தலித் மக்களின் வலுவான நம்பிக்கைகளில் ஒன்று உதிர்ந்த உணர்வை உண்டாக்கியிருக்கிறது கான்சிராமின் மரணம்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மீது அவருக்கிருந்த தீவிரமான அக்கறை தான் அரசு ஊழியராக இருந்த வேலையை உதற வைத்தது. தலித் மக்களின் நலனுக்காக 1978-லிலேயே ஒரு அமைப்பைத் தொடங்க வைத்தது.
பிறகு ‘தலித் சோஷித் சங்கர்ஷ் சமிதி’ என்கிற அரசியல் இயக்கத்தையும் தோற்றுவிக்க வைத்தது.
இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது டாக்டர் அம்பேத்கர் மீது அவருக்கிருந்த ஈடுபாடும், வேகமுமே. சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தலித் மக்களை ஒருங்கிணைப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியைத் துவக்கி, குறுகிய காலத்திலேயே உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை அமைத்தார். தான் அமராமல் மாயாவதியை முதலமைச்சராக்கினார்.
மத்தியில் தனிப்பெரும்பான்மை பலம் இல்லாத ஆட்சி அமைந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு அகில இந்திய அளவில் முக்கியத்துவம் கிடைத்தது.
உத்தரப்பிரதேசம் மட்டுமில்லாமல், பஞ்சாப், ஹரியானா என்று பல மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி வளர்வதற்குப் பின்னணி சக்தியாக விளங்கியவர் கான்சிராம்.
தலித்துகள் அமைப்பாய் ஒன்று திரண்டால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டிய கான்சிராமின் முக்கியப் பண்பு- தன்னை முன்னிறுத்தாமல் தான் விரும்பியவர்களை ஆட்சியில் அமர வைத்தது தான்.
தனது செயல்பாட்டின் மூலம் சாதியத்தைக் கடந்தவர். தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதி, இரட்டை வாக்குரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
அதிகாரம் தன் கட்சிக்கு வந்த நிலையில் தலித்துகளுக்கு அதிகாரம் போய்ச் சேர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து நிழலாய் பின் நின்று பாடுபட்டவர்.
அரசியலில் அபூர்வமான அந்த நிழல் மறைந்துவிட்டது.
கான்சிராம் மறைந்த போது- 2006 அக்டோபர் 16 ஆம் தேதியிட்ட ‘புதிய பார்வை’ இதழில் எழுதிய தலையங்கம்.
15.12.2021 1 : 30 P.M