உறவுகள் தொடர்கதை – 19
குடும்பத்தைக் கலக்கும் இன்னும் சில முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம். தம்பதியரில் யாராவது ஒருவர் மற்றவரை ‘உணர்ச்சிபூர்வ மிரட்டலில்’ கட்டுக்குள் வைத்திருப்பது. இது பல குடும்பங்களில் இயல்பாக நிகழ்கிறது.
ஆண்களைப் பொறுத்தவரை, பேசாமல் இருப்பது, தாம்பத்தியத் தேவைகளில் சுணக்கம் காட்டுவது, செலவினக்களில் வேண்டுமென்றே இழுத்துப் பிடிப்பது, மற்ற பெண்களோடு ஒப்பீடு செய்து மட்டம் தட்ட முயற்சிப்பது, உடல் ரீதியாகத் தாக்குதல் நடத்துவது, மனைவியை அவளைச் சேர்ந்தவர்களை, நேரடியாக / மறைமுகமாக, இழிவுபடுத்திக் கொண்டிருப்பது,
மேலும் தன்னையும், பொருளாதாரத்தையும், மண வாழ்க்கையையும் சேர்ந்து கெடுக்கும் பழக்கங்களில் அதிகமாக ஈடுபடுவது அல்லது புதிய பழக்கங்களை உருவாக்கிக் கொள்வது.
குழந்தைகள் உள்ளிட்ட விஷயங்களில் அலட்சியமாக இருப்பது, அம்மாவைப் பற்றி குழந்தைகளிடம் எப்போதும் குறைகளாக சொல்லிக் கொண்டிருப்பது போன்றவற்றை செய்வதன் மூலம், மனைவியைக் கட்டுக்குள் வைக்க முடியும் என நினைப்பவர்கள் ஏராளமான பேர்கள் இருக்கின்றனர்.
அதே போல மனைவியை எடுத்துக் கொண்டால், அழுவது, எல்லாவற்றுக்கும் பழைய விஷயங்களை ஆதியோடந்தமாக பேசுவது, ஆரம்பத்தில் தனக்கு நேர்ந்தவற்றை ஒவ்வொரு சிறிய சந்தர்ப்பத்திலும் சொல்லிக் காட்டிக் கொண்டிருப்பது.
இதை பிறப்புரிமை போல ஒரு சந்தர்ப்பத்தையும் தவறவிடாமல் செய்யும் பெண்கள் மிக அதிகமானோர் இருக்கிறார்கள்.
இரு தரப்பினர் செய்யக் கூடிய விஷயங்களின் பட்டியலில், இங்கே குறிப்பிட்டு இருப்பது மிகச் சிலவற்றைதான்.
இத்தகைய பரஸ்பர உணர்ச்சிபூர்வ மிரட்டல்களால் இருவருக்குமே நஷ்டம் என்பதை உணரும்போது பலனில்லாமல் போன வாழ்க்கை ஏராளம்.
அப்படியே தொடர்ந்தாலும், வெறுமை, சேர்ந்து இருந்தும் தனிமை என்று காலம் தள்ள வேண்டியிருக்கும் என்பதை மறக்காதீர்கள்.
இவற்றுக்குத் தீர்வுகள் இருக்கிறதா? ஒரே தீர்வுதான். எனக்கானவன் / எனக்கானவள் என்று நான் ஏற்றுக்கொண்ட நபரின் குறைகள் மாற்றக் கூடியதா? அவனது / அவளது திறனுக்குள் வரக்கூடியதா? என்பது சம்பந்தப்பட்டவருக்குத் தெரியும். அதனடிப்படையில் மன்னிக்கவும், மறக்கவும் முடிவெடுக்கலாம்.
எதுவாக இருந்தாலும், நிகழ்கால வாழ்க்கையை நாசமாக்குவது, பெரும்பாலான கடந்த காலக் கசப்புகள்தாம். இதைப் புரிந்துகொண்டால் பல வீடுகளில் அமைதி தவழும்.
நாம் கடந்த காலத்தில், தெரியாமல், புரியாமல், அந்தச் சமயத்துக்கு நமக்கு இருந்த அறிவு, புரிந்துணர்வு, முதிர்ச்சியின்மை, அவசரம், அலட்சியம் ஆகியவற்றின் அடைப்படையில் பலவற்றைப் பேசியிருப்போம்.
சிலவற்றை செய்திருப்போம், செய்யாமல் விட்டிருப்போம். அதையே யாராவது ‘வாழ்க்கையின் மேற்கோளாக’ காட்டிக் கொண்டிருந்தால், என்ன மாதிரியெல்லாம் உணருவோம் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.
நமக்குக் கோபம் கொப்பளிக்கும். வருத்தம், சுருங்க வைக்கும். அவமான உணர்வு, சுயத்தை நொந்து கொள்ளுதல் ஆகியன விளைவுகளாக இருக்கும்.
இவற்றுக்குக் காரணமானவர்களை நம்மால் அன்பாக நினைக்க முடியுமா? அதே போலத்தான் மற்றவரும் என்பதை மனதில் இருத்திச் செயல்பட்டாலே, பல பிரச்சினைகள் தொடர் கதையாக இருக்காது.
அடுத்த முக்கிய விஷயம், பணம். இதை யார் எப்படி செலவழிப்பது என்பதில் எழும் பிரச்சினைகள் மற்ற பல அம்சங்களை பாதிக்கும்.
வழக்கமாக ஆண் சம்பாதிப்பார். அதை குடும்பத்தை ஏற்று நடத்தும் பெண்ணைக் கலந்து கொண்டு செலவுகள் தீர்மானிக்கப்படும். அதன் முடிவைத் தீர்மானம் செய்வது ஆணிடம் இருந்தது.
ஆனால் காலம் மாறி விட்டது. சித்தாள் வேலையிலிருந்து, சி இ ஓ வரை பெண்களும் வேலை செய்கிறார்கள். அதனால், செலவுகள் பற்றி இருவரும் சேர்ந்து முடிவு செய்வதுதான் சரியான விஷயமாக இருக்கும்.
அதே சமயம், ஆணிடமிருந்து, திருமணத்திற்குப் பிறகும் ஆதரவு வேண்டி நிற்கிற தாய் தந்தையர், சகோதரிகள் கணக்கிலடங்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில் ஆண் இருக்கிறான்.
இதைப் பெண் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயம், திருமணத்திற்கு முன்பிருந்த முழுமையான ஆதரவை, தங்களது மகன், சகோதரன் கொடுக்க முடியாது என்பதையும் அவனது குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்.
தாங்களும் தங்களது வாழ்க்கைக்குத் தேவையான பொருளை ஏதாவது ஒரு வகையில், தேடிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கான உதவியை வேண்டுமானால், முழுமையாகக் கேட்டுப் பெறலாம்.
உடல் நிலை சரியில்லாத பிரச்சினை, வயது மூப்பு போன்ற சமயங்களில் வேண்டுமானால் கூடுதல் உதவியை, ஆதரவை எதிர்பார்க்கலாம்.
அந்த ஆதரவுக்கு, உதவிக்கு நன்றியாக இருத்தல் முக்கியம். இது வார்த்தைகளில் சொல்லும் விஷயம் அல்ல. நடத்தையில் காண்பிக்கும் விஷயம். அவனது மனைவி, உறவினர்களைப் பற்றி புறம் கூறாமல் இருப்பது முக்கியமானது.
குறைகள் இருந்தால், சொல்லுவதில் தவறு நிச்சயமாக இல்லை. அது வெறுப்பை, வேதனையை உண்டாக்குவது போல இருக்கக்கூடாது என்பது முக்கியம்.
ஆணின் நிலை, எப்போதும் பிறருக்குப் பயன்படும் நிலைதான் என்பதைப் பெண் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை, அவளது தந்தை, சகோதரன், மகன் ஆகியோரிடத்தில் அவளுக்கு இருந்த / இருக்கும் எதிர்பார்ப்புகளை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். இது சாதாரணப் புரிதல்தான். ஆனால் மிக முக்கியமான புரிதல்.
அதே போல, பெண் வாரிசு மட்டும் இருக்கும் பெற்ரோர்களையும், கவனித்துப் பராமரிப்பதில், அவளைத் திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு சரி சமான பங்கும் பொறுப்பும் உள்ளது என்பதைப் புரிந்து கொள்வதுடன், ஏற்றுச் செயல்படுவதை நடைமுறையில் இயல்பாகக் கொண்டு வர வேண்டும்
இதைத் தவிர இருவரும் சம்பாதிக்கும் பணத்தைப் பொதுவாக வைத்துத் தீர்மானிக்க வேண்டியது முக்கியம். இதை ‘நான்’, ’எனது’, ’அதிகம்’, ’குறைவு’ என்ற அம்சங்கள் வராமல் பார்த்துக் கொண்டால், இது குறித்த பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
அடுத்ததாக குடும்பத்தைக் கலக்கும் விஷயம் என்று பார்த்தோமானால், ‘தான், தன் சுகம் முக்கியம், அதை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று சுயநலத்துடன் வாழ்வது, பெரும் பிரச்சினைகளில் கொண்டு விடும்.
பலரும், குறிப்பிட்ட விஷயங்களுக்கு சிறு வயது முதல் பழகியிருப்பார்கள்.
அதுவும், ஒரே பெண் / பையன் / என்று இருப்பவர்கள், கடைக் குட்டியாய்ப் பிறந்தவர்கள் ஆகியோருக்கு, தனது தேவைகள் முதலில் முடிய வேண்டும் என்ற நினைப்பு அதிகமாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
தான் வளர்ந்து பெரியவராகிவிட்டோம், ஒரு குடும்பத்தின் தலைவியாக, தலைவனாக ஆகிவிட்டோம். நான் என்பது நாமாக மாற வேண்டும்” என நினைத்தாலே, நாளடைவில் மாற்றங்கள் பிறக்கும்.
அன்றாட வாழ்வில் எதெல்லாம் மண வாழ்க்கையை கசப்படைய செய்யும், என்பதைப் பட்டியலிடுவது மிகக் கடினம். ஆனாலும் கூட, பொதுவான சில முக்கிய அம்சங்கள், குடும்ப வாழ்க்கையைக் கலங்கடிக்கும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றன. அந்த வரிசையில் இன்னும் இரண்டு விஷயங்களைப் பார்க்கலாம்.
– தனஞ்செயன், மனநல ஆலோசகர்.
22.12.2021 12 : 30 P.M