– தமிழக அரசு அரசாணை வெளியீடு
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் எனவும் முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர் வரை தமிழில் கையொப்பம் கட்டாயம் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,
“தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையைப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கும் பொது பயன்பாடுகளில் இந்த முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும் என்று 2021-2022ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானிய கோரிக்கையின்போது தொழில் துறை அமைச்சர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்குநர் அரசுக்கு 15.9.2021 நாளிட்ட கடிதத்தில், தமிழ்நாடு அரசின் ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக தமிழ் பயன்பாட்டு மொழியாக இருக்க செய்திடும் வகையில் தமிழ் ஆட்சிமொழி சட்டம் 1956ம் ஆண்டு இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும்,
தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின் முதன்மை பணியாக அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டு நடைமுறையில் உள்ளது.
அதன்படி தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (தந்தை, தாய், ஊர்) பெயர்களை குறிப்பிடும் முன் எழுத்துக்கள் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.
மேலும், அரசு துறைகளில் வெளியிடப்படும் அறிவிப்புகள், அறிவிக்கைகள், ஏல விளம்பரங்கள், இதர விளம்பரங்கள் போன்றவை வெளியிடுகையில் அதில் அலுவலர்களின் பெயர்களுக்கு முன் குறிப்பிடப்படும் முன்னெழுத்தானது ஆங்கில எழுத்து உச்சரிப்பிற்கான தமிழ் எழுத்து (எஸ்.முத்து) எழுதப்படுகிறது.
இதனை தவிர்த்து சரியாக தமிழ் முன் எழுத்தையே (சு.முத்து) பயன்படுத்துமாறும், அவ்வாறே அரசு அலுவலர்கள் கையொப்பமிடும்போது பெயருக்கு முன் சரியான தமிழ் எழுத்துக்களையே குறிப்பிட்டு கையொப்பமிடுமாறும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை செயல்படுத்தும் விதமாக முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களும் தங்களின் பெயர்களை எழுதும்போதும், கையெழுத்திடும்போதும் முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி ஆணை பிறப்பிக்கப் பெறலாம்.
மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகளிடையே தமிழில் பெயர் எழுதும்போது அதன் முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையினை கொண்டு வர மாணவர்கள் விண்ணப்பம் அளிக்கும்போதும்,
பள்ளி, கல்லூரி முடித்து சான்றிதழ் பெறும்போதும் முன்னெழுத்துடன் கையொப்பம் தமிழிலேயே இருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கும் நடைமுறையினை கொண்டு வரலாம் என்றும்,
அதேபோன்று மாணவர்களின் சான்றிதழை பெற்றோர் கையொப்பமிட்டு பெறும்போதும் முன்னெழுத்து மற்றும் கையொப்பத்தினை தமிழிலேயே இடம்பெற வேண்டும் என தெரிவிக்கலாம்.
பள்ளிப் பருவத்திலேயே இந்த நடைமுறையினை ஊக்குவிப்பதால் மாணவர்களின் மனதில் பசுமரத்து ஆணி போல பதிவு வழிவகுக்கும்.
பொதுமக்கள் அதிகம் அணுகும் அரசு துறைகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மின்சார வாரியம், போக்குவரத்து துறை, பத்திரப்பதிவு துறை, வருவாய்த் துறை, வணிகவரி துறை, சமூகநலத்துறை,
காவல் நிலையம், உணவு பொருள் வழங்கல் துறை ஆகியவற்றில் பொதுமக்களால் நிறைவு செய்து அளிக்கப்பெறும் கோரிக்கை விண்ணப்பங்களில் முன்னெழுத்துடன் தமிழில் கையொப்பம் இடும் வகையில் (உதாரணத்துக்கு, கே.என்.சுவாமிநாதன் என்பதை க.ந.சுவாமிநாதன்) அனைத்து அரசு துறைகளிலும் நடைமுறைப்படுத்திடலாம்.
மேலும், அனைத்துத் துறைகளிலும் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்படும் பெயர்களில் முன்னெழுத்தையும் தமிழ், ஆங்கிலம் கலந்து பதிவு செய்யாமல் பெயரின் முன்னெழுத்து மற்றும் பெயர்களை முழுமையாக தமிழிலேயே பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் ஆணையிடலாம்.
அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம், புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் போன்ற சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்திலும் மற்றும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் முன்னெழுத்தும் ‘தமிழில் கையொப்பம் போட வேண்டும்’ என்று தமிழில் சுவரொட்டிகள் வைப்பதை நடைமுறைப்படுத்திடலாம் என தமிழ் வளர்ச்சி இயக்குநர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இது அரசின் பரிசீலனைக்கு பின் 2021-2022ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை அறிவிப்பில் இடம்பெற்ற அறிவிப்பினை செயற்படுத்த ஏதுவாக தமிழ் ஆட்சிமொழி சட்டத்தினை முழுமையாக செயற்படுத்தும் பொருட்டு பின்வருமாறு அரசு உத்தரவிடுகிறது.
* முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்துகளையும் தமிழிலேயே எழுதப்பட வேண்டும்.
* பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும்போது அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டு வர மாணவர்கள் பள்ளிக்கு சேர அளிக்கும் விண்ணப்பம்,
வருகைப் பதிவேடு, பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையினை கொண்டு வர மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது.
* தலைமை செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை அனைத்து அரசு துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள் மற்றும் ஆவணங்கள் பொதுமக்களின் பெயர்கள் குறிப்பிடும்போது முன்னெழுத்துகள் உட்பட பெயர் முழுவதையும் தமிழிலே பதிவு செய்யப்பட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், அரசு துறைகளில் பெறப்படும் விண்ணப்பங்களிலும் தமிழ் முன்னெழுத்துடன் கையெழுத்தையும் தமிழிலேயே இடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* அரசு அலுவலகங்களில் முன்னெழுத்தும் தமிழில் மற்றும் தமிழில் கையொப்பமிடுவதை பெருமிதப்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் வைக்கப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.12.2021 2 : 30 P.M