ஆன்ட்டி இண்டியன் – தன்னிலை தவறாதவன்!

விமர்சிப்பவர்களால் படைக்க முடியுமா என்ற பேச்சுகள் எழும்போதெல்லாம், ‘இது மட்டுமே எங்கள் வேலை’ என்று விமர்சித்தவர்கள் ஒதுங்கிக் கொள்வதுண்டு. அதுதான் தகுதி என்றால், அதற்கும் தான் தயார் என்பதை ‘ஆன்ட்டி இண்டியன்’ படம் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார் ‘ப்ளூ சட்டை’ மாறன்.

யூடியூப்பில் தமிழ் டாக்கீஸ் சேனல் நடத்திவரும் இளமாறனை யார் என்று அறியாதவர்களுக்கு, அவர் தந்திருக்கும் பரிசே ‘ஆன்ட்டி இண்டியன்’. இப்படத்தைத் தயாரிக்க முன்வந்த ஆதம் பாவாவுக்கு பாராட்டுகள்!

மெல்லிய கோடாக ஓர் கதை!

ஒரு சடலத்தை எந்த மத முறைப்படி அடக்கம் செய்வது என்று கொலையானவரின் உறவினர்கள் தவிப்பதுதான் ‘ஆன்ட்டி இண்டியன்’ படத்தின் ஒருவரிக் கதை.

பலியானவரின் பெயர் பாட்ஷா. அவரது பெற்றோர் பெயர் இப்ராஹிம் – சரோஜா. இப்ராஹிம் இறந்தபிறகு, பாட்ஷாவை வளர்க்கும் சரோஜா கிறித்தவ மதத்தை தழுவி ‘லூர்து மேரி’ ஆகிறார். பாட்ஷாவை அடக்கம் செய்ய ஒவ்வொரு மதத்தினரும் முட்டி மோத இதுவே காரணம்.

பிறக்கும்போதும், வளரும்போதும், திருமணமாகி குடும்பத்தை உருவாக்கும்போதும் பல்வேறு அடையாளங்களைப் பெறக் காரணமாவது சாதியும் மதமும்தான். இறப்பிலும் அது வேதனையைத் தருவதைச் சுட்டிக்காட்டுகிறது இதன் திரைக்கதை.

மேம்போக்காக பார்க்கும்போது இக்கதை முஸ்லிம், இந்து, கிறித்தவ மக்களிடையேயான வெறுப்பையும் மோதலையும் கூடவே சாதீயத்தையும் காட்டுவது போலத் தோன்றினாலும், அரசில் அங்கம் வகிப்பவர்களும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒரு பிரச்சனையை எந்த இடத்தில், எவ்விதத்தில், எத்தனை காலம் கழித்து அடக்க முயல்கின்றனர் என்பதைச் சொன்ன விதத்தில் வேறுபடுகிறது இப்படைப்பு.

இத்திரைப்படத்தின் ஒரு பிரேமுக்கு கூட அனுமதி தர முடியாது என்று தணிக்கை வாரியம் மறுத்ததற்கான காரணமாகவும் இதுவே இருந்திருக்க வேண்டும்.

அசாத்திய உழைப்பு!

ஷாட்கள் நீளமாக இருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் குளோசப் பயன்படுத்தாமல் தவிர்த்திருந்தாலும், வழக்கத்திற்கு மாறான ஒரு படைப்பை ரசிக்கும் மனநிலையை உருவாக்குகிறது இத்திரைப்படம். இதில், கொலையான நபராக நடித்திருக்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து இயக்கியிருக்கும் இளமாறன்.

’வழக்கு எண்’ முத்துராமன், ராதாரவி, வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன், பெரைரா, பசி சத்யா, கில்லி மாறன், சுரேஷ் சக்கரவர்த்தி, சார்லஸ் வினோத் என்று ஒரு சில தெரிந்த முகங்களும், முக்கால்வாசிக்கும் மேலாகப் புதிய முகங்களும் திரையில் வந்து போகின்றன.

வெறுமனே வந்தோம் போனோம் என்றில்லாமல் ஒவ்வொரு கலைஞரையும் நம் மனதில் பதித்த வகையில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.

முதல்வராக ராதாரவியையும், எதிர்க்கட்சித் தலைவராக உதயபானு மகேஸ்வரனையும் இயக்குனர் காட்டியிருக்கும் விதம், தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஆர்.கே.செல்வமணி கிடைத்துவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

கதை மெல்லிய கோட்டின் மீதமைந்திருந்தாலும், தன்னிலை மாறாமல் அனைத்து மதம், சாதி, கட்சி மீதான விமர்சனங்களை சாதாரண மக்களின் பார்வையில் திரைக்கதையில் நிரப்பியிருப்பது அசாத்திய தைரியம்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் தந்திருக்கும் ஒத்துழைப்பு இப்படத்தின் பெரும்பலம். நிலையாக ஓரிடத்தில் நின்றுவிடக்கூடாது எனும் கவனத்துடன், பெரும்பாலான ஷாட்களில் ட்ரோன், ஸ்டெடிகேம், ட்ராலி போன்ற சாதனங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கதிரவன்.

மனிதர்கள் குவிந்துகிடக்கும் கதைக்களத்தில், எந்தவொரு இடத்திலும் ரசிகர்களின் கண்கள் அயர்ந்துவிடக் கூடாது என்று பாடு பட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சுதர்சன்.

மிகமுக்கியமாக கலை இயக்குனர் வீரமணி கணேசனும், ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்த ஹரி தினேஷும் அளித்துள்ள பங்களிப்பு, பட்ஜெட் படங்கள் இப்படித்தான் அமைய வேண்டுமென்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

இளமாறனின் பின்னணி இசை பெரிதாக இல்லாவிட்டாலும், காட்சியின் நோக்கத்திற்கு எதிர்த் திசையில் பயணிக்காதது ஆறுதல். இரங்கல் பாட்டுக்கான களமும் கலைஞர்களும் ரசிகர்களும் எப்படி இருப்பார்கள் என்பதைக் காட்டிய விதம் அருமை என்றாலும், அதன் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

சென்னை வட்டாரத்தில் சடலத்திற்கு முன்னால் மது குடித்துவிட்டு ஆடும் காட்சிகள் நிறைய படங்களில் இடம்பெற்றிருந்தாலும், இப்படம் பெரிதும் வேறுபட்டிருப்பதை அதனை ரசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும். அந்த வகையில், கொரியோகிராபர் ரமேஷுக்கு பாராட்டுகள்!

இயக்குனரின் பார்வை!

‘என்னய்யா படம் எடுத்து வச்சிருங்காங்க’ என்று பார்க்கும் படத்தையெல்லாம் கரித்துக் கொட்டியவர் இளமாறன். ‘யோவ் ப்ளூசட்டை’ என்று அடுத்தடுத்த படங்களில் வசனத்தை நுழைக்குமளவுக்கு கமர்ஷியல் படமெடுப்பவர்களைக் கலாய்த்தவர்.

‘மாறன் பாராட்டும்படியாக படமெடுக்க வேண்டும்’ என்று கலைத்தாகம் கொண்டவர்களைக் கண்ணீர் விட வைத்தவர்.

தொட்டதற்கெல்லாம் குறை சொல்லும் ஒருவர் ‘இது என்னோட பொருள்’ என்று கடைவிரித்தால், ஊர் கூடி என்ன செய்யும்? அவர்களது எதிர்பார்ப்புக்கு மாறாக ஏதாவது செய்தாக வேண்டுமென்ற நிலையில், ‘இது என்னோட ஏரியா’ என்று சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கொத்தாகக் கொட்டியிருக்கிறார் மாறன்.

கமர்ஷியலாக படமெடுக்கிறேன் பேர்வழி என்று எதையாவது திரையில் நிறைப்பார் என்று காத்திருந்தவர்களுக்கு, கண்டிப்பாக இது பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும்.

அந்த கட்டத்தை அலட்சியமாகத் தாண்டியவர், மெல்ல கதையின் முடிச்சு விழும் இடத்தையும், அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் இப்பிரச்சனையைத் தங்களுக்கானதாகக் கையிலெடுப்பதையும் காட்டிய விதம் அருமை.

கொலையானவரின் முகத்தை குளோசப்பில் காட்டுவது தொடங்கி கதை நிகழும் களத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லும் வழியை பறவைப் பார்வையில் காட்டுவது வரையான கால வெளியே, இந்த இயக்குனர் எப்படிப்பட்ட பார்வை கொண்டவர் என்பதைச் சொல்லிவிடும். அப்போது ஒருவருக்கு அதிருப்தி உண்டானால், முழுப்படமும் கண்டிப்பாகத் திருப்தி தராது.

ஒரு படத்தின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ எழுத்துகள் வழியாக இயக்குனர் உரையாடுவதைப் போல, இப்படத்தில் மாறன் நடித்த பாத்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் இளமாறன்.

‘மதத்தை நம்புறவன் கோபப்பட மாட்டான், மதத்தை வச்சு பொழப்ப நடத்துறவன் தான் கோபப்படுவான்’, ‘எந்த மத முறைப்படியும் அடக்கம் பண்ணாம, பொணத்தை மெடிக்கல் காலேஜுக்கு எடுத்துட்டு போயிடுங்க’, ‘உங்க கட்சியில தலைவருங்க எல்லாம் சிவப்பா இருக்காங்க, தொண்டர்கள் எல்லாம் கருப்பா இருக்காங்க’ என்பது போன்ற வசனங்களே இதற்கு உதாரணம்.

கொரோனா காலத்தில் அவர் திடீரென்று மறைந்தது, அவருக்கான இடத்தை இயக்குனரால் தர முடியாத சங்கடத்தை உருவாக்கியிருக்கிறது.

’தாசில்தார் நடத்துன எந்த அமைதிப் பேச்சுவார்த்தை சுமூகமா முடிஞ்சிருக்கு’ என்பது போன்ற வசனங்கள் வழியாக அரசு எந்திரத்தை மட்டுமல்லாமல் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஊடகங்கள் தொடங்கி மத அபிமானம் வரை அனைத்தையும் வார்த்தைகளால் பொசுக்கியிருக்கிறார் மாறன்.

இறந்தவர் குறித்த விவரங்களை முன்கூட்டியே தராமல் எந்த மயானத்திலும் நுழைய முடியாது என்ற லாஜிக்கை மட்டும் திரைக்கதை லாவகத்துக்காக ஒதுக்கியிருக்கிறார் இயக்குனர்.

அதனுடன் கேமிரா நோக்கி வீசப்படும் சில வசனங்களையும், விளக்கங்களையும் தவிர்த்துப் பார்த்தால் சாதி, மத, அரசியலைக் கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள் மீதான சாட்டையடியாக அமைந்திருக்கிறது ‘ஆண்ட்டி இண்டியன்’.

மேல்முறையீடு எனும் முறையையே தணிக்கைத் துறையிலிருந்து ஒழித்தபிறகும், நீதிமன்றம் மூலமாக இப்படைப்பு மக்களை வந்தடைந்திருப்பது நிச்சயம் ஒரு நிகழ்கால அதிசயம்.

அதற்கு மரியாதை தரும் விதமாக இப்படைப்பு அமைந்திருப்பதற்காகவே, ‘ப்ளூ சட்டை’ மாறன் உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுகளை ‘பார்சல்’ கட்டலாம்!

-பா.உதய்

Comments (0)
Add Comment