சாமானிய மக்கள் மீது ஒன்றிய அரசுக்கு அக்கறையில்லை!

– காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 

விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “நாகலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அரசு வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. அவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு இருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” எனக் கூறினார்.

“மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் நீக்கம் செய்யப்பட்டது அராஜகமானது. இதற்கு முன்னர் அவ்வாறு நடந்தது இல்லை. இந்த நடவடிக்கை அரசியல் சாசனம் மற்றும் விதிமுறைகளுக்கு எதிரானது.

குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும்” என்றும் சோனியகாந்தி தெரிவித்தார்.

“எல்லை விவகாரம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தும்” எனத் தெரிவித்த சோனியா, விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் குறித்து மோடி அரசுக்கு அக்கறையில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

Comments (0)
Add Comment