இறைவியாக மாறிய எம்.எஸ்.சுப்புலட்சுமி!

நட்சத்திரங்களைத் திரைப்படங்கள் உருவாக்குகிறதா அல்லது திரைப்படங்களை நட்சத்திரங்கள் உருவாக்குகிறார்களா? முதலில் வந்தது கோழியா முட்டையா என்பது போலக் காலம் காலமாகத் தொடரும் இந்த கேள்வி மிகக் கடினமானது.

திரைப்படங்கள் மூலமாக அதில் நடிக்கும் கலைஞர்கள் பெறும் பெயரும் புகழும் வினோதமானது. கால ஓட்டத்தில் அதனைத் தாண்டி வெற்றி நடைபோடுபவர்களும் உண்டு; பெற்றதனை இழந்து தேய்ந்துபோனவர்களும் உண்டு.

இவர்களுக்கு நடுவே, கிடைத்த பெருமையைத் தக்கவைக்கும் பொருட்டு திரையுலகில் இருந்து சட்டென்று மறைந்த நட்சத்திரங்களும் உண்டு. அப்படியொரு கலைஞராக இறுதி வரை வாழ்ந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

மேடை டூ திரை!
1930-களில் கர்நாடக இசைப்பாடகியாகப் புகழ் பெற்றவர் எம்.எஸ்.எஸ். இயக்குனர் சுப்பிரமணியத்தின் முயற்சியால் அவர் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

சேவாசதனம், சகுந்தலை, சாவித்ரி படங்களுக்குப் பிறகு அவர் நடித்த படம் ‘மீரா’.
அற்புதமான பாடல்களைக் கொண்ட இப்படத்துடன் தன் திரைவாழ்வை எம்.எஸ்.எஸ் முடித்துக் கொண்டது அவரது ரசிகர்களுக்கு உவப்பானதல்ல.

ஆனால், அந்த படத்தின் மூலமாக அவர் பல கோடி பேருக்குத் தெரிந்தவரானார்.

சகுந்தலை படத்துக்குப் பின்னர் தனது கணவர் சதாசிவம், கல்கி பத்திரிகையைத் தொடங்க முதலீடு திரட்டும் எண்ணத்தில் சாவித்திரி படத்தில் நடித்தார் எம்.எஸ்.எஸ். அதில் அவருக்கு நாரதர் வேடம்.

அருமையான பாடகி, அழகான நடிகை என்பதைத் தாண்டி எம்.எஸ்.சுப்புலட்சுமியை மக்கள் மனதில் நிலைநிறுத்தும் விதமாகப் படமெடுக்க நினைத்தார் அவரது கணவர் சதாசிவம்.

ஆண்டாள் வழியில் கிருஷ்ணரின் அடிபுகுந்த பக்தையான மீராவின் கதை வடமாநிலங்களில் பிரபலம். அதனைத் தமிழுக்குக் கொண்டுவர முடிவு செய்தார். சந்திரப்பிரபா சினிடோன் சார்பில் படத்தைத் தயாரித்தார்.

கவனத்தை ஈர்க்காத மீரா!

இயக்குனர் எல்லீஸ்.ஆர்.டங்கன், எழுத்தாளர் கல்கி, ஒளிப்பதிவாளர் ஜிதன் பானர்ஜி என்று பல பிரபலங்கள் துணையுடன் 1944-ம் ஆண்டு மீரா படப்பிடிப்பு நடந்தது. இதற்கடுத்த ஆண்டு தீபாவளி ரிலீஸாக படம் வெளியானது.

இப்படம் வெளியான நாட்களில் அடைந்த புகழைவிட, அதன்பின்னரே அதிகக் கவனத்தைப் பெற்றது.

காரணம், உடையலங்காரம் முதல் பாத்திரங்களின் பெயர்கள் வரை அனைத்தும் தமிழில் இல்லாததுதான்.

ஆனாலும், பக்தி என்பது எம்.எஸ்.எஸ். பெயரோடு ஒட்டிக்கொள்ளக் காரணமாக அமைந்தது மீரா திரைப்படம்.

யார் அந்த மீரா?

ராஜஸ்தானிலுள்ள மேதாட் எனும் கிராமத்தில் பிறந்த மீரா, மேவார் மன்னர் மகாராணாவின் மனைவி ஆகிறார். சிறுவயதில் இருந்தே கிருஷ்ணனைக் கணவராக நினைத்தவருக்கு இந்த வாழ்க்கையில் சிறிதும் விருப்பமில்லை.

உறவினர்களின் வற்புறுத்தலால் மன்னரின் மனைவியானாலும், அவரது மனம் முழுக்க கிருஷ்ணனிடமே இருக்கிறது. அதனை அறிந்து ஒரு கோயில் கட்டித் தருகிறார் ராணா.
சில காலம் கழித்து, மீராவிடம் இருப்பது பக்தியை மீறிய பெருங்காதல் என்றறிந்து கோபம் கொள்கிறார்.

கிருஷ்ணனுக்கான கோயிலை இடிக்க ஆணையிடுகிறார். இதனை அறிந்து தடுக்கும் மீரா, கிருஷ்ணரைத் தேடி துவாரகை செல்கிறார்.

கதவைத் திறக்க மாட்டாயா என்று மீரா பாடும் பாடல்களால் கிருஷ்ணரின் தரிசனம் கிடைக்கிறது. அவருடன் ஜோதியாக மீரா கலந்து விடுகிறார் என்பதுடன் படம் நிறைவடைகிறது.
காட்சிகளில் பிரம்மாண்டம்!

சென்னையில் இருந்த நியூடோன் ஸ்டூடியோவில் இப்படத்தில் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன.
இது தவிர ஜெய்ப்பூர், உதய்பூர் கோட்டைகள், சித்தோர், துவாரகை, அங்குள்ள தெருக்கள், மக்கள் இருக்கும் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருந்தன. இந்த பிரம்மாண்டத்திற்குக் காரணம் இயக்குனர் டங்கன்.

அவரது தொழில்நுட்ப அறிவினால் தமிழ் சினிமாவுக்குப் பல நல்ல விஷயங்கள் கிடைத்தன. அடுத்தடுத்து குளோஸ்அப், எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட் வருவது மற்றும் அக்காட்சிகளின் பின்னணியில் பாடல் வரிகள் இடம்பெறுவது போன்றவை அக்காலத்தில் அரிதானவை.

மீரா பல ஊர்களுக்குப் பயணம் சென்று களைத்துப் போகிறார் என்பதைக் காட்ட வைப்பிங் (WIPING) எனப்படும் படத்தொகுப்பு உத்தியைப் பயன்படுத்தியிருப்பார் டங்கன்.

பின்னணியில் ஒளி நிறையப் பாத்திரத்தினை இருளில் காட்டுவது போன்ற சில்ஹவுட் (SILHOUETTE) ஷாட்களையும் அதிகம் கையாண்டிருப்பார்.

கிளைமேக்சில் மீராவின் உடல் கீழே சரிய, அவரது உடலில் இருந்து வெளியேறும் ஆத்மா ஜோதியாகச் சென்று கிருஷ்ணரிடம் அடைக்கலம் ஆகும் காட்சியில் உண்மையாக நடந்தது போலவே காட்டியிருப்பது அவரது திறமைக்குச் சான்று.

வேடமிட்ட டங்கன்!

மீரா பாத்திரத்தின் தெய்வீகத்தன்மையை ரசிகர்கள் உணரும் விதமாக, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முகத்தைப் போல உருவம் செய்து வெவ்வேறு காட்சிக் கோணங்கள் மற்றும் ஒளியமைப்பினைப் பயன்படுத்திப் படம்பிடித்தார் டங்கன்.

அதனைத் திரையில் பார்த்து தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்பின்போது குறிப்பிட்ட கோணங்கள் மற்றும் ஒளியமைப்பினைப் பயன்படுத்தியதாகத் தகவல் உண்டு.

துவாரகையில் நடந்த மீரா படப்பிடிப்பின்போது டங்கன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் கோயிலுக்குள் அனுமதிக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அவருக்கு காஷ்மீர் மாநிலத்தவர் போன்று வேடமிட்டு சதாசிவம் அழைத்துச் சென்றதாகத் தகவல் உண்டு.

பின்னாட்களில் இந்த தகவல் தெரிய வந்தவுடன், அங்கிருந்தவர்கள் கோயிலைக் கழுவியதாகச் சொல்லப்படுகிறது.

காப்பாற்றிய கிருஷ்ணன்!

நதியில் பயணிக்கும்போது படகு தடுமாறித் தண்ணீரில் மீரா விழுந்தார் என்பது கதை. அதனைப் படமாக்கும்போது உண்மையாகவே தண்ணீரில் மூழ்கிவிட்டார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

படகோட்டி உட்பட அங்கிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தனர். அப்போது, தன்னை கிருஷ்ணனே காப்பாற்றியதாகக் கூறினார்.

மீரா படத்தின் டைட்டில் காட்சியில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயர் பிரதானமாக இடம்பெற்றது. ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிக்கும் மீரா என்றே குறிப்பிடப்பட்டது.

மீராவின் குழந்தைப் பருவத்தைக் காட்டும் வேடத்தில் ராதா நடித்தார். இவர் சதாசிவத்தின் மகள் ஆவார்.

பி.யு.சின்னப்பா, ஹொன்னப்ப பாகவதர் ஆகியோர் ராணா வேடத்தில் நடிக்க பரிசீலனை செய்யப்பட்டனர். ஆனால், எல்லீஸ் ஆர்.டங்கன் விருப்பத்தின்பேரில் இறுதியில் நாகையா அப்பாத்திரத்தில் நடித்தார்.

அந்தக் காலத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நகைச்சுவைக் காட்சிகள் உண்டு.

இப்படத்திலும் அவர்களது காட்சிகள் இடம்பெற இருந்ததாகவும், வழக்கொன்றில் என்.எஸ்.கே. கைது செய்யப்பட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இரண்டு பாரத ரத்னா!

பின்னாளில் மக்கள் திலகம் என்று போற்றப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் இதில் தளபதி ஜெயமல் எனும் பாத்திரத்தில் நடித்திருந்தார். இதே பாத்திரத்தினைச் சில காட்சிகளில் டி.எஸ்.மணி என்பவரும் ஏற்று நடித்தார்.

ஒரே பாத்திரத்தில் இரண்டு பேரை நடிக்க வைத்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், முகம் முழுக்க வெண்ணிறத் தாடியுடன் அப்பாத்திரம் வலம் வந்தாலும் எம்.ஜி.ஆரின் குரல் மட்டும் தனியாகத் தெரிய வருகிறது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.ஜி.ஆர் இருவருமே பாரதரத்னா பெற்றவர்கள் என்பதும், மீரா படத்தில் இருவரும் நடித்திருந்தனர் என்பதும் இன்னொரு பெருமை.

விக்ரம் எனும் வில்லன் பாத்திரத்தில் டி.எஸ்.பாலையா நடிக்க, உத்தம் சிங் எனும் குணச்சித்திர பாத்திரத்தில் கே.சாரங்கபாணி நடித்திருந்தார்.

காலத்தை வென்ற பாடல்கள்!

இப்போதும் மீரா என்ற திரைப்படத்தை நினைத்தவுடனே பலருக்கு எம்.எஸ்.எஸ். பாடிய பாடல்கள்தான் நினைவுக்கு வரும்.

இப்படத்தில் இடம்பெற்ற 12 பாடல்களில் ‘காற்றினிலே வரும் கீதம்’, ‘மறவேனே எந்நாளிலுமே’ உட்பட 5 பாடல்களை கல்கி எழுதினார். மீதமுள்ள பாடல்கள் பாபநாசம் சிவன் கைவண்ணத்தில் வெளியாகின.

இந்திக்கு போன ‘மீரா’!

மீரா படம் தமிழில் பெருவெற்றி பெறாத நிலையில், அதனை இந்தியில் டப் செய்தார் சதாசிவம். சில காட்சிகள் மற்றும் பாடல்கள் இந்தியில் படமாக்கப்பட்டன.

1945-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழில் வெளியான இப்படம், இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தியில் வெளியானது.

இதனை முதலில் திரையிடும் நிகழ்வில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேட்டன் உட்படப் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இப்படத்தின் மூலமாகச் சதாசிவத்தின் கனவு நனவானது. இந்தியா முழுவதும் எம்.எஸ்.எஸ். தெரிந்த முகமானார்.

டைட்டிலில் முரண்பாடு!

வழக்கமாக இசை, ஒளிப்பதிவு கலைஞர்களை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது டைரக்டர் அல்லது டைரக்‌ஷன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது வழக்கம்.

மீராவின் ஒளிப்பதிவாளர் ஜிதன் பானர்ஜியை டைரக்டர் ஆஃப் போட்டோகிராபி என்று குறிப்பிடப்பட, ஒலிப்பதிவாளர் தீன்ஷா கே.தெஹ்ரானி டைரக்டர் ஆஃப் சவுண்ட் என்று டைட்டிலில் இடம்பிடித்திருந்தார்.

இசை அமைப்பு என்ற பெயரில் பாபநாசம் சிவன் பெயரும், இசை இயக்கம் என்ற பெயரில் எஸ்.வி.வெங்கட்ராமன் பெயரும் இடம்பெற்றன.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைத்தட்டுகளைத் தொடக்க காலத்தில் இருந்தே வெளியிட்ட எச்.எம்.வி. நிறுவனம் இப்படப் பாடல்களையும் வெளியிட்டது.

இப்படத்தின் தமிழ் பதிப்பில் ஒளிப்பதிவு இயக்குனர் என்று ஜிதன் பானர்ஜி பெயரும், ஆபரேட்டிவ் கேமராமேன் என்ற பிரிவில் பி.எஸ்.செல்வராஜ் பெயரும் குறிப்பிடப்பட்டது.

ஆனால் இந்திப் பதிப்பில் இருவரது பெயர்களும் ஒளிப்பதிவாளர்கள் என்றே குறிப்பிடப்பட்டது.
அதேபோல தமிழ் பதிப்பில் இசை இயக்கம் என்று எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்திப் பதிப்பில் வெங்கட்ராமன், ராமநாதன் மற்றும் நரேஷ் பட்டாச்சார்யா ஆகியோர் இசையமைப்பாளர்கள் என்று குறிப்பிடப்பட்டது.

அதோடு, வடஇந்தியாவில் அக்காலகட்டத்தில் புகழ்பெற்றிருந்த இசையமைப்பாளர் திலீப்குமார் ராயின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் இசை எடுத்தாளப்பட்டதாக டைட்டிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சரோஜினி நாயுடுவின் உரை!

இந்திப் பதிப்பில் டைட்டில் காட்சிக்குப் பிறகு எம்.எஸ்.சுப்புலட்சுமியை இந்தி சினிமா ரசிகர்கள் அறிந்துகொள்ளும் விதமாக அறிமுக உரை வழங்கியிருந்தார் கவிஞர் சரோஜினி நாயுடு.

மீராவாகவே எம்.எஸ்.எஸ். வாழ்ந்திருக்கிறார் என்று புகழாரம் சூட்டியவர், தனக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் வானம்பாடி பட்டத்தையும் அவருக்கு வழங்கினார்.

மிக அரிதான இக்காட்சி இந்த லிங்கில் (https://www.youtube.com/watch?time_continue=1&v=I5GzAh5XgGo) உள்ளது.

பின்னாட்களில் இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட நேரு, ”நான் சாதாரண பிரதம மந்திரி. எம்.எஸ்.சுப்புலட்சுமியோ இசை உலகின் பேரரசி. பேரரசி முன் பிரதம மந்திரி எம்மாத்திரம்” என்று பாராட்டியது வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தது.

ராஜாவின் உதவி!

1944ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்தபோது, அதற்குத் தேவையான குதிரைகள், யானைகளைக் கொடுத்து உதவியிருக்கிறார் உதய்பூர் மன்னர் மகாராணா.

படப்பிடிப்பின்போது அங்கு நடந்த கச்சேரிகளில் எம்.எஸ்.எஸ் பாடிய கர்நாடக, இந்துஸ்தானி இசையில் மயங்கியதற்குக் கைம்மாறாக இதனைச் செய்தாராம்.

சுமார் 113 நிமிடத் திரைப்படத்தில் வசனங்களை விடப் பாடல்களே அதிகம். அதுவே படத்தின் கடவுச்சீட்டாக இன்றும் விளங்குகிறது.

கிடைத்தது தெய்வீக அந்தஸ்து!

‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ’ பாடல் திரையில் வரும்போது அக்காலத்தில் மக்கள் பக்திப் பரவசத்தில் மூழ்கியதாகக் கூறப்படுவதுண்டு.

மீரா படத்தின் மூலமாகக் கிடைத்த தெய்வீக அந்தஸ்தை தவறவிடக்கூடாது என்று எழுத்தாளர் கல்கி அறிவுறுத்திய காரணத்தினால், பின்னாட்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து கர்நாடக இசைக்கச்சேரிகளில் பாடி வந்தார்.

1997-ம் ஆண்டு சதாசிவம் மறையும்வரை இதனைத் தொடர்ந்து வந்தார்.
தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நடிகைகளுள் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் ஒருவர். அவரை இறைவி ஆக்கிய பெருமை மீராவுக்கு என்றும் உண்டு.

படத்தின் பெயர்: மீரா
தயாரிப்பு: சந்திரப்பிரபா சினிடோன்
இயக்கம்: எல்லீஸ் ஆர்.டங்கன்
படத்தொகுப்பு: ஆர்.ராஜகோபால்
கலை இயக்கம்: பாபுபாய் மிஸ்திரி
கலை கற்பனை: கனு தேசாய்
கதை, வசனம்: கல்கி, சதாசிவம்
பாடல்கள்: பாபநாசம் சிவன்
இசை: எஸ்.வி.வெங்கட்ராமன்
ஒளிப்பதிவு: ஜிதன் பானர்ஜி, பி.எஸ்.செல்வராஜ்
ஒலிப்பதிவு: தீன்ஷா கே.தெஹ்ரானி
நடிப்பு: எம்.எஸ்.சுப்புலட்சுமி, சித்தூர் நாகையா, செருகளத்தூர் சாமா, கே.சாரங்கபாணி, டி.எஸ்.பாலையா மற்றும் பலர்.

  • உதய் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment