உறவுகள் தொடர்கதை – 18
தம்பதியரைக் கலக்கும், கலங்கடிக்கும் பிற பிரச்சினைகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம். தாம்பத்திய நெருக்கம் மிக அவசியம். இது உடல் வேட்கையைத் தணிக்கும், உணர்ச்சிபூர்வ சேர்க்கையை மட்டும் குறிப்பிடவில்லை. சாதாரணமான நேரங்களில் கூட இந்த நெருக்கம் அவசியமானது.
உதாரணமாக, எதிரெதிரே உட்காராமல், பக்கத்தில் உட்காருவது, லேசான நெருக்கப் பரிமாறல்கள், பேச்சில், பார்வைகளில் பாராட்டுதல்கள், இணக்கங்களைப் பரிமாறிக் கொள்ளுதல், என ஆரம்பித்து தாம்பத்திய நெருக்கம் பல வகைகளில் வெளிப்பட வேண்டும்.
இது பல வகைகளில் முக்கியம். வார்த்தைகளில் சொல்ல முடியாத பல விருப்பங்களை, இது போன்ற பரிமாறல்களில் புரிந்து கொள்ளலாம், புரிய வைக்கலாம். இது இயல்பான, தொடர் பழக்கமாக மாற வேண்டும்.
இதன் மூலம், தம்பதியரின் மனதில் அமைதியும் ‘பரஸ்பரம் உரிமை’ தன்மையும் மற்றவரைப் பற்றிய புரிதல்களும் உருவாகும். மேலும், பரஸ்பர நம்பிக்கை உருவாகக் காரணமாகி மற்றவரது பலம், பலவீனங்களும் இயல்பாகத் தெரிய வரும்.
இது இயல்பாக நிகழக் கூடியதுதான். இன்னும் சொல்லப் போனால், எல்லாருக்கும் திருமணம் ஆன புதிதில் இருந்த நிலைதான். ஆனால், போகப் போக கரைந்து கொண்டே போனதும் இதுதான். இது ஒரு விசித்திர நிலைதான்.
திருமணம் ஆகி குறிப்பிட்ட வருடங்கள் கழிந்ததும், புரிதல்கள் அதிகமாகத்தானே வேண்டும்? அப்படியானால், நெருக்கம் எதனால் குறைகிறது? புரிந்தவை பிடிக்காதது காரணமாக இருக்கலாம். ஆனாலும், அதைப் பற்றிப் பேசி மாற்ற முயற்சிக்கலாமே? அது ஏன் நடக்கவில்லை?
மற்றவர்களுடன் ஒப்பிட்டு, அந்தத் தராசில், நம்மவர் இறங்கினால், நமது கவனத்திலிருந்தும் இறக்குவது தானாக நடக்கும்.
வாழ்க்கைச் சவால்களில் அடிபட்டு, அதற்குக் காரணமாக அல்லது ‘சரியாக’ எதிர்கொள்ளாத துணை என இருந்தால், அல்லது அப்படி நினைத்தால் அந்தக் குறை, நெருக்கக் குறைவில் வெளிப்படும்.
மற்றபடி பழக்கங்கள், அவற்றின் விளைவுகளால், வீணாகிப் போகும் நெருக்கங்களும் இருக்கின்றன.
பெரியோர்கள், ’தலையணை மந்திரம்’ என்கிற மிகத் தவறான ஒரு கருத்துருவை உருவாக்கி விட்டு சென்றிருக்கிறார்கள். அதன் அர்த்தம் என்ன? ஆண் / பெண் ஆகியோர், தங்களது உடல் அழகு, திறன்கள், ஆகியவற்றை பரஸ்பரம் அளித்து மகிழ்வதுதான் தாம்பத்தியம்.
அதிலும் பெண்கள் தங்களது அழகு இளமை, சந்தோஷப்படுத்த முடியக் கூடிய தன்மை ஆகியனவற்றை நிபந்தனையுடன் அளித்தால் பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்கிறார்.
இதையே ஆணும் செய்யலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தனது வாழ்க்கை சவால்கள், சிக்கல்கள், குழப்பங்கள், டென்ஷன் போன்றவற்றிற்கு உறவை ஒரு வடிகாலாக நினைப்பது ஆண்கள்தாம் அதிகம்.
ஆனால், பெண்கள் தங்களது பிரச்சினைகள், கோப தாபங்கள், விருப்ப வெறுப்பு நிறைவேற்றக் குறைபாடுகள் ஆகியனவற்றுக்கு, அவற்றுக்கான தீர்வுகளைத்தான் தேடுகிறார்கள். உறவை வடிகாலாகப் பார்ப்பவர்கள் மிகக் குறைவு.
அதே சமயம் ஆண் அப்படி நினைப்பதில்லை எனவும் புரிந்து கொள்கிறாள். இங்குதான் உறவை பகடைக் காயாக வைத்து நடக்கும் அபாயகரமான ஆட்டத்தை ஆடத்துவங்குகிறாள்.
இதைத்தான், பெரியவர்கள், ‘தலையணை மந்திரம்’ என்று மறைமுகமாக சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உறவின்போது பெண்களின் நிலையை கவிஞர் வாலி மிக அழகாக ஒரு பாடலில் சொலியிருப்பார்.
”அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன்..
அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்…”
என்று பெண் பாடுவது போல சொல்லியிருப்பார். அதாவது, ”தனது, அழகை, இளமையை கணவனின் வேட்கை தீர இன்பம் அனுபவிக்க தரும் பெண் அதனால் சம அளவில் தானும் இன்பம் அனுபவிக்கிறாள்” என்று சொல்லியிருப்பார்.
இந்த சந்தர்ப்பத்தைத்தான், தனது வாழ்க்கைத் துணையை, ’தன் சொல்படி கேட்க வைக்க’ பயன்படுத்த வேண்டும் என்று தம்பதியரில் யார் நினைத்தாலும் தவறுதானே? நஷ்டம் இருவருக்கும்தான்.
ஆனால், அதை இன்று வரை அந்தப் பெயர் தெரியாதவர்கள் கூட தாம்பத்திய உறவை ‘தாக்கம்’ ஏற்படுத்த, ‘நினைத்ததை சொல்ல, செய்ய வைக்க சரியான நேரம் என நினைக்கிறார்கள்.
இது மிகத் தவறான நினைப்பு மட்டுமின்றி தாம்பத்தியத்துக்கே வேட்டு வைக்கும் பழக்கம் என்பதை நினைவில் வைத்தால் நல்லது. இது எப்படி நடக்கிறது என்பதை மனோதத்துவ ரீதியாகப் பார்க்கலாம்.
நெருக்கமாக இருக்கும்போது, ‘இப்போது சொன்னால்தான், கேட்பான்’ என்ற நினைப்பில், அவனது, உற்றார், உறவினர், நண்பர்கள் பற்றிய கடந்த கால, நிகழ்காலக் குறைகளை ’ஓதுவது’ நிகழ்கிறது. இது ஆரம்பத்தில் பலன் தரலாம். என்ன சொன்னாலும், உடல் வேட்கை, மனதில் உண்டாகும் பிற உணர்ச்சிகளை பின்னுக்குத் தள்ளும்.
ஆனால், ‘இவள் எனக்குத்தான்’ என்ற இயல்பு வந்ததும், மனைவியின் பேச்சில் வரும் நபர்கள், மனிதர்கள் சூழ்நிலைகள், பற்றி சொல்லச் சொல்ல மனதில் வலம் வருவார்கள். அதே சமயத்தில், உடலின் தேவையும் தூண்டப்பட்டு இருக்கும்.
அந்தச் சமயத்தில் மனைவி அல்லாத, அதாவது அந்த உறவுக்கே உரிய தாம்பத்திய நெருக்கம் அல்லாத பிற உறவுகள் சுற்றம் ஆகியவர்களைப் பற்றி குறைகள் எரிச்சலோடு நினைவுக்குக் கொண்டு வரப்பட்டால் அதன்பின் ‘ஆசை‘ எப்படி வலுவாகும்?
அதன் விளைவு, உறவின் தாக்கத்தில், வீர்யத்தில், நேரக் குறைவில், சில சமயங்களில், இல்லாத நிலையைக் கூட ஏற்படுத்தி விடும். இது ஏறக் குறைய எந்தப் பெண்ணுக்கும் தெரிவதில்லை.
அடுத்ததாக, தாம்பத்தியத்தை பல சமயங்களில் நிரந்தரக் கேள்விக் குறியாக்கும், விஷயம், பரஸ்பர துரோகங்கள். இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, இது குறித்த சந்தேகம்.
இது கணக்கில்லாத குடும்பங்களை நாசமாக்கியிருக்கிறது. குற்றங்களைச் செய்ய வைத்திருக்கிறது. இந்த சந்தேகம் என்கிற விஷச் செடி புகுந்த மனது அமைதியாக இருக்கவிடாது. அந்த வீடும் புதர் மண்டிய காடு போல ஆகும். இதை கவிஞர் கண்ணதாசன்,
“சந்தேகக் கோடு அது, சந்தோஷக் கேடு:
இதை மறந்தவர் வீடு, துன்பம் வளர்ந்திடும் காடு”
என மிகச் சரியாக விவரித்திருப்பார். தம்பதியருக்குள் சந்தேகம் பற்றி எழுதினால், அது தனி ஒரு நூலாகி விடும். இரத்தின சுருக்கமாக சொன்னால், இது வரக்கூடாது, வந்து விட்டால், அவ்வளவு சீக்கிரம் போகாது. அதனால் முடிந்த வரையில் திறந்த மனதுடன் அணுகினால், இருவருக்கும் நன்மை என்று மட்டுமே சொல்ல முடியும்.
அதுவுமின்றி, பாலுறவு நம்பகத் தன்மை என்பது இயல்பாக இருவருக்குமே இருக்க வேண்டும். ஏனெனில் இந்த ஒழுக்கக் கேட்டை மறைப்பது இருவருக்குமே பெரிய விஷயமே அல்ல. நம்பிக்கையினால் மட்டுமே இந்த விஷயம் பலம் பெரும்.
ஆதாரங்களால் அல்ல என்பதை இருவருமே புரிந்து கொள்ள வேண்டும். இதில் பெரும்பாலான சமயங்களில் ஆணுக்கு மட்டுமே இந்த சந்தேகம் என்பது வருகிறது என சொல்ல முடியாது.
இதிலும் பொருளாதாரப் பிரிவினை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இது சார்ந்த பிரச்சினைகள், குற்றங்கள், கீழ் மத்தியதர மற்றும் ஏழை மக்களிடையே அதிகமாக இருக்கிறது.
மது உள்ளிட்ட பழக்கங்கள் உள்ள கணவன்மார்களுக்கு, தாங்கள் முன்பைப் போல அல்லது சரியான விதத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை எனத் தெரியும்.
அந்தக் குற்ற உணர்வு, இயலாமை, பிடிக்காமை ஆகியன சேர்ந்து தன்னையே நொந்து கொள்ளும்படியாக அல்லது கோபப்படும்படியான மன நிலையில் இருக்கிறார்கள்.
தவறு செய்யும் எவருக்குமே, அதற்கு தாங்கள் காரணம் அல்ல என்று நினைக்க விரும்புவது இயல்பான ஒன்றாகி விடுகிறது.
அதற்கு அடுத்த கட்டமாக, ‘நான் இல்லா விட்டால், வேறு யார்’? என்ற கேள்விக்கான பதிலாக, ‘யாராகவாவது இருக்கத்தான் வேண்டும்’ என்ற அனுமானத்துக்கு மனம் பயணப்படுகிறது. பிரச்சினை ஆரம்பமாகி விடுகிறது.
மேல்தட்டு மக்களிடையே, ஆணை சந்தேகப்படுவது அதிகமாக நிகழ்கிறது. இதற்குக் காரணம், ஆண் தனது வெற்றிகரமான வாழ்க்கையில் பலரை, குறிப்பாக பல பெண்களை சந்திக்கிறான்.
தன்னை விட அழகாக, அறிவாக, பேச்சில், செயலில், பழக்கத்தில் அவர்கள் மயங்க / மயக்க வாய்ப்புகள் இருகிறது என்பதால், அவன் கண்டிப்பாக ‘தவறுவான்’ என்ற அனுமானம் பல பெண்களுக்கு இருக்கிறது.
இதன் விளைவாகத்தான், தாம்பத்தியத்தின் ஆர்வமும், நேரமும் குறைகிறது என்பதன் அடிப்படையில் எண்ண ஆரம்பிக்கிறார்.
எது எப்படி இருந்தாலும் குடும்பத்தின் ஆணி வேராக இருக்கும் தாம்பத்தியத்தில் அசைவுகள் ஏற்பட்டால் அந்தக் குடும்பம் மற்ற எதில் சிறந்து இருந்தாலும் பலனின்றி வெறுமையாகும் என்பதை இருவருமே உணர்வது நல்லது.
குடும்பத்தைக் கெடுக்கும் வேறு சிலவற்றை அடுத்ததாகப் பார்க்கலாம்.
– தனஞ்செயன், மனநல ஆலோசகர்.