டாக்டர் க.பழனித்துரை
தமிழகத்தில் எல்லோராலும் மக்கள் மருத்துவர் என அழைக்கப்பட்ட ஜீவானந்தம் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. எனவே அவரின் முதலாண்டு நினைவு விழா ஈரோட்டில் டிசம்பர் 12ஆம் தேதி அவர் துவக்கி நடத்தி வந்த சித்தார்த்தா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மக்கள் மருத்துவர் ஜீவா ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக மாற்றுமுறை தேடி அலைந்தவர்.
அவர் வாசிப்பையும் நேசிப்பையும் தன் இரண்டு கண்களாக எண்ணி செயல்பட்டவர். இவர் சாதி, சமயங்களைக் கடந்தவர், பிராந்தியங்களைக் கடந்தவர், இசங்களைக் கடந்தவர், மனிதத்துவத்தில் தன்னை தோய்த்துக் கொண்டவர்.
அவருடைய பணி தன்னார்வலர்களுக்கு அறிவூட்டுவதும், உணர்வூட்டுவதும் தான். மக்களை நோக்கிய செயல்பாடுகளில் அவருடன் பயணித்தவர்கள் பெருங்கூட்டமாக கூடினர் ஈரோட்டில்.
மருத்துவர் ஜீவா அவர்களின் சகோதரி அவருக்குத் தெரிந்தவரை அனைவரையும் அந்த விழாவில் உணர்வுப்பூர்வமாக இணைத்துவிட்டார். அது அனைவரையும் மலைக்க வைத்தது.
சமூக சேவகி மேதாபட்கர், நீதி நாயகம் சந்துரு, காந்தியவாதி ந.மார்க்கண்டன், காந்தியப் போராளி பசுமை உதயக்குமார், திராவிட இயக்கத்தைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், எழுத்தாளர் ஜெயமோகன், ஆதிவாசிகளுக்காக செயல்படும் வி.ப.குணசேகரன்,
அவர்களுடன் மருத்துவர் ஜீவா அவர்களின் நினைவுப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர் சமஸ், பாடகர் கிருஷ்ணா, சூழலியல் பெண்மணி விஷ்ணுப்பிரியா ஆகியோர் நிகழ்வுக்கு வந்து பெருமை சேர்த்தனர்.
எல்லா நிகழ்வுகளுக்கும் பின்புலமாக குக்குத் தம்பி, தங்கைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். மருத்துவர் ஜீவா, முதுமை அடைந்த போதும் தன் சிந்தனையாலும் செயலாலும் இறக்கும்வரை இளமையோடு இளைஞர்களோடு செயல்பட்டார் என்பதற்குச் சான்று பகர்வது போல பெரும் இளைஞர் கூட்டம் உணர்வு பூர்வமாக தங்களை இணைத்துக் கொண்டிருந்தது அந்த விழாவில்.
விழாவில் பேசிய ஆளுமைகள், மருத்துவர் கொண்டாடப்பட ஏன் வேண்டியவராக இருக்கிறார் என்பதை விளக்கினர்.
மருத்துவர் ஜீவாவிற்குச் செய்யும் அஞ்சலி என்பது, அவர் வழி நடப்பதும், மக்களுக்காகச் செயல்படுவதும் தான் என்பதை வலியுறுத்திப் பேசினர்.
அவர் விளிம்புநிலை மக்களுக்காக எப்படிப் பாடுபட்டார் என்பதை விளக்கமாக மேதாபட்கர் பேசினார்.
அவர் ஒரு சூழலியல்வாதியாக சூழல் பாதுகாப்புத்தான் விளிம்புநிலை மக்களைப் பாதுகாக்கும் என்ற புரிதலோடு செயல்பட்டவர் என்பதை மேதாபட்கர் வலியுறுத்திப் பேசினார்.
எனவே இயற்கை வளப் பாதுகாப்பு என்பது மருத்துவரின் தலையாய பணியாக இருந்தது. மருத்துவர் மக்கள் பிரச்சினைகளுக்கு பிரச்சினைகளின் பக்கம் நின்றவர் கிடையாது. மாறாக தீர்வின் பக்கம் நின்றவர். மிகப்பெரும் சமூக மூலதனத்தை உருவாக்கி கட்டமைத்துச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்.
அவரின் செயல்பாடுகள் அனைத்தும் மாற்றுமுறை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் செயல்படுவது. அது நெருப்பாற்றில் நீச்சலிடுவதுபோல. ஆனால் அந்தப் பணியை அமைதியாக நடத்திக் கொண்டிருந்தவர்.
சில தனி நபர்கள் அமைப்புக்களாக மாறுவார்கள், நிறுவனங்களாக மாறுவார்கள், இயக்கங்களாகவே மாறுவதுண்டு.
தங்கள் செயல்பாடுகளினாலே நம்மாழ்வார் அங்கொன்றும் இங்கொன்றுமாக விதைகளைத் தூவினார். அது இன்று மாபெரும் இயக்கமாக இயற்கை விவசாயம் உருவாகி விட்டது.
அதேபோல் மக்கள் மருத்துவர் ஜீவா தன்னுடைய சிந்தனை வலிமையால், எண்ணற்ற நிறுவனங்களை தன்வயமாக்கி மாற்றுமுறை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைத்து, விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றினார்.
எல்லாச் செயல்பாடுகளுக்கும் சிந்தனைப் போக்கு என்பதுதான் அடிப்படை என்பதை உணர்ந்த காரணத்தால் பொறுப்புமிக்க செயல்பாட்டிற்கு அடிப்படைப் புரிதலை களச் செயல்பாட்டாளர்களுக்கு உருவாக்க தொடர்ந்து கருத்துப் பெட்டகங்களை புத்தகங்களாக உருவாக்கி, புரிதலுடன் செயல்பட வைத்த பல்கலைக் கழகமாகவே மக்கள் மருத்துவர் ஜீவா கடைசிவரை செயல்பட்டார்.
செய்க பொருளை என்று வள்ளுவன் கூறியதுபோல செயல்பாட்டுக்கு பொருள் முக்கியம், செயல்பாட்டாளனுக்கு தன்வாழ்வு முக்கியம்.
இவைகள் இரண்டும் இல்லாமல் மக்கள் செயல்பாடு சாத்தியமில்லை இந்த உலகில் என்பதை ஆழ்ந்த புரிதலுடன் செயல்பட்டவர்.
ஜீவாவுடன் பயணிப்பவர்கள் எதையும் இழக்க வேண்டியது கிடையாது. மக்கள் மேல் கரிசனம் கொண்டு செயல்பட ஒரு ஆர்வம் வேண்டும். அந்த ஆர்வம் கொண்டவர்களை தொடர்ந்து கண்டுபிடிக்கும் வேள்வியில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு தன் நட்பு வட்டத்தை பெருக்கிக் கொண்டேயிருந்தார்.
மனிதர்கள் அவருக்கு பெரும் மூலதனம் என்பதை உணர்ந்து செயலுக்கான மனிதர்களைக் கண்டுபிடித்து இணைப்பதுடன் அவர் நின்றுவிடுவதில்லை. அவரவர் தகுதி, திறன், ஆற்றல், இவை அனைத்திற்கும் ஏற்ப களத்தில் இறக்கி தன்னுடன் இணைந்தவர்களை செயல்பட வைத்தவர்.
எனவே அந்த வகையில் ஒரு உந்துனராக பலருக்குச் செயல்பட்டு பல அரசியல், சமூக நகர்வுகளுக்கு காரணமாக விளங்கியவர் என்று பலரும் புகழாரம் சூட்டினர். அவரைப் பற்றி தலைசிறந்த ஆளுமைகள் எழுதிய கட்டுரையின் தொகுப்புக் கோவையை வெளியிட்டனர்.
அத்துடன் பல புத்தகங்கள் இலவசமாக சமூகத்திற்கு சென்றடையும் வகையில் வெளியிட்டனர்.
மருத்துவர் ஜீவா அவர்களின் சகோதரி ஜெயபாரதி, ‘ஜீவாவின் அறக்கட்டளை எதற்காக, அதில் நிகழப்போகும் செயல்பாடுகள்’ என்பதை விளக்கினார்.
நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் தொட்டுக்கூறியது ஜீவாவின் உன்னதக் குறிக்கோளாக எதை வைத்துச் செயல்பட்டார்; எந்த அணுகுமுறையை வைத்துச் செயல்பட்டார்; எந்த முறைமையியலை வைத்துச் செயல்பட்டார் என்பதைத் தான்.
எழுத்தாளர் ஜெயமோகன், மருத்துவர் ஜீவாவின் சமூகச் சேவைக்கான செயல்பாட்டின் அடிப்படைக் கூறுகளாக எவற்றையெல்லாம் வைத்துச் செயல்பட்டார் என்பதனை மிக விளக்கமாக இளையோருக்கு பயனளிக்கும் வகையில் எடுத்துக் கூறினார்.
அதேபோல் நீதிநாயகம் சந்துரு, மருத்துவர் ஜீவானந்தம் ஏன் கொண்டாடப்படும் ஆளுமையாக விளங்கினார் என்பதனை குறிப்பிட்டார்.
காலை 10.30 மணிக்கு விழா நடைபெற்ற அரங்கினுள்ளே நானும் என் நண்பர்களும் சென்றோம்.
அந்த அரங்கத்திற்குள் சென்ற நிமிடம் துவங்கி, நன்றி நவிலல்வரை ஒரு ஆசிரமத்தில் ஓர் ஆசிரமவாசி யோகத்தில் அமர்ந்ததுபோல் அமர்ந்து கருத்தாளர்கள் பேசியதைக் கவனித்ததால், என் சிந்தனை முழுவதும் அவர் எனக்காகத் தயார் செய்த களச் செயல்பாட்டு அஜண்டாவிலேயே லயித்திருந்தது.
நான் என் பணியில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கெல்லாம் அவர் யோசித்து என்னை இயக்கியதை எண்ணிப் பார்த்து வியந்து கொண்டிருந்தேன்.
கிரேக்கத்து அறிஞன் சாக்ரடீஸ் தனக்கு அந்த அரசு விஷம் கொடுத்துக் கொல்ல முடிவெடுத்துச் செயல்பட்டபோது கூறினான்,
“நான் வாழ்வது என் உடலில் என நினைத்து எனக்கு விஷம் கொடுக்கும் பைத்தியக்காரக் கும்பலுக்குத் தெரியாது. நான் வாழ்வது என் உடலில் அல்ல, என் சிந்தனையில் என்று”.
அதுபோல் கவிஞர் கண்ணதாசன் பாடினார், ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை’ என்று. அதுபோல் மருத்துவர் ஜீவா அவர்கள் தன் சிந்தனையால் பலரைக் கவர்ந்து அவர்களுடன் உரையாடி களத்திற்கு அவர்களைத் தள்ளி விட்டு அவர்களுடன் பயணித்தவர்.
சமூக மூலதனத்தை எப்படி உருவாக்க முடியும் என்பதற்கு இவரிடம் நாம் பாடம் படிக்க வேண்டும்.
அந்த அளவுக்கு அவர் முறைமை தெரிந்து மக்களை இணைத்து ஒருவருக்கொருவர் பலமாக இருந்து செயல்பட வழிவகுப்பார்.
அந்த அரங்கத்திற்குள் சென்றவுடன் அங்கு அவர் எழுதிய மொழிபெயர்த்த புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவை அனைத்தும் என் நூலகத்தில் இருக்கின்றன. அவர் வரும்போதெல்லாம் எதாவது ஒரு நூல் கொண்டு வருவார்.
நாம் எதாவது படித்தீர்களா என்று கேட்டால் உடனே அது எங்கே என்று வாங்கிச் சென்று ஒரு பிரதி எடுத்துவிட்டு புத்தகத்தை திரும்ப அனுப்பி விடுவார்.
அடுத்த 10வது நாளில் அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு அச்சிட்டு வெளியிடத் தயாராக்கி விடுவார். பதிப்பிரிமை பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதே கிடையாது. புத்தகம் மக்களுக்கானது, அதை மக்களிடம் சேர்க்க வேண்டியது சமூகச் செயல்பாட்டாளரின் கடமை என்று கூறுவார்.
அவர் ஒரு முறைமை வைத்திருந்தார். ஒருவர் தவிர்க்க இயலாத மனிதர், அவரை களத்தில் இறக்க வேண்டும் என்று நினைத்தால் அவரை ஆணையிட மாட்டார்.
மாறாக அவரை யாருக்காக, எதற்காக செயல்பட வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றாரோ அங்கு அழைத்துச் சென்று உணர்வூட்டி விடுவார்.
அதேபோல் ஒரு நல்ல புத்தகத்தை அல்லது கட்டுரையைக் கொண்டுவந்து கொடுத்து படிக்க வைத்து நம்மை செயல்பாட்டுக்கு உணர்வூட்டி விடுவார்.
அவரின் வசீகரத் தன்மை என்னை மிகவும் வியக்க வைத்தது. மனிதர்களை உள்வாங்கிக் கொள்வார்.
விவாதம் செய்வார், கருத்துக்களை பரிமாறிக் கொள்வார், எதிர் கருத்தை அவர் வாங்கும் விதம் மக்களாட்சிக்கே புது விளக்கம் கூறும் அளவுக்கு இருக்கும். அப்படிப்பட்ட நேயத்தை வைத்திருந்தார்.
எவரையும் தன்வயப்படுத்தும் தன்மை கொண்டவராக தன்னை வளர்த்துக்கொண்ட மிகப் பெரிய ஆளுமை அவர்.
அந்த விழாவில் பேசியவர்கள் அனைவரையும் அவர்தான் தேடிப்பிடித்து தன் வயப்படுத்தி செயல்பட வைத்திருக்கிறார், எழுத வைத்திருக்கிறார், போராடச் செய்திருக்கிறார்.
அத்தனை பேருடனும் அவரவர், இயங்கு தளத்தில் செயல்பட்டபோது, அனைவருடனும் அவர் இணைந்து செயல்பட்டதுதான் அத்தனை ஆளுமைகளையும் அவர் மறைந்ததற்குப் பிறகு இணைத்திருக்கிறார்.
கடைசிவரை அவரின் இயங்கு தளம் என்பது மாற்றுமுறை கண்டு பயணிப்பது என்பதில்தான். அது எதிர் நீச்சல் போடுவது போல்தான்.
அதற்கு இவ்வளவு பேரை ஒன்று சேர்த்திருக்கிறார் என்றால் அது ஒரு சாதாரணச் செயல்பாடு அல்ல. அவருடன் பணி செய்வது கடினம் ஆனால் இனிமையானது.
ஒவ்வொரு முறையும் அவர் என் இல்லம் வரும்போது மிகப் பெரும் களச் செயல்பாட்டு ஆளுமைகளுடன் வருவார். அவர்களை வைத்துக் கொண்டு விவாதிப்பார்.
அது செல்வமாக இருக்கட்டும் வி.பி.குணசேகரனாக இருக்கட்டும், ஒவ்வொருவரும் ஒரு முத்திரை பதித்தவர்கள் தங்களின் இயங்கு தளங்களில்.
அந்த மாமனிதர் தன் சிந்தனையாலே இன்றும் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அந்த விழாவிற்கு வந்தவர்களே சாட்சி.
அது மட்டுமல்ல அவர் பெயரில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையை இயக்கும் பணியை அவர் சகோதரி செய்த விதம் ஒரு மிகப் பெரிய நம்பிக்கையை வளர்த்திருக்கிறது.
அவருடைய பணிகளை அவருடைய சகோதரி செய்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் விழாவிலிருந்து திரும்பினேன். அந்த விழா அஞ்சலி விழாவாக இல்லாமல் அர்பணிப்புக்கான ஒரு சங்கல்ப விழாவாக இருந்ததை உணர்ந்து மகிழ்ந்து காந்திகிராமம் திரும்பினேன்.