தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாள் இன்று.
அ.தி.மு.க.வில் உள்ள பல தலைவர்களும், அ.ம.மு.க.வில் இருக்கும் தலைவர்களும் தங்கள் தலைவியை நினைவுகூர்ந்து அளித்த விளம்பரங்கள் இன்று வெளிவந்திருக்கின்றன.
மெரினாவில் உள்ள அவருடைய கல்லறை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பலர் அங்கு மலர் வளையம் வைத்திருக்கிறார்கள்.
அவர் மறைந்து ஐந்து ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் அவருடைய மரணம் குறித்த சந்தேகங்களைப் பொதுவெளியில் சிலர் விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருந்தவரை பெரும் மருத்துவர்கள் குழுவே சிகிச்சையைக் கவனித்தது. வெளிநாட்டிலிருந்தும், எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்தும் மருத்துவர்கள் வந்து கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
தினமும் அவர்கள் தரும் மருத்துவ அறிக்கைகள் மத்திய அரசுக்கு அனுப்பபட்டுக் கொண்டிருந்தன.
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படுவதற்கு முந்திய தினம் கூட சிரமத்துடன் அவர் கோட்டைக்கு வந்து ஒரு மத்திய அமைச்சரைச் சந்தித்துவிட்டுச் சென்றார். பிரதமர் முதற்கொண்டு முக்கியமான சிலருடைய கண்காணிப்பு தொடர்ந்து இருந்து கொண்டிருந்தது.
இயல்பாகவே தன்னுடைய உடல் நலம் குறித்து வெளியே தெரிவதை விரும்பாத பல பிரபலங்களைப் போலவே தான் ஜெயலலிதாவும் இருந்திருக்கிறார். அதனாலேயே பலர் மருத்துவமனைக்கு வந்த போதும், படுக்கையில் நோயாளியாக இருந்த நிலையில் அவர் பார்க்க விரும்பவில்லை.
சிலரைச் சந்திக்க சம்மதம் தெரிவித்தும், அந்தச் சந்திப்புகள் குறிப்பிட்ட நேரத்தில் நடக்கவில்லை என்பது மருத்துவமனையில் இருந்த சிலருக்கு மட்டுமே தெரியும்.
இன்னும் ஆறுமுகசாமி ஆணையம் தன்னுடைய பணியைச் செய்து முடிக்காத நிலையில், தாய் இணைய இதழில் சென்ற ஆண்டு வெளி வந்த கட்டுரையை மறுபடியும் உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறோம்.
***
முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மறைந்து சில ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் அவருடைய மரணம் குறித்த சந்தேகங்கள் தொடர்ந்து பொதுவெளியில் அடிக்கடி கிளப்பப்படுகின்றன. அரசியலோடு இணைத்துப் பேசப்படுகின்றன. ஆணையம் அமைத்து அதற்காகவே தனி விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
பிரபலமான பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், வெளியில் அதைக் காட்டிக் கொள்வதில்லை. காரணம், தன்னைப் பற்றிப் பொதுவெளியில் உருவாகியிருக்கிற பிம்பம் கலைந்துவிடக் கூடாது என்கிற உணர்வு தான். அதற்கு ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல.
மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட அவர் பால்யப் பருவத்திலிருந்தே உணவு உண்பதில் விசேஷ ஈடுபாடு காட்டியிருக்கிறார். இனிப்புகளை உண்பதில் அவர் காட்டிய ஆர்வம் பலருக்குத் தெரியும். சர்க்கரை நோயினால் பாதிப்பு அதிகரித்த நிலையிலும் அவர் அந்த ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை என்பதை அவருடன் நெருங்கிப் பழகிய பலரும் சொல்லியிருக்கிறார்கள்.
சென்னையில் குறிப்பிட்ட ஹோட்டலில் தயாரிக்கப்படும் அல்வாவை விரும்பிச் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டியிருக்கிறார். வெளிநாட்டிலிருந்து டின்னில் வரும் இனிப்பு கலந்த பாப்கார்ன் இவருக்கு மிகவும் பிடித்தமான நொறுக்குத் தீனி.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோதும் மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறித் தனக்கான டயட்டைத் தானே தீர்மானிக்கிறவராக அவர் இருந்திருக்கிறார்.
இனிப்பை உண்பதால் வரும் பக்க விளைவுகளைப் பற்றி அவருக்குத் தெரியாமல் இல்லை.
இருந்தும் பழக்கத்தினாலும், ஆர்வத்தினாலும் தன்னுடைய உடல்நலத்தில் போதுமான அக்கறை காட்டவில்லை என்பதையும் அவருடன் பழகியவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளியாக இருந்தாலும், அவர் அங்கு நோயாளியாகத் தன்னை நினைக்காமல், முதல்வருக்கான அதிகாரத்துடனே இருந்ததால் அவரிடம் மீறிப் பேச முடியாத இயலாமையையும் தெரிவிக்கிறார்கள் அவருடன் பழகியவர்கள்.
மருத்துவமனையில் இருந்தபோது பெரும்பாலும் நைட்டி பாணியிலான உடையுடன் எந்த ஒப்பனைகளும் இல்லாமல் இருந்ததால் வெளிநபர்கள் தன்னை அந்தக் கோலத்தில் பார்ப்பதைத் தவிர்த்திருக்கிறார். எப்போதும் மருத்துவமனையை விட்டு போயஸ் கார்டனுக்குச் செல்வதில் குழந்தைத்தனமான ஆர்வத்துடன் இருந்திருக்கிறார்.
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டபோது இருந்ததை விட அவருடைய இறுதி நாட்களில் வெகுவாகக் குறைந்திருக்கிறது அவருடைய எடை. அதுவே அவரைப் பற்றிய வதந்திகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது.
அவருடைய சிகிச்சையைப் பற்றிய சாதாரண விபரங்கள் கூட வெளிவருவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்கிற காரணத்தாலேயே அவரைப் பற்றிய உண்மையான விபரங்களை வெளியில் தெரிவிக்க முடியாத சிக்கலான நிலை அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் இருந்திருக்கிறது.
எம்.ஜி.ஆருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அவருக்கான சிகிச்சை முறைகள் பற்றி, வெளிநாட்டில் நடந்த அறுவைச் சிகிச்சை பற்றிய செய்திகளும், புகைப்படங்களும், காணொலிக் காட்சிகளும் வெளியாயின. அவருடைய குடும்பத்தினரும் அதற்கு ஒத்துழைத்தார்கள்.
அதனால் பெரிய அளவில் அவரைப் பற்றிய சந்தேகங்கள் அப்போது எழவில்லை.
ஆனால் ஜெயலலிதா விஷயத்தில் நடந்ததோ நேர் எதிர்.
அதனால் தான் இயல்பான மரணமாக மருத்துவர்கள் மற்றும் நெருங்கியவர்கள் தரப்பில் சொல்லப்பட்டாலும், உரிய காலத்தில் உரிய செய்திகள் வெளிவரமுடியாத மௌனம் வேறு கோணங்களில் பார்க்கும்படியான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.
இந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் என்ன தான் நடந்தது?
அவருடைய உடல்நலம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்தது?
என்னென்ன சிகிச்சைகள் நடந்தன?- என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
கடந்த இருபது வருடங்களாகவே இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருக்கிறார் ஜெயலலிதா. கூடவே வெர்டிகோ நோயினாலும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தார். அதோடு இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட அவஸ்தைகளும் அவருக்கு இருந்தன.
சுவாசம், செரிமானக் கோளாறுகள், தைராய்டு சிக்கலுடன் நரம்பு தொடர்பான பிரச்சனைகளாலும் அவதிப்பட்டிருக்கிறார்.
எண்டோ கார்டியாடிஸ் நோய் எனப்படும் நோய்த்தொற்றால், இதயத்தில் ஏற்பட்ட தொற்று கிருமிகள் இரத்த ஓட்டத்தின் மூலம் இதயம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘டையஸ்டாலிக் டைஸ்பங்ஷன்’ (Diastolic dysfunction) நோய் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு இதயத் துடிப்பில் சிக்கல் உருவாகியிருக்கிறது. இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தமும் தடைபட்டுள்ளது.
இதேபோல் ‘மைட்ரல் மால்பங்ஷன்’ (Mitral malfunction) காரணமாக இடது வெண்டரிக்கிளிலிருந்து ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தக்கூடிய மைட்ரல் வால்வு (Mitral valve) எனப்படும் ரத்தக் குழாயில் பூஞ்சைக் காளான்கள் பெருகி ரத்த ஓட்டம் தடைபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென போயஸ் கார்டன் வீட்டில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மயக்க நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அப்போது அவரது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 88 ஆகவும், ரத்த அழுத்தம் 140/70 ஆகவும் இருந்தது. அவரது நுரையீரல் திரவம் நிரம்பி வீங்கிய நிலையில் இருந்திருக்கிறது. மேலும் அவருக்கு சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டதுடன் ரத்த அணுக்கள் உயர்ந்து 17690 என்ற அளவிலும் இருந்தன.
தொடர்ந்து இரண்டு மாதங்களாக அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா இருந்தபோது பதினெட்டு பேரைக் கொண்ட மருத்துவக் குழு தவிர, எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து ஏழு மருத்துவர்கள், கே.எம்.செரியன் மற்றும் ரிச்சார்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் பனிரெண்டு பேர் என்று பெரிய மருத்துவக்குழு சிகிச்சை அளித்தது.
இன்னும் மும்பையிலிலுள்ள டாடா மெமோரியல் மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி மருத்துவமனை, இந்துஜா மருத்துவமனை மருத்துவர்களும், அமெரிக்க மருத்துவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளிலிருந்து பல மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் என எண்ணற்ற மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நவம்பர் 19-ம் தேதியன்று அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் 112 எம்.ஜி.யாக இருந்த சர்க்கரை அளவு டிசம்பர் ஒன்றாம் தேதி 440 எம்.ஜி.யாக உயர்ந்தது.
தொடர்ந்து கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நோய்க் கிருமிகளும் அதிவேகமாக வளர்ந்திருப்பது தெரியவந்தது. டிசம்பர்-2-ம் தேதி வரை அதே அளவில் நீடித்ததாக அப்போலோ மருத்துவனை நிர்வாகம் தெரிவித்தது.
75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 3-ம் தேதி அதிக சளி காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதால், செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் 4-ம் தேதி கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்று அவருடைய உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டதாக அப்போலா மருத்துவமனை கூறியது.
ஜெ.வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்த நிலையில், அவரது மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துமனை ஆவணப்படி, ஜெ.வுக்கு அப்பொழுதே இதய ஆப்ரேஷன் செய்தால் நல்லது என டாக்டர் குழு சொல்லியிருக்கிறது.
ஜெ.வுக்கு நெருக்கமான இதய நோய் நிபுணர் டாக்டர்.சாமீன் சர்மா அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்யலாம் என்றிருக்கிறார்.
அப்போலோ மருத்துமனையும் அதற்கு ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், டாக்டர் ரிச்சர்ட் பீலே அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று கூறியதால் அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டதாக தெரிவித்தது அப்பல்லோ.
அறுவை சிகிச்சை வேண்டாம் என முடிவு செய்ததற்கான காரணத்தையும், ஜெயலலிதா சிகிச்சையை கண்காணிக்கும் ஒரு குழுவின் பகுதியாக இருந்த அனைத்திந்திய மருத்துவக் கழகத்தின் நிதிஷ் நாயக் போன்ற நிபுணர்களால் முடிவெடுக்கப்பட்டதற்கான காரணத்தையும் ஆணையத்திடம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 147 சாட்சிகளை விசாரித்திருக்கிற ஆறுமுகசாமி ஆணையம் உரிய ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இறுதிக் கெடுவை விதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
– ஆர்.அலெக்ஸ்