பாரதிக்கு மகத்தான சில நினைவஞ்சலிகள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: 

*

செப்டம்பர் 11 ஆம் தேதி.

ஒரே நாளில் பாரதி தொடர்பான இரு நிகழ்வுகள்.

காலை சென்னை எம்.ஜிஆர் – ஜானகி மகளிர் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் அரங்கத்தில்  நண்பரும், வழக்கறிருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொகுத்து வெளியிட்ட  ‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி’ என்று நூல் வெளியீட்டு விழா.

கல்லூரி மாணவிகள் பாரதியின் பாடல்களை ஒருங்கிணைந்த குரலில் பாடியதோடு துவங்கிய விழா நிகழ்வை அழகாகத் தொகுத்து வழங்கியவர் அபிதா சபாபதி.

பல ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேர்த்து பாரதி குறித்த தொகுப்பு நூலைக் கொண்டு வந்த விதம் குறித்துப் பேசினார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

தலைமை தாங்கியவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரான சி.மகேந்திரன். பொதுவுடமை இயக்கம் சார்ந்த ஜீவாவும், திராவிட இயக்கம் சார்ந்த அண்ணாவும், கலைஞரும் உள்ளிட்டவர்கள் பாரதியை எப்படி மதித்திருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுப்பேசினார்.

நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளரும், பாரதி ஆய்வாளருமான கடற்கரய், பத்திரிகையாளர் மை.பா.நாராயணன், காவல்துறை அதிகாரியான  பெ.மகேந்திரன், வழக்கறிஞர் சாந்தகுமாரி, கலைஞன் பதிப்பக நந்தா என்று பலரும் பேசிய பிறகு நிறைவாக ரத்தினச் சுருக்கமான தீர்ப்பைப் போல பாரதி படைப்புகள் தொடர்பான காப்புரிமைப் பிரச்சினையைப் பற்றிப் பேசினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான ஜி.சுவாமிநாதன்.

அவர் வெளியிட தோழர் சி.மகேந்திரன் பெற்றுக் கொண்ட பாரதி பற்றிய தொகுப்பு நூல் 700 பக்கங்களுக்கு மேல் நீள்கிறது. ராஜாஜி துவங்கி எழுத்தாளர் கோணங்கி வரை 113 பேர் பாரதி பற்றி எழுதியிருக்கிறார்கள்.

காலத்தின் ஆவணத்தைப் போன்றிருக்கும் இந்நூலை வெளியிட்டிருப்பது கலைஞன் பதிப்பகம்.

இதை விலையில்லாத புத்தகமாக நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.

தே நாள் மாலை – சென்னை வாணி மஹாலில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றமும், தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து நடத்திய ‘பாரதி யார்?’ என்ற துடிப்பான வசனங்கள், இசை, நாட்டியம் அனைத்தும் சேர்ந்த நாடகம்.

இயக்கியவர் வீணை பாலச்சந்தரின் வாரிசான ராமன்.

மேடையின் பின்னணியில் பெரிய  எல்.ஈ.டி. திரை. அதில் நாடக இயல்புக்கேற்றபடி மாறும் காட்சிகள். முன்னால் நாடகம்.

மிகக் குறைந்த எண்ணிக்கையில் சுற்றத்தார் சூழ பாரதி சென்னை இடுகாட்டில் தகனம் செய்யப்படும் காட்சியிலிருந்து துவங்கும் நாடகம் பின்பு காலத்தில் பின்னகர்ந்து எட்டையபுரம் பிறப்பு துவங்கி படிப்படியாக நகர்கிறது.

பாரதியாக முண்டாசு கட்டி நடித்தவர் இசைக்கவி ரமணன். வசனங்களும் அவரே. கன கச்சிதமான வசனங்கள். இடையிடையே இசையுடன் பாரதியின் பாடல்கள். அதற்கேற்றபடி குழுவினரின் நாட்டியங்கள் என்று இரண்டு மணி நேரம் வரை நடந்த நாடகத்தைக் கொண்டாடி விட்டார்கள் அரங்கம் நிறைய வந்திருந்த பார்வையாளர்கள்.

அந்த அளவுக்கு நாடகத்துடன் ஒன்ற வைத்தது ராமனின் இயக்கம்.

அதோடு முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது இசைக்கவி ரமணின் அருமையான நடிப்பு.

பாரதியாக மேடையில் உயிர்த்திருந்த மாதிரி உரையாடல்கள், நீண்ட கவிதைகள் அனைத்தும் சரளமாக அவர் உச்சரித்த விதம், முகத்தில் காட்டிய பாவங்கள் என்று ஒரே கைதட்டல் மயம்.

பாரதியின் மனைவி செல்லம்மாவாக நடித்தவர் தர்மா மிக இயல்பாக நடித்துப் பலரையும் கைதட்ட வைத்துவிட்டார். பிராமண சமூகத்தினருக்கான மொழி நடையை லாவகமாக அவர் கையாண்டு மிகையற்ற நடிப்பை வழங்கியது பெருமைக்குரிய ஒன்று.

குவளைக் கண்ணனாக வந்தவரும் அப்படியே. பாரதியின் மகள் யதுகிரியாக நடித்த பெண்ணிலிருந்து, பாரதி பூணூல் போட்ட கனகலிங்கமாக நடித்தவர் வரை அனைவருமே அவரவர் பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார்கள்.

இரண்டு மணி நேரத்தில் நாடகம் முடிகிறவரை பார்வையாளர்கள் யாரும் கலையவில்லை. நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மூத்த நாட்டியக் கலைஞரான பத்மா சுப்பிரமணியம் மேடைக்கு வந்த நெகிழ்ந்து போய் வாழ்த்தினார்.

பாரதியாக நடித்த ரமணின் நடிப்பு தன்னைக் கண் கலங்க வைத்துவிட்டதாகச் சொன்ன பத்மா சுப்பிரமணியம், தன்னை தலையில் முண்டாசு கட்டிய பாரதியின் தோற்றத்தோடு, தனது காலைத் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெறக்கூடாது என்று ரமணனிடம் சொல்லிவிட்டதாகச் சொன்னது சிறப்பு.

இயல், இசை, நாடக மன்றத் தலைவரான வாகை சந்திரசேகர் வியந்து, நாடகத்தில் நடித்தவர்களைப் பாராட்ட, பாரதியாக நடித்த ரமணனின் நடிப்பு தன்னைப் பொறாமைப்பட வைத்துவிடும் அளவுக்கு இருந்தது என்று குறிப்பிட்டார் இயல், இசை, நாடக மன்றச் செயலாளரான மு.ராமசுவாமி.

பாரதிக்கு இப்படி ஒரே நாளில் குறிப்பிடும் படி பல நினைவஞ்சலிகள்.

*

யூகி

Comments (0)
Add Comment