தமிழ் சினிமாவின் முதல் முத்தக் காட்சி!

சினிமாவில், இப்போது காதல் காட்சிகளை இஷ்டத்துக்கு எடுக்கிறார்கள். மலரினும் மெல்லிய காதலை, வன்முறை காதலாகக் காட்டத் தொடங்கி வருடங்களாகி விட்டது.

படுக்கையறைக் காட்சிகள் கூட இன்னும் அதிக நெருக்கத்துக்குச் சென்றுவிட்டன. லிப்-லாக் காட்சிகள் சர்வ சாதாரணமாகக் காட்டப்படுகின்றன.

ஆனால், சினிமா தொடங்கிய காலகட்டத்தில் முதன் முதலாக முத்தக் காட்சியைப் படமாக்க அந்த படக்குழு எவ்வளவு யோசித்திருக்கும்?

எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஆர்.சந்தானலட்சுமி, பி.வி.ரெங்காச்சாரி, செருகளத்தூர் சாமா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உட்பட பலர் நடித்த படம் ’அம்பிகாபதி’.

இதை அமெரிக்காவைச் சேர்ந்த எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கினார். சேலம் சங்கர் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு பாபநாசம் சிவன் இசை அமைத்து, பாடல்கள் எழுதினார்.

பாகவதரின் பாடல்களுக்காகவே இந்தப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது என்று சொல்வார்கள்.

அழகான காதல் கதைதான். குலோத்துங்கச் சோழனின் மகள் அமராவதியை காதலிக்கிறார், கம்பர் மகன் அம்பிகாவதி. இவர்கள் காதல் என்னவாகிறது என்பதுதான் படம்.

அந்தக் காலகட்டத்தில் ஷேக்ஸ்பியரின் ’ரோமியோ ஜூலியட்’ ஆங்கிலத்தில் திரைப்படமாக வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்தது.

அதே போல உருக்கமான காதல் கதை என்பதை, எல்லீஸ் ஆர்.டங்கன் புரிந்துகொண்டார். அதற்கேற்றார் போல காட்சிகளை ஷுட் செய்தார். படத்துக்கு வசனம் இளங்கோவன். அப்போது பிறமொழிக் கலப்போடு மணிப்பிரவாள நடையில்தான் சினிமா வசனங்கள் இடம்பெற்று வந்தன.

ஆனால், இளங்கோவன் அதை மாற்றி அழகு தமிழில் இனிமையான வசனங்களை இடம் பெற வைத்தார். இதற்குப் பிறகுதான் சினிமா வசனங்களின் டிரெண்ட் மாறியது.

இந்தப் படத்தின் காதல் காட்சிகள் அந்தக் காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டன. காதலர்கள் நெருங்கமாக நடித்தார்கள். படத்தில் முத்தக் காட்சிகளையும் துணிந்து வைத்தார் இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கன்.

அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பதால்தான் முத்தக் காட்சியை இடம்பெற செய்தார் என்று அப்போது சொன்னார்கள். தமிழ் சினிமாவில் முத்தக் காட்சி இடம்பெற்ற முதல் படம் இதுதான். படம் வெளியாகி 52 வாரங்கள் ஓடின.

பாகவதர் நடித்து சூப்பர் ஹிட்டான ’சிந்தாமணி’ படத்துக்கு பிறகு இந்தப் படமும் ஹிட்டானதால், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை பாகவதருக்குப் பெற்றுத்தர இந்தப் படமும் உதவியது.

இதே கதையை சிவாஜி, பானுமதி நடிப்பில் ’அம்பிகாபதி’ என்ற பெயரிலேயே 1957 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள்.

ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படமும் அப்போது ஹிட்டானது.

இந்தப் படத்தில், கம்பர் கேரக்டரில் நடிக்க, பழைய அம்பிகாபதியில் ஹீரோவாக நடித்த தியாகராஜ பாகவதரைக் கேட்டார், இயக்குநர் நீலகண்டன். அன்பாக மறுத்துவிட்டார் அந்த ஹீரோ.

பிறகு எம்.கே.ராதா அந்த கேரக்டரில் நடித்தார் என்பது முன்கதை.

-அலாவுதீன்

Comments (0)
Add Comment