இந்தியாவில் நடப்பது இந்துத்துவா வாதிகளின் ராஜ்ஜியம்!

– ராகுல்காந்தி விமர்சனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.

இந்தப் பேரணிக்கு தலைமை வகித்து பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், இந்தியாவில் இனி ஏழைகளே வாழ முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுகிறது.

இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தினம் தினம் எண்ணற்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இவை அனைத்தும் தெரிந்திருந்தும், இவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏனெனில், மோடி தனது பெருநிறுவன நண்பர்களுக்காகவே ஆட்சி நடத்தி வருகிறார். ஏழைகளுக்காக அல்ல.

விலைவாசி உயர்வு குறித்து யாரேனும் கேள்வி கேட்டால், அவர்களை இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்பது போல பாஜக சித்தரித்து வருகிறது.

அரசை விமர்சித்தாலே அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இந்தத் தருணத்தில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நானும் ஒரு இந்து தான். இங்கு என்னுடன் நிற்கும் பெரும்பாலானோர் இந்துக்கள் தான். ஆனால், நாங்கள் இந்துத்துவாவாதிகள் அல்ல.

இந்துவுக்கும், இந்துத்துவா வாதிக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்து என்பவர் மற்ற மதங்களை மதிக்க தெரிந்தவர். யாரையும் அச்சுறுத்த மாட்டாதவர். எந்த இந்து மத புத்தகங்களிலாவது, முஸ்லிம்களையும், சீக்கியர்களையும் தாக்குமாறு கூறப்பட்டிருக்கிறதா?

நான் பல இந்து உபநிஷதங்களை படித்திருக்கிறேன். அதில் எதிலும் அவ்வாறு கூறப்படவில்லை. சாதாரணமான உதாரணம் கூறுகிறேன்.

மகாத்மா காந்தியடிகள் சத்தியாகிரகம் (சத்தியத்தை தேடுதல்) நடத்தினார். அவர் ஒரு இந்து. ஆனால், அவரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு இந்துத்துவாவாதி.

இந்து என்பவர் உண்மையைத் தேடுபவர். இந்துத்துவாதியோ அதிகாரத்தைத் தேடுபவர். தற்போது நமது நாட்டில் நடைபெறுவது இந்து ராஜ்ஜியம் அல்ல. இந்துத்துவாதிகளின் ராஜ்ஜியம். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment