ஜெயலலிதாவின் நடிப்பு ‘ஏ’ ஒன்!

இயக்குநர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ (09-05-1965)  பட விமர்சனம்

*

மனோதத்துவ நிபுணர் ஒருவர், சித்தப்பிரமை பிடித்த ஓர் இளம் விதவைக்கு மருத்துவம் செய்கிறார். பின்னர், தெளிவடைந்த அந்த இளம் விதவையால் காதலிக்கப்படுகிறார்.

ஆனால், ஏற்கெனவே அவருக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்பதை அறிந்து, தனது காதலைத் துறந்து, வெண்ணிற ஆடை அணிகிறாள் அந்தப் பெண்.
கதை: ஸ்ரீதர்.

*****

சந்தர்-சேகர் உரையாடல்:

சந்தர்: இவ்வளவு சின்னக் கதையை வைத்துக் கொண்டு படம் எடுத்திருக்கும் முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும் சேகர்.

சேகர்: கண்டிப்பாக! இன்டர்வெல் வரையிலும் ஏதோ ஆங்கிலப் படம் பார்ப்பது போலத்தான் இருந்தது.

சந்தர்: ஜெயலலிதாவின் நடிப்பு ஏ-ஒன்!

சேகர்: யூ ஆர் ரைட்! ஆனால், அந்த அளவு நடிப்பை ஸ்ரீகாந்த்திடமிருந்தோ, நிர்மலாவிடமிருந்தோ எதிர்பார்க்க முடியவில்லை. இருவருமே சுமார்தான்!

சந்தர்: பாட்டுக்கள் எப்படி?

சேகர்: ‘நீ என்பதென்ன…’ என்ற பாட்டும், ‘கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல…’ என்ற பாட்டும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்றபடி, வேறு எந்த டியூனும் வெளியில் வந்த பிறகு ‘ஹம்’ பண்ணும்படியாக இல்லை.

சந்தர்: இயற்கைக் காட்சிகளையெல்லாம் கண்ணுக்குக் குளுமையா ரொம்ப அருமையா எடுத்திருக்காங்க, இல்லையா?

சேகர்: ஆமாம். ஆனால், கதைதான் சில இடங்களிலே இயற்கையா இல்லாம இருக்கு. அதிலும் கடைசியிலே, ஷோபா வெண்ணிற ஆடை உடுத்திக்கொண்டு வந்து, ‘இதுதான் என் முடிவு. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்’ என்பது போல் பேசியது சரியாகப்படவில்லை.

சந்தர்: நீ சொல்வது சரிதான்! ஒரு சஸ்பென்ஸூக்காகச் செய்திருக்கிறார்கள். எனக்கு அது சஸ்பென்ஸாகவே இல்லை!

சேகர்: ஒரு சில குறைகள் இருந்தாலும், தமிழ்ப் படங்களில் ஒரு புது முயற்சி வெண்ணிற ஆடை. அதற்காக அதைப் பாராட்டத்தான் வேண்டும்.

– நன்றி : ஆனந்த விகடன்-1965, மே மாதம்

Comments (0)
Add Comment