– அரசு பதில் தர உயர்நீதிமன்றம் அவகாசம்
கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் எடுப்பதைத் தடுக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கவும், ஏற்றுமதி செய்யவும் தடை விதித்தது.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ, வழக்கறிஞர் வி.சுரேஷ் நியமிக்கப்பட்டார். அவரும், நீதிமன்றத்துக்கு அறிக்கை அளித்தார்.
அதில், கார்னட், இலுமினேட் உள்ளிட்ட தாது மணல் ஏராளமாக எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் கணிசமான அளவு, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தைச் சேர்த்து, பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. நிறுவனங்கள் தரப்பில் பதில் அளிக்கவும் அனுமதிக்கப்பட்டது.
தென் கடலோர மாவட்டங்களில், சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததாக கூறுவதைக் கண்காணிக்க, அரசு தரப்பில் எடுத்த நடவடிக்கையைத் தெரிவிக்கவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்திருந்தால், அதுகுறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி,
”நிறுவனங்கள் சிலவற்றின் சார்பிலும், மத்திய அரசு சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதன்பின், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்கிறோம்” என்று தெரிவித்தார்.
மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் குணசேகர் ஆஜராகி, இவ்வழக்கில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக இருப்பதாகவும், பதில் மனு தாக்கல் செய்ய, இரண்டு வாரம் அவகாசம் அளிக்கவும் கோரினார்.
இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்யாத நிறுவனங்கள், நான்கு வாரங்களில் தாக்கல் செய்யவும், அதன்பின் மூன்று வாரங்களில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை ஏழு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
இந்த வழக்கு ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால், மேற்கொண்டு அவகாசம் வழங்க முடியாது என்றும், முதல் பெஞ்ச் திட்டவட்டமாக தெரிவித்தது.