொல்வார்கள் உரிமையோடு.
அவர்கள் சொன்ன மாதிரியே நடக்கவும் செய்தது.
முதுமலைக் காட்டுக்குள் ஒரு கிராமத்துக்கு பசுமை வாசனையடிக்கப் போய்க் கொண்டிருந்தோம். இளம் குளிர் பரவியிருந்தது. பறவைகளின் கத்தல்கள் சுற்றிலும் கிறீச்சிட்டன.
உடன் வந்த மசினன் “பக்கத்திலே ‘கொம்பன்’ (யானை) இருக்கு.. கவனமா வாங்க..” என்று ஏதோ ரகசியத்தைப் போலத் தாழ்ந்த குரலில் சொன்ன கணம் அரள வைத்தது.
அந்த இளைஞன் சொன்ன மாதிரியே தூரத்தில் தனித்து நின்ற ஒற்றை யானை.
அவ்வளவு தான்.
ஆளுக்கு ஒருபுறமாக காட்டுப்பகுதிக்குள் ஓட ஆரம்பித்தோம். பயம் மனதிற்குள் உருத்திரள ஓட வேண்டியிருந்தது. அந்தக் கணங்களில் காட்டின் ஆழ்ந்த தனிமை பயத்தை உருவாக்கியிருந்தது.
ஆளுக்கு ஒரு திசையாக ஓடிக் கடைசியாக ஓரிடத்தில் கூடியபோது, செந்நாய் ஒன்று தாக்கி இளம் கன்றுக்குட்டி உயிரிழந்திருந்தது.
தாக்கிய செந்நாய் வனத்திற்குள் மறைந்திருந்தது.
நாடகங்களை நிகழ்த்தப் போனவர்களுக்கு அந்தக் கணங்கள் அந்த நேரத்தில் திகிலாகவும், பயம் அடர்ந்த ஒன்றாகவும் இருந்திருக்கலாம்.
ஆனால் பெரும்பாலும் குளிருடன் பச்சை விரிந்திருக்கும் காட்டுக்குள் வாழ்கிறவர்களுக்கோ அது வாழ்வின் ஒரு அங்கம்.
‘தேடல்’ – எவ்வளவு அர்த்தபூர்வமான அனுபவம்!
– மணா