தடுப்பூசியின் செயல் திறனைவிட வேகமாக பரவக்கூடியது ஒமிக்ரான்!

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியின் செயல் திறனைக் குறைத்துவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் கூற்றுப்படி, தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் இதுவரை 63 நாடுகளில் பரவியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரானும் பிரிட்டனில் டெல்டா வகை கொரோனாவும் அதிகம் பரவி உள்ளன.

முதல் கட்ட ஆய்வுத் தகவலின்படி கொரோனா வைரஸ் தொற்றுவதையும் பரவுவதையும் தடுக்கும் தடுப்பூசியின் செயல் திறனை ஒமிக்ரான் வகை உருமாறிய வைரஸ் குறைத்து விடும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக உருவெடுத்தால் விரைவிலேயே டெல்டா வகை கொரோனா பரவலை விஞ்சிவிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒமிக்ரான் தொற்றால் லேசான உடல்நலக்குறைவோ அல்லது அறிகுறி இல்லாத பாதிப்பும் ஏற்படுவதாக அது கூறியுள்ளது.

ஆனால் போதுமான தரவுகள் இல்லை என்பதால் ஒமிக்ரான் தொற்றால் ஏற்படக்கூடிய பாதிப்பின் வீரியத்தை அறுதியிட்டுக் கூற முடியாது என்பதையும் உலக சுகாதார அமைப்பு தெளிவுப்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment