ஒமிக்ரான்: அதிவேகமாகப் பரவும் ஆபத்தான வைரஸ்!

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா பாதிப்புக்கு எதிராகத் தடுப்பூசிகளைச் செலுத்தி போராடிவரும் நிலையில், தற்போது புதிதாக ‘ஒமிக்ரான்’ என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் வட மாநிலங்களில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர்களைப் பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே ஒமிக்ரான் பாதிப்பு குறித்து விளக்கமளித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், “ஒமிக்ரானை மிதமான வைரஸாக நினைக்காதீர்கள், மற்ற கொரோனா உருமாற்ற வைரஸை விட ஒமிக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது.

பிற கொரோனா உருமாற்ற வைரஸ்களை விட ஒமிக்ரான் வைரஸ் அதிக வேகத்தில் பரவி வருகிறது.

இந்த வைரஸ் குறைந்த ஆபத்தையே ஏற்படுத்தும் என்றாலும், அதிக அளவில் பரவும் தன்மை இருப்பதால் நமது மருத்துவ கட்டமைப்புக்கு சவால் விடக்கூடியதாக இருக்கும்.

ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் கூட பெரிய அளவில் பயன்தரும் என சொல்லிவிட முடியாது. பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் முக்கியமாக பின்பற்றப்பட வேண்டும்.

ஒமிக்ரான் குறித்த உறுதியான முடிவுகளை எடுக்க கூடுதல் தரவு தேவைப்படுகிறது. அதற்கு சில நாட்கள் ஆகும்.

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதித்து குணமடைந்தவர்களை கூட மீண்டும் பாதிக்கும் தன்மை உடையது ஒமிக்ரான் என தென்ஆப்ரிக்க அரசு கூறி வருகிறது.

ஒமிக்ரான் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

17.12.2021  5 : 30 P.M

Comments (0)
Add Comment