கர்நாடகாவைச் சேர்ந்த பீமேஷ் என்பவரது சகோதரி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலைப் பார்த்து வந்தார். கடந்த 2010-ல் பீமேஷின் சகோதரி காலமானார்.
இதையடுத்து மாநில கல்வித் துறையிடம் பீமேஷ் தாக்கல் செய்த மனுவில், ‘திருமணமாகாத என் சகோதரியின் ஊதியத்தை நம்பித் தான் நான், என் தாய், இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் வாழ்ந்து வந்தோம். அதனால் கருணை அடிப்படையில் எனக்கு வேலை வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை மாநில கல்வித் துறை தள்ளுபடி செய்தது. இதையடுத்து மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் பீமேஷ் மனு தாக்கல் செய்தார். பீமேஷுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெறுவது உரிமையல்ல.
வேலை வழங்க வேண்டும் என்பதும் கட்டாயமல்ல. குடும்பத்தின் சூழ்நிலை, நிதி நிலைமை உள்ளிட்ட பலவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இறந்தவரை நம்பியே அவரது குடும்பம் இருந்ததாக முழுமையாக உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும்.
அதனால் இந்த வழக்கில் வாரிசு வேலை வழங்க உத்தரவிட்ட கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது” எனத் தீர்ப்பளித்தனர்.
17.12.2021 4 : 30 P.M