கல்வி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்!

– தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் வரும் 15-ம் தேதியுடன் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளாக விடுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கான காலம் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், “சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை” என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்.

6 முதல் 12 வரை பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment