கல்லூரிகளில், ராகிங் என்பது பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், ராகிங் பிரச்சனை காரணமாக முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
இதனிடையே ராகிங்கைக் கட்டுப்படுத்த ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது பல்கலைக் கழகங்கள் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,
“ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆன்லைனில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். www.antiragging.in என்ற இணையதளத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் www.amanmovement.org என்ற இணையதளத்திலும் தாக்கல் செய்யலாம்.
மேற்கண்ட இணையதளங்களில் பதிவு செய்து பல்கலைக் கழகம் சிறப்பு அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இணைப்பு பெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இது பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.