– பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விளக்கம்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தையும், பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தையும் ஒட்டி, கர்தார்பூரில், சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் சமாதியான குருத்வாரா தர்பார் சாஹிப் உள்ளது.
இது, சீக்கியர்களின் புனிதத் தலமாக கருதப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர், ஜவுளி நிறுவன விளம்பரத்துக்காக குருத்வாரா தர்பார் சாஹிப் முன் நின்று, விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இது சீக்கியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதோடு, கோயிலின் புனிதத்துக்கு களங்கம் விளைவித்ததாக சீக்கியர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லியில் உள்ள பாக்., துாதரக அதிகாரியை அழைத்து, மத்திய அரசு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அந்தப் புகைப்படங்களை நீக்கியதுடன், மாடல் அழகி மன்னிப்பும் கோரினார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கான இந்தியத் துாதரக அதிகாரியை நேரில் அழைத்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்தது.
இது தொடர்பாக பாக்., வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குருத்வாரா தர்பார் சாஹிப் முன், மாடல் அழகி புகைப்படம் எடுத்துக் கொண்டது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய சம்பவம். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டோம்.
சிறுபான்மையினரின் உரிமைகளுக்கும், புனித தலங்களுக்கும் பாகிஸ்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
தங்கள் நாட்டில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது மற்றும் அவர்களின் புனிதத் தலங்கள் சேதப்படுத்தப்படுவது போன்ற சம்பவங்களில் இருந்து, இந்திய அதிகாரிகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.