பல நெருக்கடிகளுக்கிடையில் மனச் சோர்வு அடையும்போது, நம்பிக்கையூட்டும் இந்தக் கவிதை வரிகளை வாசியுங்கள்.
மனதிற்குள் சிறு நம்பிக்கை நாற்றைப் போலத் துளிர் விடும். காலத்தின் மீது நம்பிக்கை வரும். “இதுவும் கடந்து போகும்” என்ற யதார்த்தம் புரிபடும்.
முதலில் – நினைவு நூற்றாண்டைத் தொட்டிருக்கும் பாரதியின் எழுச்சியான வரிகள்:
தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்திக் – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேன் என்று நினைத் தாயோ?
– பாரதி
அடுத்து, நவீன கவியான பசுவய்யா என்ற பெயரில் எழுதிய சுந்தர ராமசாமியின் நம்பிக்கை சுடர்விடும் ஒரு கவிதை (காலச்சுவடு வெளியீடு).
****
சவால்
நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.
வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மன வலியுண்டு.
ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பதுங்கல்
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்திருக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்
எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.
16.12.2021 10 : 50 A.M