பொள்ளாச்சி சம்பவத்தை நினைவூட்டும் ‘சித்திரைச் செவ்வானம்’!

பரபரப்பூட்டிய செய்திகளை அடிப்படையாக வைத்து திரைக்கதையை உருவாக்குவது ஒரு கலை.

சில நேரங்களில் அவை உண்மையை விட்டு வெகுதூரம் விலகி நிற்கும் அல்லது மிகநெருக்கமாகப் பொருந்திப்போகும் அல்லது ஒரு வசனமாகவோ, காட்சியாகவோ அல்லது பின்னணியில் இடம்பெறும் ஒரு கருத்தாகவோ மட்டும் தன்னிடத்தைச் சுருக்கிக் கொள்ளும்.

ஆனால், மக்களின் மனதில் மழுங்கடிக்கப்பட்ட அந்த செய்தி அத்திரைப்படத்தினால் மீண்டும் நினைவூட்டப்படும்.

அந்த வகையில், பொள்ளாச்சியில் சில பெண்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளானதை திரையில் ஆவணப்படுத்தியிருக்கிறது ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா முதன்முறையாக இயக்குனராகியிருக்கும் ‘சித்திரைச் செவ்வானம்’.

சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல், சுப்பிரமணிய சிவா, டி.சிவா, அரவிந்த் ஆகாஷ் நடித்துள்ள இப்படம் ஜீ5 தளத்தில் காணக் கிடைக்கிறது.

தகப்பனின் வலி!

நீட் தேர்வுப் பயிற்சிக்காக பொள்ளாச்சி வட்டாரத்திலுள்ள ஒரு கல்விநிலையத்தில் பயின்றுவரும் ஐஸ்வர்யா (பூஜா கண்ணன்) திடீரென்று காணாமல் போனதாகத் தகவல் கிடைக்கிறது. விடுதி அறையில் உடன் தங்கியிருந்த தோழி வெளியே சென்றிருந்ததால், அவர் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை.

இது பற்றி விசாரிப்பதற்காக, கிராமத்தில் இருக்கும் முத்துப்பாண்டியை அழைத்துச் செல்கின்றனர் போலீசார்.

ஐஸ்வர்யா விடுதி அறையில் குளிக்கும் காட்சி வாட்ஸ்அப்பில் பரவியபிறகே இச்சம்பவம் நடந்ததை தெரிவிக்க, அதிர்ச்சியில் உறைகிறார் முத்துப்பாண்டி.

இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ஆஷா (ரீமா கல்லிங்கல்), அந்த வீடியோ யாரிடம் இருந்து அதிகம் பகிரப்பட்டது என்பதைக் கண்டறிகிறார். அந்த மாணவனைத் தேடிச் சென்றால், அவரோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

அந்த மாணவர் இறந்து போக, அவரைத் தாக்குவதற்கு ஆட்களை ஏவிய நண்பரைத் தேடுகிறது போலீஸ்.

ஆனால், அந்த நபர் மட்டுமல்லாமல் அவரோடு சேர்ந்த மேலும் இரு மாணவர்களையும் தாக்கி மொபைலை பறிக்க முயற்சிக்கிறார் ஒரு மர்ம நபர். அதே நேரத்தில் ஒவ்வொருவராக மூவரையும் கடத்துகிறார் முத்துப்பாண்டி.

போலீசார் ஒரு பக்கம் விசாரணையைத் தொடர, கடத்திய மாணவிகளை முத்துப்பாண்டி கொடூரமாகக் கொல்ல, இறுதியில் ஐஸ்வர்யாவுக்கு நடந்த கொடுமை தெரிய வருவதுடன் படம் நிறைவடைகிறது.

பாலியல்ரீதியாக அவமானப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணைப் பெற்றெடுத்தவரின் வலி திரைக்கதை முழுக்க நிறைந்திருக்கிறது. ஆனால், கிளைமேக்ஸ் காட்சி மட்டும் எண்பதுகளில் பார்த்த எஸ்.ஏ.சி. படங்களை நினைவூட்டியது ஏனோ?!

சில்வாவின் தைரியம்!

முத்துப்பாண்டியாக சமுத்திரக்கனியும் ஐஸ்வர்யாவாக பூஜா கண்ணனும் நன்றாக நடித்திருக்கின்றனர் என்று சொல்லி சாதாரணமாகக் கடந்துவிட முடியாது.

குறிப்பாக, சாய் பல்லவியின் தங்கையான பூஜா முதல் படத்திலேயே தேர்ந்த நடிகையைப் போன்ற பாவனைகளை வெளிப்படுத்தியிருப்பது அருமை. அழும்போதுமட்டும் செயற்கைத்தனம் எட்டிப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

இன்ஸ்பெக்டராக வரும் ரீமாவுக்கு நடிக்கப் பெரிதாக வாய்ப்பில்லை. அதனால், கம்பீரமாக திரையில் வலம் வந்திருக்கிறார்.

தயாரிப்பாளர் டி.சிவா, சுப்பிரமணிய சிவா ஆகியோரை அம்போவென ஒரு காட்சியோடு விட்டிருப்பது திரைக்கதைக்கு வேகத்தடை.

ஐஸ்வர்யாவைத் துன்புறுத்தும் மாணவர்களாக வருபவர்கள் வெகு இயல்பாக நடித்திருக்கின்றனர்.

வித்யா பிரதீப் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. வெறுமனே ஒரு போட்டோவோடு அல்லது வேறு ஏதேனும் உத்தியைப் பயன்படுத்தி அவரது போர்ஷனை குறைத்திருக்கலாம்.

பிரவீன் கேஎல்லின் படத்தொகுப்பும், மனோஜ் பரமஹம்சா மற்றும் வெங்கடேஷின் ஒளிப்பதிவும், படம் பார்க்கும் உணர்வை அதிகப்படுத்துகிறது. சாம் சிஎஸ் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.

இயக்குனர் விஜய் கதை எழுதியதோடு தயாரிப்பையும் மேற்கொண்டிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் பரபரப்பைக் கடத்திய சில்வா, நல்ல திரைக்கதை கிடைத்தால் மிகத்தேர்ந்த இயக்குனராக மிளிர்வார் என்ற நம்பிக்கையை வழங்கியிருக்கிறார்.

பொள்ளாச்சி சம்பவம் குறித்து செய்திகளில் அறிந்தவருக்குக் கூட, ‘அண்ணா அடிக்காதீங்கண்ணா’ என்ற குரல் அழுகையை வரவழைத்துவிடும்.

அதனை அப்படியே காட்சியாக்குவது பிழையாகலாம் என்று நினைத்து, விசாரணை தொடர்பான காட்சிகளில் தைரியமாகச் சில பாத்திரங்களைப் படைத்திருக்கிறார் இயக்குனர்.

அதேபோல, இயக்கம் என்ற வார்த்தையை அடுத்து ‘ஸ்டண்ட்’ சில்வா என்ற பெயரையே அவர் தொடர வேண்டும்.

மூன்று மாணவர்களையும் தாக்கும் மர்ம நபர் யார் என்ற கேள்விக்கு ‘சபாஷ்’ என்று சொல்லத்தக்க வகையில்  பதிலளிக்கும் திரைக்கதை, அந்த இடங்களுக்கு முத்துப்பாண்டி எப்படி வந்தார் என்பதைத் தெளிவாகக் காட்டவில்லை. முடிவும்கூட ஏற்கும்படியாக இல்லை.

சினிமாத்தனமாக சிலரைக் கடத்துவது என்றானபிறகு, பாலியல் கொடுமைகள் என்பது பெண்களின் வாழ்வில் ஒரு கறைதான் என்பதுபோல கிளைமேக்ஸை அமைத்திருக்கலாம்.

“ஒரு வீடியோவால உன் வாழ்க்கை முடிஞ்சுபோகாது” என்ற வசனத்தை ஜெயகாந்தன் எப்போதோ தன் படைப்புகளில் பயன்படுத்தியபின்னும், அதனை ஒரு வசனமாக மட்டுமே பயன்படுத்தியிருப்பது துயரம்.

சசிகுமார் இயக்கிய ‘ஈசன்’ படத்திற்கும் இப்படத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை.

ஆனால், பாலியல் அவமானத்திற்கு உள்ளான பெண்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்பதைச் சொல்லாமல் தவிர்த்ததால், பெண்மையைப் பழமையாகக் கருதும் பட வரிசையில் சேர்கிறது ‘சித்திரைச் செவ்வானம்’.

ஓடிடி ரிலீஸ் எனும்போது முடிந்தவரை புதுமைகளைப் புகுத்தியிருக்க வேண்டாமா?!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment