“ஐயா, என் கிணற்றைக் காணோம்.!” என்ற சினிமா நகைச்சுவையை நாம் அறிவோம். இதுபோன்ற அதிபுத்திசாலி மக்கள் கிராமங்களில் நிறைய இருக்கிறார்கள்.
ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.
வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.
அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.
விவசாயிக்குக் கோபம் வந்தது “எனக்குக் கிணற்றை விற்று விட்டு, அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் தடுப்பது என்ன நியாயம்…” என்று கோபத்துடன் கேட்டான்.
கிணற்றை விற்றவன், “ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்ல! தண்ணீர் எனக்குத்தான் சொந்தம்!” என்று தர்க்கம் செய்தான்.
குழம்பிப்போன விவசாயி பஞ்சாயத்தில் முறையிட்டான் ஊர் கூடி நடந்த விசாரணையில் கிணற்றை விற்றதை ஒப்புக் கொண்ட அதேநேரம் தண்ணீர் தன் உழைப்பால் வந்தது என்று வாதாடி கூடுதல் பணம் பெற முயற்சித்தான் கிணற்றின் பழைய உரிமையாளன்.
நாட்டாமை இருவர் பக்க வாதத்தையும் கேட்டுவிட்டு, கிணற்றை விற்றவனிடம் சொன்னார், “நீ கிணற்றை விற்றுவிட்டபடியால், அது உன்னுடையதல்ல.
அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. அதில்தான் தண்ணீரை வைத்திருப்பேன் என்று அடம் பிடித்தால், விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு” என்றார்.
கிணற்றை விற்றவன் முகத்தில் ஈயாடவில்லை. “கிணற்றுக்குத் தண்ணீர் இலவசம்!” என்று கூறிவிட்டு இடத்தைக் காலி செய்துவிட்டான்.
இதுபோன்று, தாங்கள்தான் உலகத்தில் சிறந்த புத்திசாலிகள் என்று நினைப்போருக்கு பதிலடி கொடுக்கும் வல்லவர்கள் எப்போதுமே உண்டு.
உறவினர் வீட்டுக்கு வந்தார் ஒரு விருந்தாளி அவர் வேண்டாத விருந்தாளி!
மனைவியிடம் காபி கொண்டுவருமாறு சொன்னான் கணவன்.
“இங்கே காபிப் பொடியும் இல்லை. சர்க்கரையும் இல்லை. அடுப்பங்கரையிலிருந்து வந்தது சப்தம்.
“எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டு தான்.. விருந்தாளி முன்பா அவமானப்படுத்துகிறாய்.?” என்று கோபத்தோடு சமையலறைக்குள் நுழைந்தான் கணவன். அடிக்கிற சப்தமும், “இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா” என்று மனைவியின் அழுகுரலும் கேட்டது.
சிறிது நேர சண்டைக்குப்பின் ஹாலுக்கு வந்த கணவன், அங்கே விருந்தாளி இருந்த இடம் வெறிச்சோடி இருப்பதைப் பார்த்தான்.
“ஏய் விருந்தாளி போய்விட்டார்” என்று வெற்றிச் சிரிப்பு சிரித்த கணவன், “எப்படி இருந்தது என் நடிப்பு அடிப்பதுபோல் அடித்தேனே…” என்றான்.
“ஆஹா- அதேபோல் நான் அழுவது போல் நடித்தேனே அது எப்படி?” என்றாள் மனைவி..
“பிரமாதம்” என்று கணவன் சொல்லும்போதே பின்னால் இருந்து வந்தது. ஒரு குரல்.
“நானும் போவது போல் போய்விட்டு திரும்பி விட்டேனே!”
குரல் விடாக்கண்ட விருந்தாளியினுடையது.
– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை… ஒரு விதை…’ என்ற நூலிலிருந்து…