தாயும் நீ… தந்தையும் நீ…!

அக்னிக் குஞ்சாய்
ஆங்கொரு பொந்திலே வைத்த தீ
மூண்டது வீரமாய்
வெள்ளை ஆட்சிக்கு ஆனது
பாராமாய்…

அந்த
பாஞ்சாலி சபதத்து
பாட்டினில் வைத்த தீ
பற்றி  எரிந்தது வேகமாய்
நெஞ்சில்
தணியாத சுதந்திர
தாகமாய்..

வீட்டுக்குள்ளே பெண்ணை
பூட்டிடும் விந்தையை
பாட்டெனும் சாவியால்
திறந்தான்
தமிழ்
நாட்டிற்கு கிடைத்த
வரந்தான்
அவன்
நாணமும் வெட்கமும்
நாய்கள் குணமென
ஏட்டினிலே கவி
வரைந்தான்
புதுப் பாதைக்கே
வழி திறந்தான்..

தாய்நாட்டிற் கிணையாக
தந்தையர் நாட்டையும்
சக்தி வடிவென
ஊட்டினான்..
புதுக்கவிதைக் கடிக்கல்லை
நாட்டினான்
அவன்
சொல்லிலே
பல சூட்சுமங்கள்
பெய்து
நெஞ்சினிலே
உரமூட்டினான்
அச்சமெனும் பெருநோயை
ஓட்டினான்..

காக்கை குருவியும்
தன்ஜாதி யென‌ப் பாடி
நோக்கத்தை சீராக்கி
விட்டவன்
மொழி யாற்றலால்
இமயத்தை
தொட்டவன்
கவிக்
கம்பன் இளங்கோவை
கன்னித் தமிழுக்கு
ஆரமாய்ப் பூட்டிக்
காட்டினான்‌‌
வள்ளுவனின் புகழ்நிலை
நாட்டினான்‌.

தத்துவம், பக்தி
சமத்துவம் விடுதலை
தொட்டுப் பாடாத
தொருபொருளில்லை
அவன்
துலக்காத கருத்து
இருளில்லை
அன்றே
எத்திவைத்த பொருள்
ஏற்றால் நம் சிந்தையில்
என்றைக்குமே ஒரு
மருள்இல்லை
இதை
ஏற்காத பேருக்கு
அருளில்லை…

வேதக் கருப்பொருள்
ஞானத்தின் சாரத்தை
சத்தாக மனதில்
ஊற்றினான்
அதன்
வித்தாகவே உரை
ஆற்றினான்
இறை
பற்றாத பேருக்கும்
பற்றற்றான் பற்றினை
பாட்டின் வழி
தடம் மாற்றினான்
தங்கத் தமிழினிலே
புடம் ஏற்றினான்..

தடுமாறும் நேரத்துத்
தன்கவியால் தாங்கிப்
பிடிமானம் கொடுத்த
கைத்தடி
அது
தாலாட்டு பாடிடும்
தாய்மடி
நம்
போக்கினை நேராக்கி
ஊக்கத்தை கவிப்பாலாய்
ஊட்டிய தாய்
வடிவானவன்
எங்கள்
ஞானத்தின் தந்தையும்
தானவன்…

-ஆதிரன்

Comments (0)
Add Comment