#
மதராசப்பட்டிணம், மதராஸ் என்றழைக்கப்பட்ட சென்னையைப் பற்றிப் பின்னோக்கிய வரலாற்றுப் பார்வையுடன் ஆய்வாளர்கள் எஸ்.முத்தையா துவங்கி நரசய்யா வரை பலர் நூல்களை எழுதியிருந்தாலும், பத்திரிகையாளரான பேராச்சி கண்ணன் எழுதியிருக்கும் ‘தல புராணம்’ ரொம்பவும் ஸ்பெஷல்.
இந்த நூலுக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். சேகரித்தவற்றை அருமையாகத் தொகுத்து நமக்குத் தந்திருக்கிறார்.
தமிழகத்தின் தலைநகரைப் பற்றித் தெரிந்து கொள்ள தோழமையான வழிகாட்டி இந்த நூல்.
*
இந்த நூலில் இருந்து ஒரு கட்டுரை உங்கள் பார்வைக்கு.
நூலின் உள்ள உழைப்புக்கு இக்கட்டுரை ஒரு பதம்.
மெட்ராஸில் 1897-ம் வருடம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் முதல்முதலாக சினிமா காட்சிகள் திரையிடப்பட்டன. அவை சில நிமிடங்களே ஓடும் குறும்படங்கள்.
இதன் பிறகு, 1913-ல் தாதா சாகேப் பால்கே இந்தியாவின் முதல் சினிமாவான ‘ராஜா ஹரிச்சந்திரா’ படத்தை எடுத்துப் புரட்சியை ஏற்படுத்தினார். அப்போது அவையெல்லாம் மௌனப்படங்களாக வெளியாகின.
இதன் தாக்கம் சென்னையில் சைக்கிள் விற்பனை நிறுவனத்தையும், பின்னர் மோட்டார் கார்கள் விற்பனை நிறுவனத்தையும் நடத்தி வந்த ஆர்.நடராஜ முதலியாரிடமும் தெரிந்தது.
திரைப்படத் தொழிலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டார்.
அப்போது இந்திய கவர்னர் ஜெனரலாகவும், வைஸ்ராயாகவும் இருந்த லார்டு கர்சன் டில்லியில் நடத்தும் தர்பார் நிகழ்ச்சிகளைச் செய்திப் படங்களாகத் தயாரித்து மக்களுக்குக் காட்ட ஒரு திட்டத்தை அமலில் வைத்திருந்தார்.
‘‘இந்தப் பிரசாரப் படங்களை எடுத்தவர் ஸ்டூவர்ட் என்ற பிரிட்டிஷ்காரர். புனே நகரில் இவருக்குச் சொந்தமான ஒரு திரைப்படக் கொட்டகை இருந்தது. சில நண்பர்கள் மூலமாக நடராஜ முதலியார் ஸ்டூவர்ட்டுடன் தொடர்பு கொண்டு புனேவிற்குச் சென்றார்.
திரைப்படத்தை எப்படி எடுப்பது? கேமிராவை எப்படி கையாள்வது? படப்பிடிப்பிற்குப் பிறகு படச்சுருளை எப்படி கழுவுவது போன்ற பலவகையான தொழில்நுட்பங்களை முறையாகக் கற்றுக் கொண்டார் முதலியார்.
பிறகு, மெட்ராஸ் திரும்பியவுடன் 1916-17ல் ‘தி இண்டியா பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்’’ என ‘அன்றைய சென்னை பிரமுகர்கள் தொகுதி II’ நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ராண்டார் கை.
இதற்கு முதலில், மெட்ராஸ் புரசைவாக்கம் பகுதியிலுள்ள மில்லர்ஸ் சாலையில் ‘டவர் ஹவுஸ்’ என்ற பங்களாவை வாடகை எடுத்துள்ளார் முதலியார். அங்கே ஒரு பந்தலை கட்டி, கூரையாகத் தென்னங்கீற்றுக்குப் பதில் வெள்ளைத் துணியைப் பயன்படுத்தினார்.
இப்படியாக, தென்னிந்தியாவின் முதல் திரைப்பட ஸ்டூடியோ, ‘தி இண்டியா பிலிம் கம்பெனி’ தயாரானது.
முதல் படத் தயாரிப்பில் எதை எடுப்பது என்பதில் முதலியாருக்குப் பெரும் குழப்பம். அப்போது தமிழ் நாடகத் தந்தையான பம்மல் சம்பந்த முதலியாரைச் சந்தித்து ஆலோசனை கேட்டார்.
அவர்தான் மகாபாரதத்தில் வரும் கீசகவதத்தை படமாக்கச் சொன்னார்.
தென்னிந்தியாவின் முதல் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட முதல் தென்னிந்தியத் திரைப்படமான ‘கீசகவதம்’ 1918 ஜனவரி மாதம் வெளியானது.
அன்றைய மெட்ராஸில் மிகவும் பிரபலமான எல்ஃபின்ஸ்டன் தியேட்டரில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. இந்த மௌனப்பட வெற்றிக்குப் பின் ‘லவகுசா’, ‘மார்க்கண்டேயா’ என அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வெளியிட்டார் முதலியார்.
இந்நிலையில் ஒருநாள் திடீரென அவரின் ஸ்டூடியோவில் தீவிபத்து ஏற்பட, படச்சுருள்களும், விலையுயர்ந்த பொருட்களும் கருகி சாம்பலாகிவிட்டன. இதனால், ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தவித்தார்.
இந்நேரம் அவரின் ஒரே மகனும் மரணமடைந்தான். அடுத்தடுத்து நிகழ்ந்த துயரங்களால், தம் திரைப்படத் தொழிலைவிட்டே சென்றுவிட்டார் முதலியார்.
இதன்பிறகு, மெளனப் படங்களிலிருந்து சினிமா பேசும் படத்திற்குள் சென்றது. 1931ல் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ வெளியானதும் தமிழ்ச் சினிமா வளர்ச்சி பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
இதற்கிடையேதான் தமிழ்ச் சினிமாவின் பிதாமகரும், சீர்திருத்த இயக்குநருமான கே.சுப்ரமணியம் சினிமா கலையை பயின்று வந்தார்.
ஆரம்பத்தில் மெட்ராஸ் சட்டக்கல்லூரியில் பி.எல் முடித்தவர், நாகப்பட்டிணத்தில் தனது மனைவி மீனாட்சியின் தாத்தாவான கே.எஸ்.வெங்கடராம அய்யரிடம் ஜுனியர் வக்கீலாகப் பணியாற்றினார்.
அந்த சமயம், சிவகங்கையைச் சேர்ந்த ஆர்.பத்மநாபன் என்பவர் மெட்ராஸில் ‘அசோசியேட் பிலிம்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இதற்கு நிதியுதவி அளித்ததுடன் அதில் பங்குதாரராகவும் இருந்தார் கே.எஸ்.வெங்கடராம அய்யர்.
இந்த நிறுவனம் இந்தியத் திரைப்பட முன்னோடிகளில் ஒருவரான ராஜா சாண்டோ இயக்கத்தில் நிறைய மௌனப் படங்களைத் தயாரித்தது. அப்போது ராஜா சாண்டோவிடம் உதவியாளராகச் சேர்ந்து பணியாற்றினார் கே.சுப்ரமணியம்.
பிறகு, பேசும் படத்திற்குள் சினிமா வந்தபோது காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பா செட்டியார் மற்றும் அவரின் நண்பர் லேனா செட்டியார் ஆகியோருடன் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபடலானார்.
அப்போது, லேனா செட்டியார் நடத்தி வந்த ‘பவளக்கொடி’ நாடகத்தைப் பார்த்தார் கே.சுப்ரமணியம். இதையே படமாக எடுக்கலாம் என்று நினைத்தார்.
இதனால், அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு இடத்தை குத்தகைக்கு எடுத்து ‘மீனாட்சி சினிடோன்’ என்ற பெயரில் ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கினார்.
இதுவே, பின்னாளில் நெப்டியூன், சத்யா ஆகிய ஸ்டூடியோக்களாக பரிமணமித்து இன்று எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலைக் கல்லூரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
‘‘ஆரம்பத்துல இந்த இடம் ஆற்காடு நவாப்பிற்கு சொந்தமான குதிரை லாயமா இருந்துச்சு. நவாப்கிட்ட பேசி இந்த இடத்தை இயக்குநர் கே.சுப்ரமணியம் குத்தகைக்கு எடுத்தார்.
இது திறந்தவெளி ஸ்டூடியோவா இருந்திருக்கு. சூரிய ஒளி வெளிச்சத்துலயே ‘பவளக்கொடி’ படப்பிடிப்பை நடத்திருக்கார்’’ என நம்மிடம் வரலாற்றைப் பகிர்ந்தார்
எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரியின் நிர்வாகியும், சத்யா ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநருமான குமார் ராஜேந்திரன்.
‘‘இந்த ‘பவளக்கொடி’ திரைப்படத்துலதான் இந்திய சூப்பர் ஸ்டார்னு பெயர் எடுத்த எம்.கே.தியாகராஜ பாகவதர் ஹீரோவாக அறிமுகமானார்.
இதில், ஹீரோயினாக எஸ்.டி.சுப்புலெட்சுமி நடிச்சாங்க. பின்னாடி, இவங்க கே.சுப்ரமணியத்தையே திருமணம் செய்துகிட்டாங்க. இவங்களுக்குப் பிறந்த குழந்தை தான் இசைமழலை ராம்ஜி.
இந்தப் பட வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து பல படங்கள் எடுத்தார். அப்ப, அவருக்கு எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு ஸ்டூடியோ தேவையா இருந்துச்சு.
சில பங்குதாரர்கள சேர்த்துகிட்டு மவுண்ட்ரோடும், கோடம்பாக்கம் ரோடும் சேர்ற இடத்துல இருந்த ‘ஸ்பிரிங் கார்டன்ஸ்’ தோப்பை விலைக்கு வாங்கினார், அங்க, ‘மோஷன் பிக்சர் புரொடியூஸர்ஸ் கம்பைன்ஸ்’னு ஒரு ஸ்டூடியோவை உருவாக்கி படங்களைத் தயாரிச்சார்.
பிறகு, இந்த இடத்தை நவாப்பிடம் இருந்து வேணுகோபால் முதலியார் விலைக்கு வாங்கியிருக்கார். அவரிடமிருந்து கோயமுத்தூர் ஜுபிடர் பிக்சர்ஸ் அதிபர்களான எம்.சோமசுந்தரமும், எஸ்.கே.மொய்தீனும் வாங்கினாங்க. இதுக்கு ‘நெப்டியூன் ஸ்டூடியோ’னு பெயர் வச்சாங்க.
இந்த இடம் அப்போ 25 ஏக்கர் பரப்பளவுல இருந்தது. இந்த நெப்டியூன் ஸ்டூடியோவுல ஜுபிடர் பிக்சர்ஸ் அதிபர்கள் தவிர வேறு சில பங்குதாரர்களும் இருந்தாங்க.
இந்த ஸ்டூடியோ அருகேயே ஜுபிடர் ஸ்டூடியோவை உருவாக்கி இருக்காங்க.
ஏன்னா, நெப்டியூன்ல நிறைய படங்களின் படப்பிடிப்பு நடந்திட்டே இருந்திருக்கு. அதனால, வசதிக்காக இந்த ஸ்டூடியோவை ஜுபிடர் பிக்சர்ஸ் சில பங்குதாரர்களுடன் உருவாக்கினாங்க.
இந்த நெப்டியூன் ஸ்டூடியோவுல இருந்தவங்க ஜுபிடர் ஸ்டூடியோவிலும் இருந்திருக்காங்க. ஒரு கட்டத்துல ஜுபிடர் ஸ்டூடியோவுக்கு நெப்டியூன் ஸ்டூடியோவை ஒத்திகைக்குக் கொடுத்திட்டாங்க.
இதனால, நெப்டியூன் ஸ்டூடியோ பங்குதாரர்களுக்கும் ஜுபிடர் ஸ்டூடியோ பங்குதாரர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கு.
இதைத் தீர்த்து வைக்க பிரபல வக்கீல் பி.எஸ்.கைலாசம் வந்தார். இவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மாமனார். , 1957ல் ’நாடோடி மன்னன்’ ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இதனால, வக்கீல் கைலாசம் எம்.ஜி.ஆரிடம் ஸ்டூடியோவை வாங்கச் சொல்லி கேட்கிறார். இந்த விஷயங்கள் எல்லாம் 1957 முதல் 1961-க்குள் நடக்கின்றன. அப்புறம் எம்.ஜி.ஆர், அவரது நெருங்கிய சில நண்பர்களுடன் இணைந்து ஜுபிடர் ஸ்டூடியோவின் பங்குகளை வாங்கினார்.
ஐந்து ஏக்கர் பரப்புள்ள இந்த ஸ்டூடியோ 1963-ம் வருடம் எம்.ஜி.ஆரின் தாயின் நினைவாக ‘சத்யா ஸ்டூடியோ’னு மாற்றம் செய்யப்பட்டது.
பிறகு, 1971 வரை எம்.ஜி.ஆர் இந்த ஸ்டூடியோவை நிர்வகிச்சார். கட்சிப் பணி அதிகரிச்சதும் ஸ்டூடியோவை நடத்துவதில் எம்.ஜி.ஆருக்கு சிரமம் ஏற்பட்டது.
இதனால், 1971ல் அண்ணா திமுக ஆரம்பிக்கும் முன் இங்கே பணியாற்றிய தொழிலாளர்களிடமே விலையில்லா குத்தகைக்கு 20 ஆண்டுகளுக்கு இந்த ஸ்டூடியோவை ஒப்படைச்சார் எம்.ஜி.ஆர்.
அதாவது, இதனை விற்காமல் இதுல வேலை செஞ்சவங்ககிட்டயே இருபது வருட லீஸுக்கு ஒப்படைச்சார்.
குத்தகைக் காலம் முடிந்த பிறகு தொழிலாளர்கள் ஸ்டுடியோ நிர்வாகிகளிடமே அதன் நிர்வாகத்தை ஒப்படைத்து விட்டார்கள்.
அதாவது எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, 1991 முதல் 1994 வரை இதன் நிர்வாகம் ஸ்டுடியோ நிர்வாகிகளிடம் இருந்தது. அதன்பிறகு, இங்க ஒரு கல்லூரி ஆரம்பிக்கலாம்னு ஜானகி அம்மையார் சொன்னாங்க.
1996ல் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் ஜானகி அம்மாள் போனில் அவரை வாழ்த்தினார். அப்ப, ‘இந்த இடத்துல ஒரு கல்லூரி ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். நீங்க அதுக்கு அனுமதி தரணும்’னு கேட்டிருக்காங்க.
பிறகு கலைஞர், ‘உங்களுக்கு உடல்நிலை சரியில்லைனு சொன்னாங்க. நான் நேரில் வந்து பார்க்கிறேன்’னு சொல்லியிருக்கார்.
ஆனா, அடுத்த ரெண்டு நாள்ல ஜானகி அம்மா இறந்திட்டாங்க. உடனே ராமாவரம் தோட்டத்திற்கு வந்த கலைஞர், ‘ஜானகி அம்மா ரெண்டு நாளுக்கு முன்னாடி எங்கிட்ட பேசும் போது கல்லூரி பத்தி சொன்னார். யார் அதை நடத்தப் போறீங்க?ன்னு கேட்டார்.
கலைஞர் ஆட்சியில்தான் இந்தக் கல்லூரிக்கு அனுமதி கிடைச்சது.
அவரும், பேராசிரியரும் வந்துதான் எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாள் கல்லூரியைத் தொடங்கி வைச்சாங்க.
பிறகு, கல்லூரியின் முதல் ஆண்டு விழாவுக்கு அப்போதைய சென்னை மேயரான ஸ்டாலின் வந்தார்.
இன்னைக்கு 4 ஆயிரம் பேர் படிக்கிறாங்க. பெரும்பாலும் அடித்தட்டு மாணவிகள்தான்.
தவிர, வாய் பேசமுடியாத, காது கேளாத மாணவிகள் இருநூறு பேருக்கு மேல இருக்காங்க. அவங்களுக்கான பிரத்யேக ஆசிரியர்களும் இங்க இருக்காங்க.
இதுதான் சத்யா ஸ்டூடியோ கல்லூரியா மாறின கதை. அதுமட்டுமில்ல. இங்க நிறைய வரலாற்று நிகழ்வுகளும் நடந்திருக்கு. அண்ணா இறந்தப்ப கலைஞர் இங்க வந்து எம்.ஜி.ஆர். கிட்ட அடுத்த தலைவர் பற்றி விவாதித்திருக்கார்.
பின்னாடி அதிமுக ஆரம்பிக்கும்முன் அதற்கான விவாதமும் இங்க நடந்திருக்கு’’ என நினைவுகளை அடுக்கினார் குமார் ராஜேந்திரன்.
இந்த இடத்தில்தான் லேனா செட்டியாரின் கிருஷ்ணா பிக்சர்ஸ் பேனரில் பி.யு.சின்னப்பா-டி.ஆர்.ராஜகுமாரி நடித்த, ‘கிருஷ்ணபக்தி’, ‘வனசுந்தரி’, எம்ஜிஆர்-பானுமதி நடித்த ‘மதுரை வீரன்’, என்டிஆர்-பத்மினி நடித்த ‘மருமகள்’, ‘அரசிளங்குமரி’, ‘பாசமலர்’, ‘படித்தால் மட்டும் போதுமா’போன்ற படங்கள் எடுக்கப்பட்டன.
‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘தெய்வத்தாய்’, ‘மாட்டுக்கார வேலன்’ என எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களின் படப்பிடிப்புகள் இங்கே நடந்துள்ளன.
பிறகு, ரஜினி, கமல் என 80களின் ஹீரோக்களின் படங்களும் நிறைய இங்கே எடுக்கப்பட்டன. குறிப்பாக, ஜெயில் செட்அப், ஆலமர பஞ்சாயத்து சீன், ஆற்றங்கரை பாடல் எனப் பலவும் சத்யா ஸ்டூடியோவிலே நடந்திருக்கின்றன.
திரைப்படங்கள் எடுக்கப்பட்ட இடம் தற்போது கல்விக்கூடம் ஆகியிருக்கிறது.
*
சூரியன் பதிப்பகம் வெளியிட்டுள்ள பேராச்சி கண்ணனின் ‘தல புராணம்’ நூலில் இருந்து ஒரு கட்டுரை.
நூல்: தல புராணம், ஆசிரியர்: பேராச்சி கண்ணன், பக்கங்கள்: 456, விலை ரூ. 350 சூர்யா பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-4.