– தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
புதிய வகை கொரோனா அதிக வீரியமுள்ள வேகமாக பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன்முதலாக கண்டறியப்பட்டது.
ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவில் டிசம்பர் 2-ம் தேதி கர்நாடகாவுக்கு வந்தவருக்கு முதல் முறையாக இந்த வகை வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் உள்ளவர்களுக்கு இதன் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்து உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து வந்த 45 வயது என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியருக்கும், 15 வயது சிறுவனுக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.
இதனிடையே ஒமிக்ரான் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் 89 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மக்களிடையே அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ள நாடுகளில் இது மிக வேகமாக பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கும் திறனால் அல்லது வேகமாக பரவக் கூடிய தன்மையினால் அல்லது இந்த இரண்டும் சேர்ந்ததால், இந்தளவுக்கு வேகமாக பரவுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.