பல பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமை ‘தாய்’க்கு உண்டு!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர் – 4

எல்லோரும் மதிக்கக்கூடிய மிகச்சிறந்த ஒரு இலக்கிய இதழ் ‘முல்லைச்சரம்’.

அதை நடத்துபவர் கவிஞர் பொன்னடியான். பாரதிதாசன் வழித்தோன்றல்.

பாரதிதாசன் விருது பெற்றிருக்கிறார். பாரதிதாசனையும் தமிழையும் பிரித்துப் பார்த்துக் கொள்ள முடியாத சான்றோன் பொன்னடியான்.

அவர் நடத்துகிற ஒரு இயக்கம்தான் ‘கடற்கரைக் கவியரங்கம்’.

அது மாதத்தின் முதல் வாரம் இறுதியில் கடற்கரையில் கவிஞர்கள் எல்லாம் ஒன்று கூடி கவிதைகளைப் படைப்பார்கள். அதைப் பார்த்து ரசித்து மற்றவர்கள் பாராட்டுவார்கள்.

மிகப்பெரிய கவிஞர்கள் பெரும்பாலும் இதில் பங்கு பெற்றிருப்பர். அதில் நான் கூட பங்கு பெற்று பாடி இருக்கிறேன்.

கண்ணகி சிலையின் பின்னே வட்டமாக கவிஞர்கள் அமர்ந்து கொண்டு பாடுவர். சில சமயம் மின் விளக்கு இருக்காது.

சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி ஒருவர் மிதிக்க, அந்த டைனமோ வெளிச்சத்தில் ஒரு கவிஞர் பாட, அதைக்கேட்டு மற்றவர் கைதட்ட சிலர் வேடிக்கை பார்த்துவிட்டுச் செல்வர்.

அது ஒரு நல்ல கவிதை சார்ந்த குழு.

ஆனால், நான் அந்த வயதில் அதை எதிர்த்து ‘தாய்’ வார இதழில் ஒரு கட்டுரை எழுதினேன்.

“கவிதை என்பது மக்களுக்கு உரித்தானது. சமூகத்தின் அவலங்களையும் சமூகத்தின் பிரச்சனைகளையும் பற்றிப் பேச வேண்டும்.

அப்படி இல்லாமல் கவிதை மக்களுக்கு அப்பாற்பட்டு தனியாக காற்று வாங்க வருகிற மெரினா கடற்கரையில் கடற்கரை கவியரங்கம் என்று யாருக்கும் தெரியாமல் பாடி கைதட்டல் வாங்குவது என்பது தவறானது. இதனால் எந்தப் பயனும் இல்லை” என்று நான் விமர்சனம் செய்து எழுதி விட்டேன்.

இது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக எழுந்தது.

பம்பாய், கல்கத்தா, பெங்களூர் போன்ற பல இடங்களில் இருந்து தமிழ் சார்ந்த இயக்கங்கள் எதிர்த்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

தமிழகமெங்கும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் இதைக் கண்டித்தார்கள்.

பாரதிக் காவலர் ராமமூர்த்தி அவர்கள் கூட ஒரு மிகப்பெரிய கண்டனத்தை எழுதி அனுப்பினார்.

பொதுவாக ஒரு பத்திரிகையில், தனக்குப் பிடிக்கவில்லை என்று எழுதிய கண்டனங்களை, எதிர்ப்பைப் பதிவு செய்வதுண்டு.

அப்படி தொடர்ந்து மூன்று வாரமாக வலம்புரிஜான் அவர்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வந்தார்.

அதோடு பிரச்சனை முடிந்திருக்க வேண்டும். ஆனால், அது முடியவில்லை. வலம்புரிஜான் அவருக்கு பெரிய தலைவலியாக அமைந்தது.

பல்வேறு இடங்களில் இருந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்கள்.

ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டிய சூழல்.

ஏனெனில், தமிழகத்தை ஆள்பவர் எம்.ஜி.ஆர்.

இப்படியே விட்டால் பலர் வேறு மாதிரி புரிந்து கொள்ளக் கூடிய சூழல் வரும்.

ஆசிரியர் அறைக்கு வரச் சொல்லி குமார் எனும் பணியாளரை அனுப்பிக் கூப்பிட்டர் வலம்புரி ஜான்.

நானும் போய் நின்றேன்.

“ராசி, இப்பொழுது நீங்கள் எழுதியது பற்றி வருத்தம் தெரிவித்து விடுகிறீர்களா“ என்று கேட்டார்.

நான் கொஞ்சம் கூட யோசிக்காமல், முடியாது, என்று மறுத்து விட்டேன்.

நிமிர்ந்து பார்த்தார்.“என்ன இப்படி சொல்கிறாய்?, தமிழ்ப் பற்றாளர்கள் கோபித்துக் கொள்கிறார்களே“ என்றார்.

“கோபப்படுவது என்றால் மக்களிடம் சென்று தங்களுடைய படைப்புகளை பேசச் சொல்லுங்கள். நான் எழுதியது சரி என்று எனக்குப் படுகிறது. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்“ என்று உறுதியாக நின்றேன்.

அதை இப்போது நினைத்தால் துடுக்குத் தனமாக தோன்றுகிறது.

ஆசிரியர் என்னை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு ‘சரி, நீ போ‘ என்று அனுப்பி விட்டார்.

இப்படிப் பேசியது என்னுடைய வேலைக்கே உலை வைக்கும் என்று உடனிருந்த பத்திரிகை நண்பர்கள் சொன்னார்கள்.

பரவாயில்லை. என் மனதிற்கு தோன்றியதை எழுதினேன் என்று நான் உறுதியாக இருந்தேன்.

மௌனமாக சில நாட்கள் கடந்தன.

மறுபடியும் அடுத்த தாய் வார இதழில் கடைசிப் பக்கத்தில் ஆசிரியர் வலம்புரிஜான் அவர்கள் என்னைப் பற்றி எழுதியிருந்தார்.

“ராசி அழகப்பன் அவர் எழுதியதை உண்மையாக நம்பி எழுதுகிறேன் என்று சொல்கிறார். அவர் எழுதிய கட்டுரையில் நான் தலையிடுவது ஒரு படைப்பாளன் சுதந்திரத்திற்கு எதிராக அமையும். எனவே அவர் மன்னிப்பு கேட்க மாட்டார்.

ஆனால், தமிழ் சார்ந்த உலகத்திற்கு சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் எல்லோரையும் மதிக்கிறோம்!“ என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இப்படி படைப்பாளியையும் படைப்பு உலகத்தையும் கடைசிவரை மதித்தவர் தான் ஆசிரியர் வலம்புரி ஜான்.

பின்னாளில் என்னை கண்டித்தவர்களோடும் கோபித்தவர்களோடும் நான் தொடர்ந்து பயணித்திருக்கிறேன்.

‘தாய்’ இப்படி சுதந்திரமான, நேர்மையான எண்ணங்களுக்கு ஒரு அடித்தளமாக அமைந்தது என்றால் அது ஆசிரியரின் நேர்மையும், மற்றவர்களை மதிக்க வேண்டும் என்கிற எண்ணம் தான்.

இன்னொரு சம்பவம்.

அதுவும் ஒரு நெருக்கடியான சம்பவமாக அமைந்துவிட்டது.

அது யாரால் வந்தது என்றால் அதுவும் அடியேன் என்னால்தான்.

அப்போது ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்பு இதழாகக் கொண்டாட வேண்டும் என்கிற திட்டம்.

அந்த வரிசையிலே சிறுகதை சிறப்பிதழ் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. கூடவே, சூரியகாந்தன் இருந்தார்.

அவர் நல்ல எழுத்தாளர். கோவையைச் சேர்ந்தவர். பின்னாளில் பேராசிரியராக கல்லூரியில்  பணியாற்றினார்.

அந்தச் சிறப்பிதழில் எனக்குப் பிடித்தமான சிறுகதை சக்கரவர்த்தி ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதையும் இருந்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று நான் அடம் பிடித்தேன்.

ஜெயகாந்தன் சிறுகதை வேண்டும் என்று அவரிடம் கேட்டபோது அவர் எழுதுவதில்லை என்று மறுத்துவிட்டார்.

அவர் மறுத்தால் என்ன அவரின் கதைகளை நாம் போட மாட்டோமா? என்று நினைத்து அவருடைய ஒரு சிறுகதையை எடுத்து தாயில் பிரசுரித்து விட்டோம்.

அதற்கான தொகையையும் அவருக்கு தபாலில் அனுப்பி விட்டோம்.

ஆனால் அந்த ஊதியம் திருப்பி அனுப்பப்பட்டது.

உடன் ஜெயகாந்தன் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார்.

வலம்புரி ஜான் என்னை அழைத்து, “என்ன ராசி இப்படியாகி விட்டதே” – என்று சொன்னார்.

நீங்கள் கவலைப்படாதீர்கள் சார் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அந்த காசோலையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனேன்.

ஜெயகாந்தன் வா என்று அழைத்து அமர வைத்தார்.

எரிச்சல் அவர் முகத்தில் இருந்தது.

“சிறுகதை நான்தான் போட்டேன். அதற்கான தொகை வாங்கிக் கொள்ளுங்கள்” என்றேன்.

“அது ஏற்கனவே நான் எழுதி வெளியிட்ட சிறுகதை. அதற்கான தொகை  எனக்கு வந்துவிட்டது. நீ என்னைக் கேட்காமல் கொல்லைப்புற வழியாக வந்து திருடிச் சென்று விட்டாய் அந்த கதையை” என்று கோபமாக பேசினார்.

அது அவருடைய இயல்பு.

நாம் சும்மா இருப்போமா?

நான் சொன்னேன் “நீங்கள் சமூகத்திற்காக எழுதிய படைப்புகளை – வேண்டும் என்று நினைக்கிறவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதைத் திருட்டு என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை” என்று கோபமாக என்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.

“ஓ இப்படிக் கூட பேச முடியுமா?” – என்று  கோபமாகக் கேட்டார்.

“ஏன் முடியாது. எல்லாம் உங்கள் சிறுகதையும் நீங்களும் கொடுத்த தைரியம் தானே! உங்களைப் போல் விளிம்பு நிலை மக்களைப் பற்றி எழுதியவன் யாரும் இல்லையே?!

நான் பள்ளிப் பருவத்திலிருந்து உங்கள் சிறுகதைகளைப் படித்து கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது ‘சிறுகதை சிறப்பிதழ்’ போட வருகிறபோது உங்கள் கதை இல்லாமல் இருந்தால் எப்படி? எனவே உரிமையோடு எடுத்துக் கொண்டேன் அவ்வளவுதான்” என்றேன்.

அவர் அந்தக் காசோலையை வாங்கிக்கொண்டு, ஒரு புதிய சிறுகதையும் ‘தாய்’ இதழுக்கு எழுதிக் கொடுத்தார்.

பிறகு ராஜலஷ்மி அறக்கட்டளை சார்பாக கமல்ஹாசன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்று, மனிதம் போற்ற உரையாற்றியதும் காலக் கொடை.

ஒரு முறை தாய் வார இதழில் பணியாற்றிய பிரபு ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்.

நெகிழ்ந்து விட்டேன்.

அது என்னவென்றால்.

பிரபு மதுரையிலே ‘உங்கள் விசிறி’ என்ற ஒரு பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அதை நடத்திக் கொண்டிருந்தவர் மார்ஷல் முருகன்.

முத்தாரம் அளவிலான ஒரு பத்திரிகை. அந்த ‘உங்கள் விசிறி’ கிட்டத்தட்ட 3000 பிரதிகள் விற்பனையாயின. அந்த காலத்தில் அது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்.

நவீனன் சாவி பத்திரிகையில் ‘பூவாளி’ என்கிற புதிய பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன். நீங்கள் வாருங்கள் என்று பிரபுவை அழைக்க, அதை நம்பி அவர் வர, அது தள்ளிப்போக – அவ்வளவுதான் சென்னை நகரத்தில் திக்கு தெரியாமல் அலைந்திருக்கிறார் பிரபு.

பத்திரிகை வாசலில் போய் முட்டி பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை.

பிறகு ‘தாய்’ அலுவலகம் நாடினார்.

இரண்டு மூன்று நாட்கள் நின்று பார்த்தார். சந்திக்க முடியவில்லை.

ஆசிரியர் காலையில் அலுவலகம் வந்து விட்டு சிறிது நேரம் இருந்து விட்டு அப்போதிருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்துப் பேசப் போய்விடுவது உண்டு.

என்ன செய்யலாம் என்று யோசித்த பிரபு, ஆசிரியர் வலம்புரி ஜான் இருந்த வண்ணாரப்பேட்டை போர்த்துகீசிய தெருவில் உள்ள வீட்டுக்கு நடந்தே போய் நின்றிருக்கிறார்.

நீ யார் என்று கேட்டதும், கவிஞர் பாலாவின் தம்பி பிரபு என்றதும் சட்டென்று அவர் மனதைத் தொட்டது.

ஏனென்றால் பாலா அவருக்கு பிடித்தமான கவிஞர்.

அதுமட்டுமல்ல அவருடைய மகனின் பெயர் பிரபு.

எனவே அவரை தன்னுடைய காரிலேயே ஏற்றிக் கொண்டு வந்து தாய் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவில் இணைத்துக் கொண்டார்.

பிரபு பிறகு ‘தாய்’ பிரபுவாக மாறுகிறார்.

எழுதுகிறார் என்பதெல்லாம் வேறு விஷயம்.

ஒரே உடையில் சில நாள் தொடர்ந்து வருகிற பிரபுவைப் பார்த்து வலம்புரிஜான் அவர்கள் ஒரு முடிவு எடுக்கிறார்.

ராஜாஜி ஹாலில் கவிவேந்தர் மு.மேத்தா போன்ற கவிஞர்களின் கவியரங்கம்.

வலம்புரிஜான் காரில் செல்கிறார். கூடவே பிரபுவை அழைத்துச் செல்கிறார்.

ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வேல்ஸ் டைலரிங் கடை முன் கார் நிற்கிறது.

இறங்கி கடைக்குப் போய், உள்ளேயிருந்து வா வா என்று சைகை செய்கிறார்.

டிரைவர் மணியும் பிரபுவும் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடைக்காரப் பையனை அனுப்பி சென்று அழைத்து வா என்கிறார்.

மணி உள்ளே சென்று வர, ஐயா என்னை அழைக்கவில்லை. பிரபு உன்னைத்தான் அழைக்கிறார் என்று சொல்ல, போய் பிரபு நிற்கிறார்.

ஒரு டீ சட்டையும் (T-shirt) பேண்ட்டையும் எடுத்துத் தருகிறார்.

கூடவே இன்னொரு செட் பயன்பாட்டுக்கான துணியை எடுத்து அந்த டைலரிடம், ”ஒரு மிகச்சிறந்த படைப்பாளனாக வரப்போகிறார். அவனுக்கு நீங்கள் நன்றாக தைத்துக் கொடுங்கள்” என்று சொல்லி விட்டு வெளியே வருகிறார்.

அந்த நெகிழ்ச்சி, கேட்காமலே தருகிற புரட்சித் தலைவர் சுபாவம் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜானுக்கும் இருந்தது வியப்பில்லை.

இன்றும் பிரபுவுக்கு நினைவு வந்து கொண்டே இருக்கிறது என்கிறார்.

முதலில் தான் போட்டிருந்த மஞ்சள் சட்டையைப் பார்க்கும்போதெல்லாம் இரண்டு உடைகளை வாங்கித் தந்த வலம்புரிஜானை நினைத்து நினைத்து கண்ணீர் விடாமல் இருந்ததில்லை என்கிறார் தாய் பிரபு.

இந்தத் தமிழ்ப் பற்றால் நிகழ்ந்ததுதான் கவிஞர் பழனிபாரதி அவர்களும், உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் மகன் கல்லாடன் பணியாற்றியதும் கூட என்று கருதுகிறேன்.

குடந்தை கீதப்பிரியன், அவருக்குப் பிறகு வந்து சேர்ந்த நக்கீரன் கோபால் இவர்களெல்லாம் வலம்புரி ஜானின் அன்பாலும் அவர்களின் உழைப்பாலும் உயர்ந்து நின்றவர்கள்.

பாபநாசம் குறள் பித்தன் நீண்ட நெடிய உயரம் உள்ளவர். அவருக்கு சில உடல் உபாதைகள் உண்டு.

அதைக் கருத்தில் கொண்டு அவரை அதிகம் வேலை வாங்காமல் அவருக்குப் பிடித்தமான சிறிய சிறிய வேலைகளை மட்டுமே கொடுத்து கடைசிவரை துணையாகவே வைத்துக் கொண்டிருந்தார் என்பது வலம்புரிஜான் பெருந்தன்மைக்கு சான்று.

பாபநாசம் குறள்பித்தன் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதியவர்.

அவருடைய நூல்களை இன்று தமிழக அரசு பொது உடமையாக்கியிருக்கிறது என்பதும், அவர் குடும்பத்திற்கு உதவியிருக்கிறது என்பதும் தாய் இதழின் வழித்தோன்றல்களுக்கு கிடைத்த பெரும் பெருமை.

இப்படி பல்வேறு நிகழ்வுகளோடு தொடர்கையில், எல்லோரும் அதிரும்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

அது என்ன? காத்திருங்கள் சொல்கிறேன்.

(தொடரும்…)

20.12.2021   12 : 30 P.M

Comments (0)
Add Comment