முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது!

– கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணையால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கும் விதமாக துணைக்குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட கூட்டத்தில் இயற்கை பேரிடர் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக துணைக் குழுவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஜாய் ஜோசப் என்பவர் தொடர்ந்த பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அணையில் இருந்து எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் தமிழக அரசு தண்ணீர் திறந்து விடுவதாக கேரளா அரசு கடந்த வாரம் இடைக்கால மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதற்கு தமிழக அரசு நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘நீர் திறப்பால் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்ததாக கேரளா கூறும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது’ எனத் தெரிவித்தது.

இந்நிலையில், நீதிபதி கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு அரசியல் செய்யக் கூடாது. அதை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். சின்ன விஷயங்களுக்கு எல்லாம் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்யக் கூடாது. இதுவே கடைசியாக இருக்கட்டும்.

மேலும், அணை விவகாரம் தொடர்பாக எதற்கெடுத்தாலும் தமிழக அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதாக இருந்தால், 24 மணி நேரத்திற்கு முன்னதாக தமிழக அரசு தகவல் தெரிவித்து விட வேண்டும். அணை பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் உட்சபட்ச அதிகாரம் அதற்கு என்று உருவாக்கப்பட்டுள்ள மேற்பார்வை குழுவுக்கே உள்ளது.

அதனால், எந்த பிரச்சனையாக இருந்தாலும் இரு மாநில அரசுகளும் இந்தக் குழுவை மட்டுமே அணுகி முறையிட்டு, தங்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். அது எடுக்கும் முடிவே இறுதியானது” எனக்கூறி, விசாரணையை ஜனவரி 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் இந்த மனுக்கள் மீது விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டனர்.

Comments (0)
Add Comment