நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராடும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந்திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைதுலகும் இனபமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
[பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையா] உன்
சீரிளமை திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே..
இதுதான் மனோன்மணியத்தில் இடம்பெற்றுள்ள முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்.
மிகுந்த முன்யோசனையுடன்தான் கலைஞர் குறிப்பிட்ட {பல்லுயிரும்…} இந்தப் பகுதியை நீக்கினார்.
நீக்கப்பட்ட இப்பகுதியை வானதியும், அண்ணாமலையும் சேர்க்கச் சொல்வது திட்டமிட்ட சதி. இந்தப் பகுதியில் பரம்பொருளை துதிக்கும் மதவாதம் உள்ளது. ஆரிய மொழியான சமஸ்கிருதத்திற்கு எதிரான பொருளும் உள்ளது. பிற திராவிட மொழிகளைத் தமிழிலிருந்து கிளைத்தன என்னும் கருத்தும் உள்ளது.
இந்தப் பகுதிகளை இணைப்பதன் மூலம் திமுகவை இந்த மூன்று பிரிவினருக்கும் எதிராக எளிதில் நிறுவ முடியும். ஒரே கல்லில் இந்த மூன்று மாங்காயை அடிக்க இவர்கள் மூலம் இந்த வேண்டுகோள் முன் வைக்கப்படுகிறது.
திடிரென தமிழார்வம் இவர்களுக்கு பொங்குவது இதனால்தான். சதிவலை விரிக்கின்றார்கள். பரபரப்பு அரசியல் செய்வதே இவர்களின் நோக்கம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை அறியாதவர் அல்ல.
-ஆதிரன்