நம் கனவை நிறைவேற்ற உலகம் தயாராக இருக்கிறது!

உலகத்திலேயே அதிகம் பேரால், காசு கொடுத்து பார்க்கப்பட்ட நினைவுச் சின்னம் எது தெரியுமா? ஃபிரான்ஸ் நாட்டில் பாரிசில் இருக்கக்கூடிய ஈஃபிள் டவர் தான் அது.

பலர் படங்களில் பார்த்து மகிழ்ந்த உயர்ந்த கோபுரம் அது. உங்கள் வாழ்நாளில் ஒரு வாய்ப்பு கிடைத்தால், அவசியம் நேரில் சென்று பாருங்கள். அவ்வளவு அழகும், ஆச்சர்யமும் தரும் கோபுரம் அது.

கால மாற்றத்துக்கு ஏற்ப, அதைப் பராமரித்து உயிர்ப்போடு வைத்திருக்கிறது ஃபிரான்ஸ் அரசு.

சுஃபின் டவர் என்னும் அந்த அதிசயம், ஓர் அற்புத உருவாக்கம். 125 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் அதைத் தன் கற்பனையில் உருவாக்கி, சரித்திரமாக்கி இருக்கிறார். அவர், குஸ்தவே ஈஃபிள். பொறியாளர்.

ஃபிரெஞ்ச் புரட்சியின் நூற்றாண்டை ஒட்டி, மாபெரும் சர்வதேசக் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டனர்.

கண்காட்சிக்கு மிகப் பெரிய நுழைவுவாயில் போன்று ஆர்ச் ஒன்று கட்டலாம் எனத் திட்டமிடப்பட்டது. பலரிடமும் கருத்துக் கேட்கப்பட்டபோது. குஸ்தவே ஈஃபிள் புதுமையாக யோசித்த விஷயத்தைச் சொன்னார்.

‘எனது திட்டம் ஒரு ஆர்ச் தான். ஆனால், அது அகலமான வளைவாக இல்லாமல், உயரமான கோபுரமாக இருக்கும்.

பாரிஸ் நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் அது கண்ணுக்குத் தெரியும். காலா காலத்துக்கும் நினைவில் நிற்கும்’ என்றார். அந்த யோசனை அனைவருக்கும் பிடித்திருந்தது. அதை மேம்படுத்தினார்கள்.

முழுக்க, முழுக்க துருப் பிடிக்காத 7300 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. 18,038 இரும்புத் துண்டுகளின் இணைப்பாக, 324 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டது அந்தக் கோபுரம்.

ஏறக்குறைய 81 மாடி கட்டிடத்தின் உயரம் அது. கோபுரத்தில் 3 அடுக்கு உள்ளது. 300 படிகள் ஏறினால், முதல் அடுக்கு வரும்.

இன்னும் 300 படிகள் ஏறினால் 2-வது அடுக்கு. அதன் பிறகு 1110 படிகள் ஏறினால் 3-வது அடுக்கு வரும். மொத்தம் 1710 படிகள் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த 3 அடுக்குகளிலுமே உணவகம் உள்ளது.

அந்த உயரத்தில் இருந்து ஒட்டுமொத்த பாரிஸ் நகரையும் பார்க்க முடியும். இந்தக் கோபுரம் கட்டும்போது 20 ஆண்டுகள் பாதுகாத்தால் போதும் என்று உருவாக்கப்பட்டது.

ஆனால், அந்த உயர்ந்த கோபுரத்தில், பிராட்காஸ்டிங் ஆன்டனா வைத்தால், ரேடியோ, டிவி, தொலைத் தொடர்பு என்று பல விஷயங்களுக்கும் பயன்படும் என்று சிந்தித்த பிறகு, இதைத் தொடர்ந்தும் பாதுகாக்க ஆரம்பித்தனர்.

துருப் பிடிக்காத இரும்பினால் கட்டப்பட்டதால் இன்றளவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 75 லட்சம் பேர் வந்து பார்த்துச் செல்லும் உலக அதிசயமாக இருக்கிறது ஈஃபிள் டவர்.

இது போன்றே அமெரிக்காவில், ஜப்பானில், மெக்சிகோவில், சீனாவில் மாதிரிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. காரணம் அதன் ஈர்ப்பு.

1889-ல் தொடங்கி 1929 வரை 40 ஆண்டுகளுக்கு உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற இடத்தைப் பிடித்திருந்தது. ஈஃபிள் டவர். தற்போது, துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா என்ற தனியார் கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக அந்த இடத்தைப் பிடித்துள்ளது.

திட்டமிடப்பட்டு ஐந்தரை ஆண்டுகளில் மேலேழும்பிய புர்ஜ் கட்டிடத்தின் உயரம், 830 மீட்டர். சுமார் ரூ.11 ஆயிரம் கோடி செலவில் எம்மார் பிராப்பர்ட்டீஸ் என்ற நிறுவனம் இதைக் கட்டியது. புர்ஜ் கலீஃபாவில் 57 லிஃப்ட், 8 நகரும் படிக்கட்டு வசதிகள் உள்ளன.

துபாய், எண்ணெய் சார்ந்த வருமானம் ஈட்டும் நாடாக இருந்தாலும், சுற்றுலா வருமானத்தை ஈர்க்கும் திட்டத்தோடு இது உருவாக்கப்பட்டது.

அடுத்து சீனாவின் ஷாங்காய் டவர் மிக உயரமான கோபுரமாகத் திகழ்கிறது. 128 மாடிகள் கொண்ட இந்தக் கோபுரம், 632 மீட்டர் உயரம் கொண்டது.

உலகின் உயரமான கோபுரம் என்ற இடத்தைப் பிடிக்க பல்வேறு நாடுகளும் போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் உலகம் முழுக்க, 23 உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

1000 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடம் ’ஜெட்டா’ டவர்ஸ்’ சவுதி அரேபியாவில் உருவாகி வருகிறது.

அடுத்த ஐந்தாண்டுகளில் நாம் பல உயர்ந்த கோபுரங்களைப் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. சீனாவிலும் ஊகான் சி.டி.எப். டவர்ஸ் என்ற 975 மீட்டர் உயரக் கட்டிடம் உருவாகி வருகிறது.

அது அந்த நாட்டின் உயரிய கோபுரமாக மாற இருக்கிறது. கோலாலம்பூரில் 421 மீட்டர் உயரக் கட்டிடம் கே.எல்.118 தயாராகி வருகிறது.

இந்தியாவின் உயர்ந்த கட்டிடம் மும்பையின் ‘இம்பிரியல் 3’ டவர் ஆகும். இது 396 மீட்டர் உயரம் கொண்டது. 2025-ல் தயாராகும் என்கிறார்கள். இது 116 மாடிகள் கொண்டது. மிகப் பிரபலமான முறையில் மும்பையில் கட்டப்பட்டு வருகிறது.

இது வந்தபிறகு உலகளவில் இந்தியாவின் உயரமான கட்டிடப் பட்டியலில் மாற்றம் ஏற்படும். இந்தியாவும் இதை நோக்கி முன்னேறுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, எல்.ஐ.சி.தான் 14 மாடி கட்டிடம் என்ற பிரமிப்பைத் தந்தது. இப்போது அதைவிட உயரமான கட்டிடங்கள் நிறைய வந்துவிட்டன.

இவற்றை வெறும் கட்டிடங்களாகப் பார்க்காதீர்கள். மனிதனின் அறிவின் எழுச்சியாகப் பாருங்கள். ஒரு நுண்ணிய திட்டமிடுதலின் காரணமாக உருவாக்கக்கூடிய அதிசயமாக பாருங்கள். இதையெல்லாம் பார்த்தால் நமக்கும் நம் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

நாம் ஒரு கனவு கண்டால், அதை நிறைவேற்றித்தர இந்த உலகம் தயாராக இருக்கிறது என்பதற்கான உதாரணம்தான் ஈஃபிள் டவர்.

ஒரு தனிநபர் சிந்தனையில் உருவான, ஒரு சிறிய விதையாக விழுந்த ஒரு ஐடியாவால், உலகையே திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் குஸ்தவே ஈஃபிள்.

அவரைப் பின்பற்றி இன்று உலகமே உயரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

நாம் போவது எப்போது..?

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ நூலிலிருந்து…

http://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment