நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு!

– தலைமை நீதிபதி வலியுறுத்தல்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ராஜஸ்தான், அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தவர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் டிச.,4 ல் நடந்த சட்டதின விழாவில் பங்கேற்றார்.

நேற்று மதுரைக் கிளைக்கு வருகை தந்த அவருக்கு வரவேற்பு விழா நடந்தது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன், வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் தியாகராஜன், வெங்கடேசன், கிருஷ்ணவேணி, துரைப்பாண்டியன், ஆனந்தவள்ளி ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.

பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசியதாவது,

தமிழ் சங்க இலக்கியத்திற்கு ராஜஸ்தான் ஜெயின் சமூகத்தினர் (சமணர்கள்) முக்கியப் பங்களிப்பு செய்துள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார். மதுரை மற்றும் அதைச் சுற்றிலும் சமணர்களின் தொல்லியல் சின்னங்கள் அதிகம் உள்ளன. மதுரையை கோயில் நகரம் என்பர்.

இது அற்புதமான நகரம். தமிழ் கலாசாரத்தின் தலைநகரம். கிழக்கு ஏதன்ஸ் என அழைக்கப்படுகிறது. பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிபுரிய எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நீதித்துறையில் பல சவால்கள் உள்ளன.

அதில் ஒன்று நிலுவையில் உள்ள வழக்குகள். நீதிமன்றமும், வழக்கறிஞர் சங்கங்களும் நீதித்துறையின் துாண்கள். நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண இருதரப்பும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

21.12.2021  3 : 30 P.M

Comments (0)
Add Comment