நமக்கான இலக்கை எப்படித் தேர்ந்தெடுப்பது?

‘வாழ்க்கையே போர்க்களம்… வாழ்ந்துதான் பார்க்கணும்..!” என்றார் வைரமுத்து.

நமக்குள் ஒரு போராட்ட குணம் இருந்தால் மட்டுமே எந்தக் காரியத்திலும் வெற்றி பெற முடியும். போருக்குச் செல்கிற எல்லோருமே ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன்தான் செல்வார்கள்.

போர்முனைக்குச் சென்று தற்கொலையில் ஈடுபடும் எண்ணம் எவருக்கும் இருப்பதில்லை. தன் வீரத்தைக் காட்டி வாகை சூட வேண்டும் என்பதற்காகவே அனைவரும் தயாராகிறார்கள்.

வாழ்க்கையும் அப்படியான வெற்றிக்கானதுதான்.

வருகிற பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயங்கக் கூடாது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். நமக்கான போர்க்களம் எது என்பதைத் தீர்மானிப்பது முதலில் முக்கியம்.

போர்க்களம் என்பதை இலக்கு நோக்கிச் செல்லும் பாதை என்றும் வைத்துக் கொள்ளலாம். நமது பாதையைத் தீர்மானிக்கும் நாம், அதிலிருந்து துளியும் தடம் மாறிவிடக் கூடாது. சிறிது மாறினாலும் இலக்கு தவறிவிடும்.

எவை போர்க்களம் என்று எப்படித் தீர்மானிப்பது…?

உங்களுக்கான வருமானம் வரும் இடம்… ஜெயிக்கும் இடம்… நமது வாழ்க்கையை வசதியாக்கும் இடம்… எதிர்கால மேம்பாடு இருக்கும் இடம்… இவற்றை அடையாளம் கண்டு அதில் கவனம் செலுத்த வேண்டும்.

அக்கம்பக்கத்து வீட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு அதில் உங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது எல்லோருக்கும் பலன் தராது.

உங்கள் அபார்ட்மென்ட்டில் நீங்கள் ஒரு பொறுப்புக்கு வர வேண்டும் என்ற இலக்கு இருந்தால் மட்டுமே அதனால் உங்களுக்குப் பலன் இருக்கும். வெட்டியாக நேரத்தை ஈர்க்கும் எதுவுமே உங்கள் போர்க்களமில்லை.

கார் வைத்திருக்கும் எவரும் தெருவோர நபரிடம் வீண் வாக்குவாதம் செய்வதில்லை. தெரு நபருக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அவர் ஒரு கல்லை எடுத்து எறிந்தால், கார் சொட்டையாகும். கண்ணாடி சிதறிப் போகும். நஷ்டம் யாருக்கு..?

எனவேதான், தெருவோர நபர் திட்டினாலும் அதைக் காதில் வாங்காமல் சென்று விடுவார் கார் நபர். அதுபோல சில விஷயங்களைக் கண்டும் காணாமல் போய்விடுவது நமது இலக்கு நோக்கிய பயணத்துக்கு நல்லது.

தேடிச் சென்று வாங்குவோம் என்ற நம்பிக்கையில்தான் பஜாரில் அத்தனை விற்பனையகங்கள் உள்ளன. அவர்களின் இலக்கு நம்மை அங்கே வரவழைப்பது. விளம்பரம் மூலம் நம்மைத் தூண்டி, வரவைத்து வருமானம் பார்க்கிறார்கள்.

அதுபோல் நமக்கான வருமானத்தை நம்மை நோக்கி வரவைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் இடமும் போர்க்களம்தான். அங்கே நாம் சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம்.

எனவே, போர்க்களத்தைத் தீர்மானிக்கையில், அர்ஜூனனின் அம்புப் பார்வை அவசியம்.

இலக்கு நிர்ணயித்து அதிலேயே பயணித்து வெற்றி கண்டவர்கள் அனைத்துத் துறைகளிலும் இருக்கிறார்கள். அப்படி ஒருவர்தான், குத்துச் சண்டை விளையாட்டில் இந்தியாவுக்குப் பெருமை தேடி தந்த மேரிகோம்.

உலகளவில் பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் 7 முறை சாம்பியன்ஷிப் பதக்கம் வென்றவர். இந்தச் சாதனையை உலக அளவில் செய்த முதல் இந்தியப் பெண் என்பது சிங்கப் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஏழ்மையான விவசாயக் குடும்பத்துப் பெண் மேரிகோம். குத்தகை நிலத்தில் விவசாயம் செய்த குடும்பம். அப்பாவுக்குக் குத்துச்சண்டை மல்யுத்தத்தில் சிறிது ஆர்வம். தன் மகளுக்கு விளையாடுகிற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார்.

சிறு வயதிலேயே பள்ளியில் ஈட்டி எறிந்தும், தடகளப் போட்டிகளில் பங்கேற்றும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து பரிசுகள் பெற்றிருக்கிறார் மேரிகோம். அதன் மூலம் தடகள் வீராங்கனையாக பள்ளியில் வலம் வந்தார்.

15-வது வயதில், மணிப்பூரைச் சேர்ந்த டிங்கோ சிங் என்பவர் ஆசிய அளவிளான குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற செய்தியைப் படித்தார்.

‘அடடா, நம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறாரே, நாமும் குத்துச் சண்டை கற்றுக்கொண்டு முயற்சித்தால் என்ன..?’ என்ற ஆர்வம் மேரிகோமுக்கு வந்தது.

தடகளத்திலிருந்து குத்துச் சண்டை பயிற்சியில் இறங்கி வேகமாகக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். அடுத்த இரு ஆண்டுகளில் தேசிய அளவில் மகளிர் அணியில் விளையாடி முதல் வெற்றியைப் பெற்றார்.

அதுவரை தன் மகள் தடகளத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்த மேரியின் அப்பா. அவர் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் களமிறங்கி இருப்பதை அறிந்து அதிர்ச்சியானார்.

காரணம், குத்துச்சண்டை பற்றி மகளுடன் பேச்சு வந்தபோது, பெண்கள் குத்துச் சண்டையில் ஈடுபட்டால், அவர்களின் முகம் இறுகி, உடலே ஆண்களைப் போலாகி விடும். திருமணத்துக்கு அதுவே தடையாகிவிடும் என்று எச்சரித்தார். எனவே, தந்தையிடம் அதை மறைத்திருந்தார் மேரி.

முதலில் தந்தை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், மாநிலமே தன் மகளைப் பாராட்டியதைப் பார்த்து மகிழ்ந்துவிட்டார். அங்கே தொடங்கியது. மேரி கோமின் வெற்றி வேட்டை.

2002-ம் ஆண்டு தொடங்கி சர்வதேசப் போட்டிகளில் 18 முறை பதக்கங்கள் உள்பட, தொடர்ந்து 6 முறை உலகளவில் சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றிருக்கிறார் மேரிகோம்.

உலகத் தரவரிசையில் வேர்ல்டு சாம்பியன் ஷிப்பில் முதல் இடத்தை பெற்றவர். மணிப்பூர் அரசு இவருக்கு ‘கிரேட் லேடி’ பட்டம் கொடுத்து கவுரவித்தது. இவர் வசிக்கிற தெருவுக்கு ‘மேரிகோம் வீதி’ என்று பெயர் சூட்டியுள்ளது மாநில அரசு.

ராஜ்யசபா எம்.பி.யாக அங்கீகரித்தது இந்திய அரசு. 2003-ம் ஆண்டு அர்ஜூனா விருது, 2006-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது. 2009-ம் ஆண்டு கேல்ரத்னா விருது, 2013-ம் ஆண்டு பத்மபூஷண் விருது என்று இவரைத் தேடிவந்த விருதுகளும் ஏராளம்.

2004-ம் ஆண்டில் இவருக்கு திருமணம் முடிந்தது. அப்பா பயந்தது போல் இல்லாமல், இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். பெரும்பாலும், இந்தத் துறையில் இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு போட்டிகளில் விளையாடுவது இல்லை.

ஆனால், இவர் கணவர் ஒரு கால் பந்தாட்ட வீரர் என்பதால், இவரை ஊக்குவித்து ‘உன்னால் முடியும்!’ என்று சொல்லி திரும்பவும் குத்துச்சண்டைக்குத் தயார்படுத்தினார்.

பிறகு 2008-ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்றார் மேரிகோம். 2013-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அதன் பிறகும் என்னால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையில் 2018-ல் தன்னுடைய 35-வது வயதிலும், குடும்ப சுமை இருந்த போதிலும், உலகளவில் சாதனை படைத்துள்ளார் கிரேட் லேடி மேரி கோம்.

இப்போது மேரிகோம் பாக்ஸிங் அகாடமி அமைத்து ஆர்வமுள்ள இளையோருக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகிறார். தன்னைப் போன்று பெண்கள் பலரும் ஆர்வமுடன் விளையாடி வெற்றி பெற வேண்டும்என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் மேரிகோம், விடாமுயற்சிக்குச் சொந்தக்காரர்.

வீட்டில் இருக்கும் அப்பாவே அறியாத வண்ணம், பயிற்சி எடுத்து மாநில அளவில் வெற்றி பெறுகிறார் என்றால், எத்தனை வலிமையான மனதும், அதற்கான பயிற்சியும் அவர் பெற்றிருக்க வேண்டும்.

மூன்று குழந்தைகள் பெற்ற பின்னரும், விடாமுயற்சியுடனும், மன உறுதியுடனும் பதக்கம் வெல்லும் வேகத்துடன், 2018 உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி வரை முன்னேறி இருக்கிறார் மேரிகோம். கடைசி நேரத்தில் பதக்கம் கைநழுவிப் போனாலும், அவரது நம்பிக்கை நழுவி விடவில்லை.

சற்றும் மனம் தளராமல், அடுத்து நடைபெறவிருக்கிற ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற பயிற்சி பெற்று வருகிறார். நிறைய அழுத்தங்கள் இருக்கக்கூடிய பெண் சாதிக்கும்போது, நாமும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற முனைப்பு அனைவருக்குமே வருவது இயல்பு.

அது உங்களுக்கும் வந்தால் நல்லது.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ நூலிலிருந்து…

http://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment