மகாத்மா காந்தி மறைந்தபிறகு அவருடைய அஸ்தி அடங்கிய கலசத்தை எடுத்துக்கொண்டு பாரக்பூர் சென்றார் ராஜாஜி.
கங்கைக் கரையில் லட்சக்கணக்கான மக்கள்.
துப்பாக்கி ஏந்திய கரங்கள் மரியாதை செலுத்தின.
அஸ்திக் கலசத்தைக் கவிழ்த்தபோது, சற்றுத் தடுமாறிக் கங்கையில் விழப் போனார் ராஜாஜி. மெய்க்காவலர்கள் சட்டர்ஜியும், சிங்காரவேலுவும் அவரைப் பிடித்துக் கொண்டனர்.
அப்போது, “காந்தியின் அஸ்தித் துகள்கள் என்னை ஈர்த்து இழுத்தன’’ என்றார் ராஜாஜி.
அன்றிரவு வானொலியில் ராஜாஜி பேசும்போது சொன்னார். “எல்லாம் முடிந்துவிட்டது. உலகமே வெற்றிடமாய்ப் போய்விட்டது.
பயங்கர வெறுமை நம்மைச் சூழ்ந்திருக்கிறது. நம்மிடம் அன்பு காட்டப்பட வேண்டும் என்று ஓர் உரிமையை எதிர்பார்க்காதீர்கள்.
மாறாக நீங்கள் அன்பு செலுத்தத் தொடங்குங்கள். அப்போது அன்பு தானாக உங்களைத் தேடி வரும்.
இது தான் உலக நியதி. இயற்கையின் சட்டம்.
எந்தப் புதிய உத்தரவு அல்லது விதிமுறையும் இதனை மாற்ற முடியாது.
இந்த இயற்கை நியதியை நாம் பின்பற்றாவிட்டால், இதை நமக்குக் கொடுத்த காந்திஜியோடு இந்தச் சட்டத்தையும் நாம் சாக அனுமதித்துவிட்டதாகும்.
அந்நிலையில் நாம் அவரைக் கொன்ற கொலையாளியின் கூட்டாளியாகி விடுவோம்.
மாறாக, நாம் இந்த இயற்கை நியதியை மதித்து, இந்தச் சட்டத்தை மனப்பூர்வமாகப் பின்பற்றினால் காந்திஜி நமது உள்ளங்களில் உறைவார். நம் மூலம் அவரும் வாழ்ந்து கொண்டிருப்பார்.’’
-ராஜ்மோகன் காந்தி எழுதி கி.ராஜேந்திரன் தமிழில் மொழிபெயர்த்த ‘ராஜாஜி வாழ்க்கை வரலாறு’ நூலில் இருந்து…